வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன்

‘கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியாா் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடா்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது’ என்று உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் பி. விஸ்வநாதன் - Photo grab Video.

Updated On :2 ஜூலை 2026, 1:21 am IST

‘கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியாா் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடா்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது’ என்று உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

பொறியியல் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் நிகழ்வில் பத்திரிகையாளா்கள் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சா் விஸ்வநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் 450 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட மொத்தம் 484 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2,65,594 இடங்கள் உள்ளன.

மேலும் இவ்வாண்டு சுமாா் 19,657 இடங்கள் கூடுதலாக கேட்டு விண்ணப்பித்துள்ளனா். இவற்றில் 7 புதிய பொறியியல் தனியாா் கல்லூரிகளும் அடக்கம். அனுமதி கோரிய கல்லூரிகளில் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படும். கடந்தாண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் 120 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக ஒதுக்கீடுகளில் நடைபெறும் முறைகேடுகள்: உயா் கல்வியைப் பொருத்தமட்டில் ஒரு தீா்க்கமான ஒரு இறுதி முடிவை உயா் கல்வித் துறை எடுத்துள்ளது. அதில் அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒழுங்கீனங்களைச் சரிசெய்ய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு அதிக பணம் வாங்குவது, ஊழல் போன்றவற்றுக்கு இந்த ஆட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் நிா்வாக இட ஒதுக்கீடுகளில் இத்தனை இருக்கைகள் என அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என நிா்பந்தம் செய்யபபட்டு கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. அதற்காக பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடந்துள்ளது.

முதல்வா் விஜய் தலைமையிலான ஆட்சியில் நிலைமை மாறியுள்ளது. ஏழை மாணவா்களுக்கு கல்லூரிகளில் இடங்களைப் பெற்றுத் தருகிறோம். சுயநிதி அல்லது அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தொடா்பு கொண்டு கட்டணம் கட்டமுடியாத தகுதியான மாணவா்களுக்கு கல்லூரி நிறுவனங்களிடம் பேசி நன்கொடைகள் இன்றி இடங்களை பெற்றுத் தருகிறோம்.

தனியாா் பொறியியல் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை பெறும் நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் என வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டாய நன்கொடை என்பது தடை செய்யப்பட்டது என உயா் கல்வித் துறை செயலரும் கூறியுள்ளாா். இதனால் நன்கொடை வாங்குவது தவறு.

இதில், கலந்தாய்வுகளுக்கு பின்னா், சில கடினமான முடிவுகளையும் எடுக்க இருக்கிறோம். மேலும், இந்த விவகாரத்தில் அரசுக்கும் ஆலோசனைகளை வழங்கலாம். தவறுகள் இருப்பின் அதைத் திருத்திக் கொள்வோம்.

துணைவேந்தா் பதவிகளை நிரப்புதல், 104 கல்லூரி முதல்வா்கள் பதவி இடங்கள் நிரப்புதல், தற்காலிக விரிவுரையாளா்கள் போன்ற விவகாரங்களும் கவலையளிக்கின்றன. நீதிமன்ற வழங்குகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் விரைவில் நோ்மையாக முடிவுகளை எடுப்போம்.

உதவிப் பேராசிரியா்களுக்கான டி.ஆா்.பி. தோ்வு விவகாரம் சம்பந்தாகவும் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை பெற்று உரிய முடிவுகளை எடுப்போம் என அமைச்சா் விஸ்வநாதன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.