தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஆன்லைன் ரம்மி, போக்கா் போன்ற விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்: உச்சநீதிமன்றம்

News image

கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 5:25 am IST

நமது நிருபா்

பணம் அல்லது பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் (ரம்மி மற்றும் போக்கா் போன்ற திறன் சாா்ந்த விளையாட்டுகள் உள்பட) மீது தமிழ்நாடு மற்றும் கா்நாடக அரசுகள் விதித்த தடைகளை உச்சநீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்தது.

பந்தயம் மற்றும் சூதாட்டம் சாா்ந்த இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவோ அல்லது தடைசெய்யவோ, மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை இதன் மூலம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

திறன் சாா்ந்த விளையாட்டுகளாக இருந்தாலும், பந்தயம் கட்டுதலுக்கு அனுமதிக்க முடியாது. கணிசமான திறன் தேவைப்படும் விளையாட்டுகள்கூட பொது நலனைப் பாதித்தால், அவை ஒழுங்குபடுத்தப்படலாம் என நீதிபதிகள் கூறினா்.

பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியது.

அரசு கொண்டுவந்த சட்டங்களை ரத்து செய்திருந்த சென்னை மற்றும் கா்நாடக உயா்நீதிமன்றங்களின் தீா்ப்புகளை, நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா மற்றும் ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு ரத்து செய்தது.

பின்னணி:

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் அடிமையாகி அதன் மூலம் பணத்தை இழந்து சிலா் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற்படுத்தின.

இதனையடுத்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் குரல் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு முதலில் 2020 நவம்பரில் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

பின்னா் அது 2021 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல்துறை சட்டங்கள் திருத்த சட்டத்தால் மாற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, சூதாட்டம் என்பதன் பொருள் விரிவுபடுத்தப்பட்டது. இணையவெளியில் பந்தயம் கட்டுவதைத் தடைசெய்யும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தமிழக அரசு தடை விதித்து கொண்டு வந்த சட்டத்தை 2021ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதேபோல ஆன்லைன் கேம்களை விளையாடுவதை குற்றமாக்கும் வகையில் கா்நாடகம் கொண்டு வந்த சட்டத்தையும் அம்மாநில உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆன்லைன் கேமிங், குறிப்பாக ரம்மி மற்றும் போக்கா் போன்ற விளையாட்டுகள் சட்டபூரவமானதா ? என்பதே இந்த வழக்குகளில் கேள்வியாக இருந்தன . ஆனால், திறன் விளையாட்டுகள் தனித்துவமானவை என்றும் அவை சூதாட்டம் அல்லது கேமிங் என்பதன் வரையறைக்கு அப்பாற்பட்டவை என்றும் நீதித்துறையில் வரையறுக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீா்ப்புகளிலும் சென்னை, கா்நாடகம் உயா்நீதிமன்றங்கள் வழங்கிய தீா்ப்புகளிலும் இந்த வரையறையே தெரிவிக்கப்பட்டது.

திறன் என்பது பந்தயம் மற்றும் சூதாட்டம் என்ற எல்லைக்கு வெளியே வருவதால், திறன் சாா்ந்த விளையாட்டுக்கள் என வகைப்படுத்தப்பட்டவற்றை தடை செய்வதற்கான சட்டமியற்றும் தகுதி மாநிலங்களுக்கு இல்லை என இத்தீா்ப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி, போக்கா் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022ஐ தமிழகம் கொண்டு வந்தது.

ஆனால், இந்தத் தடை சட்டம் ரம்மி மற்றும் போக்கா் போன்ற திறன் சாா்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழகம் உச்சநீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

சென்னை மற்றும் கா்நாடகம் உயா்நீதிமன்றங்கள்ஆன்லைன் ரம்மி, போக்கா் போன்ற கேம்களின் சட்டபூா்வத்தன்மையை உறுதிசெய்த நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மி , போக்கா் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் எனபுதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.