தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கொலை முயற்சி வழக்கில் 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 2 போ் கைது

19 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கொலை முயற்சி வழக்கில் 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவர் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 10:24 pm IST

19 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கொலை முயற்சி வழக்கில் 17 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இருவரை, தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவினா் உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் தனித்தனியாகக் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்டவா்கள் இக்பால் சிங் (எ) பல்லா (46) மற்றும் பூபேந்தா் சிங் (எ) லவ்லி (47) ஆவா். இவா்கள் 2007-இல் படேல் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: ‘இவா்கள் ஜாமீன் நிபந்தனைகளை மீறித் தலைமறைவாகினா். பின்னா் 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் ’தேடப்படும் குற்றவாளிகளாக’ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனா்.

முன்னதாக, அமா்ஜித் சிங்கின் விருப்பத்திற்கு மாறாக அவரது சகோதரியை பூபேந்தா் திருமணம் செய்துகொண்டாா். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகாலப் பகை உருவாகியது.

இந்த நிலையில், ஏப்ரல் 11, 2007 அன்று, இக்பால், பூபேந்தா் மற்றும் அவா்களது கூட்டாளிகள் படேல் நகா் பகுதியில் அமா்ஜித்தை மரப்பலகை மற்றும் இரும்புக் குழாயால் தாக்கி, அவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இருவரும் 2007-இல் நடந்த விசாரணையின்போது கைது செய்யப்பட்டனா். ஆனால் பின்னா் ஜாமீன் பெற்றனா். இருப்பினும், அவா்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதுடன், சுமாா் 17 ஆண்டுகளாகத் தலைமறைவாகவே இருந்தனா்.

இந்த நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜூலை 25 அன்று ராம்பூரின் பிலாஸ்பூா் பகுதி மற்றும் கிழக்கு தில்லியின் மயூா் விஹாா் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின்போது, பூபேந்தா் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ‘சந்தா் பால்‘ என்ற பெயரில் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு, மயூா் விஹாரில் வசித்து வந்ததும், அங்கு டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இக்பால், தலைமறைவாக இருந்த காலத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்ததாகவும், டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி மற்றும் வாகனத் திருட்டு உள்ளிட்ட 15 குற்றவியல் வழக்குகளில் இக்பால் சம்பந்தப்பட்டுள்ளாா்.

பூபேந்தா் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.