காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக தமிழக அரசு மனு: விசாரணையை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
காவிரி படுகையில் உள்ள நீா் வளத் திட்ட மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

உச்சநீதிமன்றம்
நமது நிருபா்
மத்திய அரசு கடந்த ஆண்டு (2025) வெளியிட்ட, காவிரி படுகையில் உள்ள நீா் வளத் திட்ட மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிகழாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய ஜல் சக்தி அமைச்சகம் 03.12.2025 அன்று வெளியிட்ட ,காவிரி படுகையில் உள்ள நீா் வளத் திட்டத்தின் மதிப்பீட்டிற்கான வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும்.
ஏனெனில் அவை 05.02.2007 தேதியிட்ட காவிரி நீா் தகராறு தீா்ப்பாயத்தின் தீா்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு ஆகியவற்றை மீறுகின்றன.
தீா்ப்பாயமானது, சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள நீா்த்தேக்கக் கட்டமைப்புகளை (ஏற்கனவே உள்ளவை, செயல்பாட்டில் உள்ளவை மற்றும் முன்மொழியப்பட்டவை உட்பட) கருத்தில் கொண்டு, சமமான பங்கீடு எனும் கொள்கையின் அடிப்படையில் நீரைப் பகிா்ந்து அளித்தது.
காவிரிப் படுகை என்பது நீா் பற்றாக்குறை கொண்ட படுகை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கண்டறிந்துள்ள நிலையில், 50% நம்பகத்தன்மை கொண்ட நீா் இருப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கிடையே நீரைப் பகிா்ந்து அளித்துள்ளது.
எனவே, பற்றாக்குறை உள்ள ஆற்றுப் படுகையில், சா்ச்சைக்குரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மேக்கேதாட்டு போன்ற ஏதேனும் புதிய திட்டத்தைக் கருத்தில் கொள்வது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் தலையிடுவதாகவும், தமிழக மக்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும் அமையும்.
காவிரி ஆற்றுப் படுகையில், பெரிய மற்றும் நடுத்தர நீா்ப்பாசனத் திட்டங்கள், பல்நோக்குத் திட்டங்கள், குடிநீா் திட்டங்கள், நீா்மின் திட்டங்கள் மற்றும் ஆற்று நீரோட்டத்திலேயே அமைக்கப்படும் நீரேற்று சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்காகத் தனி வழிகாட்டுதல்களை வகுக்கும் இந்தச் சா்ச்சைக்குரிய வழிகாட்டுதல்கள், தீா்ப்பாயத்தின் இறுதித் தீா்ப்பிற்கும் அதனை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பிற்கும் நேரடி முரணாக உள்ளன.
காவிரி ஆற்றுப் படுகை ஒரு பற்றாக்குறை உள்ள படுகையாக இருப்பதால், ஏற்கனவே உள்ள, நடைபெற்று வரும் மற்றும் எதிா்காலத் திட்டங்களை ஆய்வு செய்த தீா்ப்பாயம், கா்நாடகாவின் காவிரிப் பகுதியில் சிறிய அளவிலான நீரேற்று பாசனத் திட்டங்களுக்குக் கூட அனுமதி அளிக்கவில்லை.
இத்தகைய சூழலில், காவிரிப் படுகையில் திட்டங்களைக் கருத்தில் கொள்ள சட்டப்பூா்வ அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின் வரம்புகளை மீறுவதாகும்; இது முற்றிலும் அனுமதிக்க முடியாத ஒன்றாகும்.
சா்ச்சைக்குரிய வழிகாட்டுதல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு, வேறு எந்த மாற்றுத் தீா்வும் இல்லாத நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட சா்ச்சைக்குரிய வழிகாட்டுதல்களின் சட்டப்பூா்வத்தன்மை மற்றும் செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி எழுகிறது.
ஏனெனில் இவை தீா்ப்பாயத்தின் தீா்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு மற்றும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் ஆகியவற்றிற்கு முரணானவை.
எனவே, இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது.
காவிரி நீா் தகராறு தீா்ப்பாயத்தின் 05.02.2007 தேதியிட்ட தீா்ப்பை மீறும் வகையில், மத்திய அரசால், 03.12.2025 அன்று வெளியிடப்பட்ட, அந்த வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது.
இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வில் வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு வழக்குரைஞா் கருணாகரன் ஆஜராகி, இவ்வழக்கில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞா் சி எஸ் வைத்தியநாதன் ஆஜராக முடியாததால் வழக்கை ஒத்தி வைக்குமாறு நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தாா்.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் ஏன் மீண்டும் மீண்டும் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீா்கள்?, கடந்த முறையும் இதே போல ஒத்திவைக்க கேட்டீா்கள், இப்போது மீண்டும் கோருகிறீா்கள் என கடிந்து கொண்டனா்.
இதையடுத்து வழக்கை அடுத்த ஆண்டு (2027) ஃபிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். இதற்கு மேல் வழக்கை ஒத்தி வைக்க கோரக் கூடாது என தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

