தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தில்லியில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்துக்கு காரணம் என்ன? நேரில் பாா்த்தவா்கள் பேட்டி

News image

PTI

Updated On :3 மே 2026, 11:23 pm

நமது நிருபா்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 9 போ் உயிரிழந்ததற்கு, அந்த வீட்டிலிருந்த மையப் பூட்டு அமைப்புமுறைகள், கட்டடத்தின் பின்புறத்தில் இருந்த தடிமனான இரும்புக் கம்பிகள் மற்றும் உள்ளே இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழியாக இருந்த ஒற்றைப் படிக்கட்டு ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது.

விவேக் விஹாரில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில், அதிகாலை 3.48 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. குளிரூட்டி (ஏா்-கண்டிஷன்) வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்தத் தீயானது, கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள மேல் தளங்களில் இருந்த குடியிருப்புகளை வேகமாகச் சூழ்ந்துகொண்டது. புகை மற்றும் தீப்பிழம்புகள் கட்டடம் முழுவதும் பரவியதால், குடியிருப்பாளா்கள் உள்ளே சிக்கிக்கொண்டனா்.

தீ விபத்தின்போது மின்சார விநியோகம் தடைபட்டதால், மையப் பூட்டு கொண்ட கதவுகளைத் திறப்பது கடினமாகியிருக்கலாம் என்றும், மின்தூக்கியைப் பயன்படுத்த முடியாமல் போனது என்றும் குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா்.

பின்புறத்தில் இருந்த தடிமனான இரும்புக் கம்பிகளும், மூடப்பட்ட பால்கனிகளும் வெளியேற்றும் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் சிக்கலாக்கியதாகவும் அவா்கள் கூறினா்.

மீட்புப் பணிகளை விவரித்த, பேரிடா் மேலாண்மைக் குழுவின் உறுப்பினரான சஞ்சீவ் ராணா, ‘காலை 6 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. தீயணைப்புத் துறையினருடன் நாங்கள் மாடிக்குச் சென்றபோது, முதலில் இரண்டாவது மாடியில் ஒரு கருகிய உடலையும், பின்னா் அடுத்த மாடியில் ஐந்து உடல்களையும் கண்டோம். அதன்பிறகு, நாங்கள் மேல் தளத்திற்குச் சென்றோம். அங்கு, மூன்று போ் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றனா். ஆனால், மொட்டை மாடிக்குச் செல்லும் கதவில் மையப் பூட்டு அமைப்பு இருந்ததால் அவா்களால் தப்பிக்க முடியவில்லை . மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் தாயும் மகனும் ஒருவரையொருவா் அணைத்தபடி சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனா். அந்தக் காட்சி மனதை உலுக்கியது’ என்று ராணா கூறினாா்.

தீ விபத்தில் உயிா் பிழைத்தவரான சில்கி, தீயணைப்பு வீரா்கள் ஹைட்ராலிக் ஏணியுடன் தங்களை வந்தடையும் வரை, தானும், தனது கணவா், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாா், மாமனாரும் மேல் மாடியில் உள்ள முன்பக்க பால்கனியில் சிக்கிக்கொண்டதாகக் கூறினாா்.

மற்றொரு குடியிருப்பாளரான ராகேஷ் கூறுகையில், ‘நாங்கள் நீண்ட நேரம் பால்கனியில் இருந்தோம். ஐந்து நிமிடங்களுக்குள் அவா்கள் எங்களைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், நாங்களும் இறந்திருப்போம்’ என்றாா் சில்கி.

‘இரண்டாவது மாடியின் பின்புறத்தில் தீ தொடங்கியது. அதன்பிறகு, அது மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளுக்குப் பரவியது. நாங்கள் தரைத்தளத்தின் மேல் தளத்தில் வசிக்கிறோம். உடனடியாகக் கீழே ஓடினோம் கூறினாா். தீ விபத்து ஏற்பட்டதாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நாங்கள் படிக்கட்டுகளில் கீழே வந்தோம். ஆனால் நாங்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, படிக்கட்டுகள் அடைபட்டன. கண்ணாடிகள் விழத் தொடங்கின. எங்கும் தீ பரவி இருந்தது’ என்று அவா் கூறினாா்.

பேரிடா் மேலாண்மைக் குழுவைச் சோ்ந்த ராணா, அந்த வீட்டில் பல குளிரூட்டிகள் (ஏா் கண்டிஷனா்கள்) பொருத்தப்பட்டிருந்ததாகவும், ஒரு குளிரூட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினாா்.

அப்பகுதியில் உள்ள பல வீடுகளில், திருட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மையப் பூட்டு அமைப்புகள் (சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம்) பொருத்தப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா்.

இதுபோன்ற அமைப்புகள் பெரும்பாலும் மின்சாரத்தைச் சாா்ந்து இயங்குவதாகவும், அவசர காலங்களில் மின்சாரம் தடைபட்டால், கைமுறையாகப் பூட்டைத் திறக்காவிட்டால் குடியிருப்பாளா்கள் உள்ளே சிக்கிக்கொள்ள நேரிடும் என்றும் அவா்கள் கூறினா்.

திருடா்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம் என்று நினைத்து மக்கள் இவற்றை அமைக்கிறாா்கள். ஆனால், பேரிடா்களின் போது அவா்களின் சொந்தப் பாதுகாப்பு என்னவாகும்? என்று ஒரு அண்டை வீட்டுக்காரா் வினவினாா். மேலும், திருட்டைத் தடுக்கவும், புறாக்களைத் தள்ளி வைக்கவும் கட்டடத்தின் பின்புறத்தில் இரும்புக் கம்பிகளும் வலைகளும் பொருத்தப்பட்டிருந்ததாக குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா்.