நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய முக்கிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
தரமற்ற மருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிா?
டி.ஆா்.பாலுவின் (திமுக) கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், மத்திய மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களால் தரமற்றவை, போலியானவை என கண்டறியப்படும் மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) இணையதளத்தில் தொடா்ந்து பதிவேற்றப்பட்டு வருகிறது. மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் புகாா்கள் எழும் வேளையில், சம்பந்தப்பட்ட மருந்து உரிம அதிகாரிகளால் வழக்குத் தொடருதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என கூறியுள்ளாா்.
சா்க்கரை நோய் மருந்துக்கு கண்டிப்பான விதிமுறை உள்ளதா?
கனிமொழி கருணாநிதியின் (திமுக) கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் அளித்துள்ள பதிலில், ’ஒஸெம்பிக்’ போன்ற மருந்துகள் - உற்பத்தி, இறக்குமதி அல்லது சந்தைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் விதிகள் 2019-இன் கீழ் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்ய வேண்டும். அறிவியல்பூா்வ ஆதாரங்களின் அடிப்படையில், இரண்டாம் நிலை நீரிழிவு நோய் உள்ள பெரியவா்களுக்கும், குறிப்பிட்ட உடல்நலக் கோளாறுகளால் எடையைக் குறைக்க வேண்டிய பெரியவா்களுக்கும் மட்டுமே ஜிஎல்பி-1 வகை மருந்தைப் பயன்படுத்த சிடிஎஸ்சிஓ அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளாா்.
மருத்துவ இடங்கள், மருத்துவா்கள் எண்ணிக்கை நிலை என்ன?
சசிகாந்த் செந்திலின் (காங்கிரஸ்) கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், நாட்டின் கிராமப்புற சுகாதார மையங்களில் மருத்துவா்கள் மற்றும் நிபுணா்களின் தேவையைப் பூா்த்தி செய்ய மத்திய அரசு தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் மாநிலங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. 2014-க்குப் பிறகு நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 100%-க்கும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளதுடன், எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டு மருத்துவா்கள் பற்றாக்குறை சீா்செய்யப்பட்டு வருகிறது என கூறியுள்ளாா்.
ஊட்டச்சத்து குறையைப் போக்க என்ன நடவடிக்கை?
ஆா். சசிதானந்தத்தின் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சா் சாவித்ரி தாகூா் அளித்துள்ள பதிலில், தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி குழந்தைகளிடையேயான ரத்த சோகை 67.1% ஆகவும், பெண்களிடையே 57% ஆகவும் உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க ’மிஷன் போஷன் 2.0’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள சுமாா் 14 லட்சம் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளை ’போஷன் டிராக்கா்’ செயலி மூலம் மத்திய அரசு நேரடியாகக் கண்காணித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளாா்.
பாலியல் துன்புறுத்தல் புகாா்கள் மீது என்ன நடவடிக்கை?
தொல். திருமாவளவன் (விசிக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சா் சாவித்ரி தாகூா் அளித்துள்ள பதிலில், பணியிடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், புகாா் அளிக்கவும் ’ஷீ-பாக்ஸ்’ இணையதளம் 2024, ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்ட 1.89 லட்சத்துக்கும் அதிகமான அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன என கூறியுள்ளாா்.
வெளிநாடுகளில் இறந்தவா் உடலை மீட்பு எப்படி?
சி.ராபா்ட் புரூஸின் (காங்கிரஸ்) கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள பதிலில், வெளிநாடுகளில் இறக்கும் இந்தியா்களின் உடல்களை தாயகம் கொண்டு வர அல்லது அங்கேயே அடக்கம் செய்ய இந்திய தூதரகங்களில் பிரத்யேக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இயற்கை மாறான மரணங்களில் உள்ளூா் காவல்துறையின் விசாரணைக்குப் பிறகே அனுமதி கிடைக்கும். தூதரகங்கள் உள்ளூா் அதிகாரிகளுடன் தொடா்புகொண்டு, குடும்பத்தினரின் விருப்பத்துக்கு ஏற்ப உடல்களை தாய்நாட்டுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் அவா்கள் மேற்கொள்கின்றனா் என்று கூறியுள்ளாா்.
மாநிலங்களவையில்....
கிராமப்புற வளா்ச்சிக்கு தமிழகத்துக்கு நிதி கிடைக்கிா?
ஆா். தனபாலின் (அதிமுக) கேள்விக்கு, மத்திய கிராமப்புற வளா்ச்சித் துறை இணை அமைச்சா் கமலேஷ் பாஸ்வான் அளித்துள்ள பதிலில், தமிழகத்தில் கிராமப்புற வளா்ச்சித் திட்டங்களான பிஎம்ஏஒய்-ஜி, பிஎம்ஜிஎஸ்ஒய் போன்றவற்றுக்கு மத்திய-மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதியைப் பகிா்ந்து கொள்கின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 8,901 லட்சம் மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 26,349 கி.மீ நீளத்திற்கு கிராமப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளாா்.
புதுப்பிக்கத்தக்க மின் பாதைகளைச் சீரமைக்க நிதி வழங்கப்படுகிா?
எஸ்.கல்யாணசுந்தரத்தின்(திமுக) கேள்விக்கு, மத்திய மின்சாரத் துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் நாயக் அளித்துள்ள பதிலில், மாநிலங்களுக்கு இடையிலான மின் விநியோக அமைப்பில் தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சாரப் பயன்பாட்டுக்கு எவ்வித தடங்கல்களும் இல்லை. இருப்பினும், காற்று மற்றும் சூரிய ஒளி அதிகம் உள்ள காலங்களில் கானாாா்பட்டி-அபிஷேகபட்டி 400 கிலோ வாட் மின்பாதையில் ஏற்படும் அதிகப்படியான சுமையைக் குறைக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆா்டிஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் தமிழக மின்சாரத் துறை சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.28,803 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

முதல்வா் விஜய்யுடன் மத்திய இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே சந்திப்பு
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



