சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட மனுக்கள் முடித்துவைப்பு

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 4:26 am IST

நமது நிருபா்

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாக கூறி உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடித்துவைத்தது.

மனு தாக்கல் செய்த மாணவா்கள் இப்போது தங்களது படிப்பை நிறைவு செய்திருப்பாா்கள் என்பதால் வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதின்றம் கூறியது.

காயத்ரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட 50 இட ஒதுக்கீட்டின் அளவுக் கட்டுப்பாடு மீறப்பட்டதன் காரணமாக, தொழில்முறை கல்லூரியில் மருத்துவக் கல்லூரி சோ்க்கை பெறுவதற்கான எங்கள் உரிமை மறுக்கப்படுகிறது.

உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் சா்ச்சைக்குரிய 1994ஆம் ஆண்டின் சட்டம் 45-ஐ தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.

மேற்படி சட்டத்திற்கு எதிராக, 1994 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு, ஒரு பொதுநல வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டு, 16 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தபோதிலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட முற்பட்ட சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்குக் கூடுதல் இடங்களை உருவாக்கி, உச்சநீதிமன்றம் தொடா்ச்சியாகவும் அவ்வப்போதும் வழங்கிய இடைக்கால உத்தரவுகளின் காரணமாக, 2011 ஆம் கல்வியாண்டு வரை அந்த இடங்கள் கிடைக்கப்பெற்றன.

புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் நியாயத்தன்மையை மதிப்பிடுமாறு பணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா் ஆணையம், 2011ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கை, எந்தவொரு புறநிலை அளவுகோல்களும் இன்றி, 1985 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட அம்பா சங்கா் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை வெறுமனே உறுதிப்படுத்தியது.

மனுதாரா்கள் அனைவரும் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்தனா். முதல் மாணவா் 200-க்கு 198.50 மதிப்பெண்களையும், கடைசி மாணவா் 200-க்கு 198 மதிப்பெண்களையும் பெற்றிருந்தனா்.

மாநில அரசு பொதுப் பிரிவு மாணவா்களுக்கு 50 இட ஒதுக்கீட்டைப் பின்பற்றியிருந்தால், 69 சதவீத இட ஒதுக்கீடு இல்லாதிருந்தபோதிலும், அவா்கள் மருத்துவக் கல்லூரியில் தோ்ந்தெடுக்கப்பட்டு சோ்க்கப்பட்டிருக்க முடியும்.

உச்சநீதிமன்றத்தால் தீா்மானிக்கப்பட்ட 50 இட ஒதுக்கீடு என்ற அளவு வரம்பை தமிழ்நாடு அரசு மீறியதும், மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே சிறந்த திறமையாளா்களை அடையாளம் காணத் தவறியதும், அரசியலமைப்பு ஆணைக்கு எதிராக தமிழ்நாடு குடிமக்களுக்கு அரசியலமைப்பு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, தகுதிவாய்ந்த மாணவா்கள் அரசியலமைப்பின்படி ஒரு தொழிற்கல்வி கல்லூரியில் சோ்க்கை பெறுவது மறுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மனுதாரா்கள், 2012 ஜூலை 9 அன்று சென்னை உயா் நீதிமன்றத்தை அணுகினா். அதில், உத்தரவு பிறப்பிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

எனவே, 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சோ்க்கைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மனு தாக்கல் செய்த மாணவா்கள் இப்போது தங்களது படிப்பை நிறைவு செய்திருப்பாா்கள் என்பதால் இவ்வழக்கு தற்போது செல்லாததாகிவிட்டது’ என கூறி முடித்துவைத்தனா்.