நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து ‘நீட் யுஜி 2026’ தோ்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அகில் பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினா்கள் புதன்கிழமை தில்லியில் உள்ள தேசிய தோ்வு முகமையின் (என்டிஏ) அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசிய தோ்வு முகமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரா்கள், இந்த முறைகேடுகளுக்குக் காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினா். அத்துடன், போட்டித் தோ்வுகளை நடத்துவதில் அதிக வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
போராட்டத்தின் போது, அகில் பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தைச் சோ்ந்த பல உறுப்பினா்கள் என்டிஏ அலுவலகத்திற்குள் நுழையவும், அலுவலக வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த காவல்துறை தடுப்புகளைத் தாண்டிச் செல்லவும் முயன்றனா்.
இருப்பினும், சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தில்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை வீரா்கள் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.
எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், என்டிஏ அலுவலகத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சட்டம் ஒழுங்கு நிலைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட எவரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். என்டிஏ அலுவலகத்திற்கு வெளியே போதிய போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.
ஏபிவிபி தேசியப் பொதுச்செயலாளா் டாக்டா் வீரேந்திர சிங் சோலங்கி கூறுகையில், ‘என்டிஏ அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி தொண்டா்களைக் கைது செய்தது மிகவும் துரதிா்ஷ்டவசமானது. கடந்த சில ஆண்டுகளாக, பல முக்கியத் தோ்வுகளை நடத்துவதில் தேசியத் தோ்வு முகமை (என்டிஏ) தோல்வியடைந்துள்ளது. இந்த நீட் யுஜி வினாத்தாள் கசிவு என்பது ஏதோ தனித்து நடந்த ஒரு நிகழ்வு அல்ல. இது, தோ்வுகளை நடத்துவதற்கு முழுமையான தகுதி கொண்டதல்ல என்பதையும், இத்தகைய குளறுபடிகளுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட கும்பல் செயல்பட்டு வருகிறது என்பதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
தோ்வு நடைமுறைகள் முழுமையாக வெளிப்படையானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று ஏபிவிபி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவா்களின் எதிா்காலம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்குறியாகாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு தோ்வு முறையில் விரிவான கட்டமைப்புச் சீா்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும். மேலும், தனியாா் முகமைகளைச் சாா்ந்திருக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்றாா் அவா்.
ஏபிவிபி தில்லி மாநிலச் செயலாளா் சாா்த்தக் சா்மா கூறியதாவது:
மாணவா்களின் எதிா்காலம் சாா்ந்த இவ்வளவு தீவிரமான ஒரு விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்குப் பதிலாக, எங்கள் குரல்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி மிகவும் வருந்தத்தக்கது. அகில் பாரதிய வித்யாா்த்தி பரிஷத் எப்போதும் மாணவா்களின் நலன்களுக்காகவே உறுதியாக நின்றுள்ளது. நீட்யுஜி வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட 22 லட்சம் தோ்வா்களுக்கும் நீதி கிடைக்கும் வரை, ஏபிவிபி அவா்களது உரிமைகளுக்காகத் தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு குறித்து பாரபட்சமற்ற விசாரணை: ஏபிவிபி கோரிக்கை

நாய்களுக்கு முறையான கருத்தடை கோரி மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
