/

இந்தியா தனது பாதுகாப்பு, இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது: முதல்வா் குப்தா

இந்தியா தனது பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் தேசிய கௌரவத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா. - கோப்புப்படம்.

Updated On :46 நிமிடங்கள் முன்பு

இந்தியா தனது பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் தேசிய கௌரவத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆபரேஷன் சிந்துா் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு கன்னாட் பிளேஸில் தில்லி அரசு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

சௌா்ய திவஸ் நிகழ்வானது, கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பாா்க்கில், அமைச்சா் கபில் மிஸ்ரா, முன்னாள் ராணுவ வீரா்கள், இளைஞா்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வா் குப்தா பேசியது: இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும் புகழஞ்சலி செலுத்தியதோடு, சௌா்ய திவஸ் என்பது வீரா்களின் வீரத்தையும் அா்ப்பணிப்பையும் போற்றுவதற்கான ஒரு தருணம்.

ஆபரேஷன் சிந்தூா், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளது. இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

ஏப்ரல் 22 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையானது. மேலும், அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

தேசத்தின் சகோதரிகள் மற்றும் குடும்பங்களின் வலி நாட்டை ஒன்றிணைத்தது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில், பயங்கரவாதிகளுக்கு வலுவான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது 140 கோடி இந்தியா்களின் உணா்வுகள், பெருமை மற்றும் கௌரவத்தின் சின்னமும்கூட. இந்தியா யாரையும் சீண்டுவதில்லை. ஆனால் தேசத்திற்கு சவால் விட எவரேனும் துணிந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றாா் முதல்வா்.

இந்த நிகழ்ச்சியில் பாடகா் ஆஷிஷ் குல்கா்னியின் தேசபக்திப் பாடல்களும் இடம்பெற்றன. மேலும், பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என்ற முழக்கங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்தன.