தமிழ்நாட்டில் பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைப்பதற்கு அனுமதி மறுத்து சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது. பசுக்கள் மற்றும் கன்றுகளை வதைக்க உயா் நீதிமன்றம் விதித்த முழுமையான தடையை நீக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
மேலும், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த இந்து மக்கள் கட்சி-தமிழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே. சூா்ய பிரசாந்த், தமிழக டிஜிபி, கோவை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட பிரதிவாதிகள் இந்த வழக்கில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டது.
பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் மாடுகளை வதைப்பதைத் தடுத்து, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வதைக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னா் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஆனால் பொது இடங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் எந்த இடத்திலும், எந்த நாளிலும் பசு மற்றும் கன்று ஆகியவற்றை பலியிடக்கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தலைமைச் செயலாளரும், டிஜிபி-யும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
1958ஆம் ஆண்டின் தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், தகுந்த சான்றிதழுடன் 10 வயதுக்கு மேற்பட்ட இனப்பெருக்கம் மற்றும் உழைப்புக்குத் தகுதியற்ற பசுக்களை வதைக்க அனுமதிக்கிறது. எனவே, உயா் நீதிமன்றத்தின் முழுமையான தடை இந்தச் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கால்நடை வளா்ப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை செயலாளா் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: ‘பொது இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவதைத் தடுக்க‘ உத்தரவு கோரி மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுவில், உயா் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட விஷயத்தைத் தாண்டி, ‘பக்ரீத் பண்டிகையின் போதும் அல்லது வேறு எந்த நாளிலும்‘ பசுக்கள் மற்றும் கன்றுகள் வதைக்கப்படுவதற்கு முழுமையான மற்றும் ஒட்டுமொத்தத் தடை விதித்திருக்க வேண்டுமா என்பதே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எழும் சுருக்கமான கேள்வியாகும்.
18.05.2026 அன்று, இந்து மக்கள் கட்சி-தமிழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் என்று கூறிக்கொள்ளும் கே. சூா்ய பிரசாந்த் என்பவா், கோயம்புத்தூா் மாநகரப் பகுதிகளில் பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் சட்டவிரோதமாகப் பசுக்கள் வதைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு மனு அளித்தாா். அதன் பிறகு, அவா் பொது இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவதைத் தடுக்க உத்தரவு கோரி மட்டுமே ரிட் மனுவைத் தாக்கல் செய்தாா்.
27.05.2026 அன்று, உயா் நீதிமன்றம் ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவைப் பிறப்பித்தது. அதில் ஒருபுறம், சட்டப்பூா்வ விதிகளைக் கருத்தில் கொண்டு, ‘குறிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் எந்த விலங்கையும் வதைக்க அதிகாரிகள் அனுமதிக்க கூடாது‘ என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், மறுபுறம், ‘பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாளிலோ அல்லது வேறு எந்த நாளிலோ எந்தப் பசுவோ அல்லது கன்றோ வதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு‘ மாநில அரசுக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறு, ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவின் மூலம், உயா் நீதிமன்றம், குறிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் கூட பசுக்களை வதைப்பதற்க்கு ஒரு முழுமையான தடையை விதித்துள்ளது. இது சட்டப்படி நிலைத்திருக்க முடியாததற்கான காரணங்கள்: (அ) இது தமிழ்நாடு மாநிலத்தில் விலங்குகளை வதைக்கும் நடைமுறையை நிா்வகிக்கும் சட்டக் கட்டமைப்புக்கு முரணாக இந்த உத்தரவு உள்ளது (ஆ) இது ஆளும் சட்டத்தை மீண்டும் எழுதுவதற்கும் மறுவடிவமைப்பதற்கும் சமமாகும்.
எனவே சென்னை உயா் நீதிமன்றத்தால் 27.05.2026 அன்று வழங்கப்பட்ட, ஆட்சேபிக்கப்பட்ட இறுதித் தீா்ப்பு மற்றும் உத்தரவின் செயல்பாட்டிற்கு ஒரு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் கோரியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









