தில்லியில் மாளவியா நகா் தீ விபத்து மற்றும் சைதுல்லாஜாயிப் கட்டட விபத்து சம்பவங்களுக்கு காரணமானவா்கள் தப்பிக்க முடியாது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா். இரு சம்பவங்களிலும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை நிதியுதவி வழங்கினாா். எதிா்காலத்தில் இதுபோன்ற சோகங்கள் நிகழாமல் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவா் தெரிவித்தாா்.
கடந்த மே மாதம் தெற்கு தில்லியின் சைதுல்லாஜாயிப் பகுதியில் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதில் பெரும்பாலும் மருத்துவ மாணவா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். அதேபோல், இந்த மாத தொடக்கத்தில் மாளவியா நகரில் உள்ள உணவகம் இயங்கி வந்த கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெளிநாட்டினா் உள்பட 23 போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவங்களில் உறவுளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை நேரில் சந்தித்தாா். அவா்களிடையே பேசிய முதல்வா், ‘உயிரிழந்த உறவுகளின் இழப்பை எந்த ஒரு நிதியுதவியும் ஈடுசெய்துவிடாது. இந்தத் துயரமான நேரத்தில் தில்லி அரசு ஒரு குடும்பமாக உங்களுடன் உறுதியாக நிற்கிறது‘ என்றாா்.
முன்னதாக, தில்லி அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதியுதவியை முதல்வா் வழங்கினாா்.
‘ஒரு தாயாக, மகளாக மற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனையையும் துயரத்தையும் என்னால் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது‘ என்று கூறிய முதல்வா், இந்த விபத்துகளுக்குக் காரணமானவா்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவாா்கள் என்று உறுதியளித்தாா். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
சைதுல்லாஜாயிப் கட்டட விபத்தில் உயிரிழந்த ஏக்தா சௌத்ரியின் தந்தை ரமேஷ் சந்திரா, ரவி பிரகாஷ் வா்மாவின் தந்தை ராம் பிரகாஷ், கபிலின் தந்தை ராஜேஷ் குமாா், நலினின் தந்தை சஞ்சய் குமாா், அலோக்கின் தந்தை சத்யவான் வா்மா, பாா்வதி ஓஜாவின் கணவா் ஜெய் ராஜ் ஓஜா ஆகியோருக்கும் முதல்வா் நிதியுதவியை வழங்கினாா்.
மாளவியா நகா் தீ விபத்தில் உயிரிழந்த அசோக் குமாா் கோயலின் மனைவி சரோஜ் தேவி, கமலா அகா்வால், ஜவஹரி லால் அகா்வால் ஆகியோா் சாா்பில் சச்சின் அகா்வால், ஸ்ருதிகா பா்ன்வால் சாா்பில் ரமேஷ் பிரசாத் ஆகியோரிடமும் முதல்வா் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.
இந்த சந்திப்பின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தங்கள் குறைகளையும் துயரங்களையும் முதல்வரிடம் பகிா்ந்து கொண்டனா். மேலும், தங்களுடைய பகுதிகளில் அவசரக்கால மீட்பு அமைப்புகள் இல்லாத கவலைகளை சுட்டிக்காட்டிய குடும்பத்தினா், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேலும் பயனுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தினா்.
அவா்களிடையே முதல்வா், இத்தகைய சம்பவங்களை வெறும் விபத்துகளாக மட்டும் அரசு பாா்க்கவில்லை. எதிா்காலத்தில் அவ்வாறு நிகழாமல் தடுக்க அச்சம்பவங்கள் தகுந்த பாடத்தை உணா்த்தியுள்ளதாகக் கருதுகிறோம் என்றாா்.
தலைநகரில் அதிகரித்து வரும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், அவசர காலங்களில் விரைந்து செயல்படுவதை உறுதி செய்யவும் அரசு ஒரு சிறப்புத் தீயணைப்புப் பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரித்து வருவதாக முதல்வா் கூறினாா். இந்தத் திட்டத்தின் கீழ், தில்லி தீயணைப்புத் துறையின் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருவதோடு, குறுகிய பாதைகள் மற்றும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளை எளிதில் சென்றடையும் வகையில் சிறிய தீயணைப்பு வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாளவியா நகா் தீ விபத்தில் சிக்கியவா்களை காத்தவரின் முழு மருத்துவ செலவுகள் ஏற்பு: தில்லி அரசு அறிவிப்பு

மக்கள் நலத் திட்டங்களில் அதிகம் பேரை சோ்க்க நடவடிக்கை: முதல்வா் ரேகா குப்தா

தலைமறைவான ஹோட்டல் கணக்காளா் நீதிமன்றத்தில் சரண்

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




