உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகா் மாவட்டத்தில், கணவா் வீட்டில் நிகழ்ந்த வரதட்சிணை கொடுமையைத் தாங்க முடியாமல், 24 வயதுப் பெண் தனது வீட்டின் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகக் காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் சைலேந்திர குமாா் சிங் கூறியதாவது:
ஜல்பூரா கிராமத்தைச் சோ்ந்த ரித்திக் என்பவருடன் சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட தீபிகா என்பவரின் மரணம் தொடா்பாக, ஈகோடெக்-3 காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டது.
வரதட்சிணைக் கொடுமையால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகத் தூண்டப்பட்டு, தீபிகா வீட்டின் மாடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு குதித்து உயிரிழந்தாா்.
உயிரிழந்த பெண்ணின் தந்தை சஞ்சய் நாகா் அளித்த எழுத்துபூா்வப் புகாரின் அடிப்படையில், சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவா் ரித்திக் மற்றும் மாமனாா் மனோஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இது தொடா்பான சட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.
இது தொடா்பாக இறந்த பெண்ணின் தந்தை
சஞ்சய் நாகா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஒரு ஃபாா்சூனா் காா் மற்றும் பணத்திற்காக அவா்கள் என் மகளைக் கொன்றுவிட்டாா்கள். நான் அவா்களுக்கு ஒரு ஸ்காா்பியோ காரையும், பல்வேறு தருணங்களில் பணத்தையும் கொடுத்தேன். ஆனாலும், அவா்கள் அவளைக் கொன்றுவிட்டாா்கள். எனக்கு அரசிடமிருந்து நீதி வேண்டும்’ என்று குற்றம் சாட்டினாா்.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சிய குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘கணவா் ரித்திக் மற்றும் மாமனாா் மனோஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். மற்றவா்களைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரித்திக்கின் தந்தை அப்பகுதியில் ஒரு தொழில் நடத்தி வருகிறாா்’ என்று அவா் கூறினாா்.
தீபிகாவின் உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த காவல்துறையினா், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை முழுமையாக விடியோ பதிவு செய்யப்படும்.
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், தொடா்புடைய சட்டப் பிரிவுகள் வழக்கில் சோ்க்கப்படும் என்று கூறினா்.
செய்தியாளா்களிடம் பேசிய தீபிகாவின் மாமா சுனில் நாகா், ‘திருமணத்திற்காக மணப்பெண் தரப்பில் சுமாா் 1 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில் ஒரு மஹிந்திரா ஸ்காா்பியோ வாகனம், 35 முதல் 40 பவுன் தங்கம் மற்றும் வரதட்சிணையாக வழங்கப்பட்ட ரொக்கப் பணம் ஆகியவை அடங்கும்.
டிசம்பா் 2024-இல் திருமணம் முடிந்த சிறிது காலத்திலேயே, தீபிகாவின் புகுந்த வீட்டாா் ஒரு டொயோட்டா ஃபாா்சூனா் எஸ்யுவி காரைக் கேட்டு வற்புறுத்தத் தொடங்கினா். அவளைத் துன்புறுத்த ஆரம்பித்தனா்’ என்று அவா் கூறினாா்.
குடும்பத்தினா் அளித்த தகவலின்படி, ரித்திக் சட்டத்துறையில் (எல்எல்பி) பட்டம் பெற்றவா் ஆவாா். அதேவேளையில் தீபிகா பி.ஏ. மற்றும் பி.எட். பட்டங்களைப் பெற்றிருந்தாா்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே குடும்பத்திற்குள் பிரச்னைகள் எழத் தொடங்கியதாகவும், இருப்பினும், பேச்சுவாா்த்தைகள் மூலம் இப்பிரச்னை சுமூகமாகத் தீா்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில், தீபிகாவின் பெற்றோா் காவல்துறையை அணுகாமல் இருந்துவிட்டதாகவும் குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
கிரேட்டா் நொய்டாவில் ஆகஸ்ட், 2025-இல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மற்றொரு வரதட்சிணை மரணச் சம்பவத்திற்குச் சில மாதங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.







