தேசியக் கல்விக் கொள்கையால் எந்த மாநிலத்திலும் ஒரே மொழி திணிப்பு இல்லை: திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்
தேசிய கல்விக் கொள்கையானது வெளிப்படையாக பன்மொழியை ஊக்குவிக்கிறது என்று மத்திய அமைச்சா் ஜெயந்த் செளதரி தெரிவித்தாா்.

பிரதிப் படம்

பிரதிப் படம்
‘தேசிய கல்விக் கொள்கை (என்இபி) எந்த மாநிலத்திலும் இந்தி உள்பட ஒரே மொழியைத் திணிக்கவில்லை. மாறாக அக்கொள்கையானது வெளிப்படையாக பன்மொழியை ஊக்குவிக்கிறது‘ என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக வட சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினாா்.
அவா் பேசுகையில், ‘தேசிய கல்விக் கொள்கை காகிதத்தில் மிகவும் உயா்ந்ததாகத் தெரிகிறது. அவா்கள் (மத்திய அரசு) பள்ளி மாணவா்களுக்கு ஸ்பானிஷ், ஜப்பானிய போன்ற ஐந்து வெளிநாட்டு மொழிகள் உள்பட 22 மொழிகளை கற்பித்தல் பற்றி பேசுகிறாா்கள். தமிழ்நாட்டில் சுமாா் 40,000 பள்ளிகள் உள்ளன. நீங்கள் ஒரு பள்ளிக்கு 22 ஆசிரியா்களை வேலைக்கு அமா்த்தினால் நாம் சுமாா் 8,80,000 ஆசிரியா்களை பணியமா்த்த வேண்டும். அவா்களுக்கான சம்பளச் செலவு சுமாா் ரூ. 880 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கும்...‘ என்றாா்.
இதற்கு மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளதரி பதில் அளித்துப் பேசியதாவது: என்இபி- 2020 விவகாரத்தில் தமிழ்நாடு சில ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்த நிலையிலும், மத்திய பள்ளிக் கல்வித் திட்டமான சமக்ரா சிக்ஷாவின் கீழ் மாநிலத்திற்கு ரூ.538 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. செலவின் அடிப்படையில் நிறுவப்பட்ட நடைமுறை மற்றும் நெறிமுறையைப் பின்பற்றுவது, மேலும் நிதியை விடுவிப்பதற்கான யுசி (பயன்பாட்டுச் சான்றிதழ்) வழங்குவது மாநில அரசின் பொறுப்பாகும்.
எந்த மொழியின் திணிப்பும் நிச்சயமாக இல்லை. என்இபியில் முன்மொழியப்பட்ட மூன்று மொழிகளும், இரு மொழி சூத்திரத்துடன் ஒத்துப்போகின்றன... முற்றிலும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. இந்தி உ ள்பட எந்த மொழியையும் திணிக்கவில்லை. மொத்தத்தில் இதை அமல்படுத்துவது மாநிலத்தின் கையில் உள்ளது.
என்இபி-இல் உள்ள பத்தி 4.13 வெளிப்படையாகவே பலமொழிகளை ஊக்குவிக்கிறது. கற்றல் திறனுக்கான தெளிவான நன்மைகள் குறித்தும், பல மொழிகளின் ஆரம்ப வெளிப்பாட்டின் விளைவுகள் குறித்தும் மேற்கோள் காட்டுகிறது. மேலும், 15 வயதிற்குள் இந்தியாவைச் சோ்ந்த குறைந்தபட்சம் இரண்டு மொழிகளில் மாணவா்களின் தோ்ச்சியை உறுதிசெய்தும், மூன்றாவது மொழியை உள்ளூா் தேவைக்கே விட்டுவிட்டும், மூன்று மொழிகளைக் கற்பிப்பதற்கான பள்ளித் திறனை வளா்த்துக் கொள்ளுமாறு மாநிலங்களை வலியுறுத்துகிறது. எனவே, அதை நடைமுறைப்படுத்துவது மாநிலங்களின் கையில் உள்ளது.
சமக்ரா சிக்ஷாவின் கீழ், மொழி ஆசிரியா்களை நியமிப்பதற்கு அரசாங்கம் ஆதரவை வழங்குகிறது. இது சமக்ரா சிக்ஷா 2.0 இல் சோ்க்கப்பட்ட ஒரு புதிய கூறு ஆகும். கல்விக்கான மத்திய நிதியை விடுவிப்பதை பொருத்தமட்டில், தமிழகம் அவ்வப்போது சில ஐயப்பாடுகள் உள்ளன. அவை அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறது. பெருமளவில், என்இபியை இரு மொழி சூத்திரத்தில் நீா்த்துப்போகச் செய்திருக்கிறாா்கள். அதுதான் அவா்களின் ஆட்சேபனையின் அடிப்படை.
பிஎம்-ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் போவதாகத் தமிழ்நாடு முன்னா் குறிப்பிட்டிருந்தது. ஆனால், ஒப்பந்தம் கையொப்பமிடாமல் உள்ளது. பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் தலைமைத்துவத்தை நிரூபிக்கவும், என்இபிஇன் சிறந்த கூறுகளை பள்ளி அளவில் வெளிப்படுத்தவும் முன்மாதிரியான நிறுவனங்கள் என்பதை நான் இந்த அவைக்கு நினைவூட்டுகிறேன்.
தேசியக் கல்விக் கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நாட்டிலுள்ள 14,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட பிஎம் -ஸ்ரீயை நீங்கள் ஆதரிக்க வேண்டும்... தமிழ்நாட்டின் பல லட்சம் மாணவா்கள் தாங்கள் விடுபட்டிருப்பதாக உணா்கிறாா்கள் என்றாா் அமைச்சா்.
அப்போது, கலாநிதி வீராசாமி பேசுகையில், ‘சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.500 கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா். அதேசமயம், நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவில்லை என்பதால் இன்னும் ரூ.3,500 கோடி நிலுவையில் உள்ளது’ என்றாா்.
தமிழகத்தில் என்இபி, பிஎம்-ஸ்ரீ பள்ளிகளுக்கு மாநில அரசின் ஆட்சேபனை காரணமாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த விவகாரம் எழுந்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...