காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மீண்டும் ஏமாற்றம்... உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு பற்றி..
உச்ச நீதிமன்றம் - file photo
காவிரியில் இருந்து கர்நாடகம் தரவேண்டிய மீதமுள்ள நீரைத் திறந்து விட உத்தரவிடுமாறு தமிழகம் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு இந்த ஆண்டு காவிரி நீரைத் திறந்து விடவில்லை எனத் தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் 15 நாள்களுக்கு ஒருமுறை கூடி காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்தாலும், கர்நாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டிய பாக்கி நீரைத் திறந்து விடுமாறு உத்தரவிடப்படவில்லை என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதையடுத்து கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய பாக்கி நீரைத் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழகம் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடி வருகிறது.
ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த மனுவில் தமிழகம் கோரியதாவது,
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், பிலிகுண்டுலுவில், 01.06.2026 முதல் 12.08.2026 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள 26.954 டி.எம்.சி பற்றாக்குறையை, விகிதாசார அடிப்படையில் ஈடுசெய்யும் வகையில் கர்நாடக மாநிலத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த மனுவில் தமிழகம் கோரியதாவது,
நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், பிலிகுண்டுலுவில், 01.06.2026 முதல் 09.09.2026 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள 16.01 டி.எம்.சி பற்றாக்குறையை, விகிதாசார அடிப்படையில் ஈடுசெய்யும் வகையில், அந்த நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக மாநிலத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிலையில் காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 12-ஆம் தேதி நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வாதிட்டது.
"இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாத துயரமான ஆண்டாக உள்ளது. காவிரியிலிருந்து கர்நாடகம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விடாததால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் கூடி தமிழகத்திற்கு கர்நாடகம் பதினைந்து நாள்களுக்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. எனினும் தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய மீதமுள்ள நீரைத் திறந்து விட அவை உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை.
ஜூலை மாதம் தொடங்கி அக.12 வரை கர்நாடகம் தமிழகத்திற்கு 11 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய பாக்கி உள்ளது. பயிர்களைக் காக்க இந்த தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டியது கட்டாயம் ஆகிறது. இந்த மீதமுள்ள நீரை ஈடு செய்ய கர்நாடகம் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூடுதலாகத் திறந்து விட வேண்டும்" என தமிழக அரசு வாதிட்டது.
அதனைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


