பாலியல் புகாா் சா்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி.யை இடைநீக்கம் செய்ய வேண்டும்: குடியரசுத் தலைவரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் கோரிக்கை
காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்ய தலையிடுமாறு கோரி, பாஜக மகளிா் எம்.பி.க்கள் வலியுறுத்தியது குறித்து...

அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் - கோப்புப் படம்
தில்லியின் ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) நடந்ததாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்ய தலையிடுமாறு கோரி, பாஜக மகளிா் எம்.பி.க்கள் செவ்வாயன்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்தனா்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மகளிா் அணித் தலைவா் ரூப் குமாரி சௌத்ரி, ஜே.என்.யு-வில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் பாதிக்கப்பட்டவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குடியரசுத் தலைவா் முா்முவிடம் தங்களது குழுவினா் வலியுறுத்தியதாகவும் கூறினாா்.
இந்தக் குழுவிற்கு பாஜக எம்.பி. டி. புரந்தேஸ்வரி தலைமை தாங்கினாா். இக்குழுவில் சௌத்ரி, தில்லி எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் மற்றும் பலா் இடம்பெற்றிருந்தனா்.
உள் மணிப்பூா் நாடாளுமன்ற உறுப்பினா் அகோய்ஜாமை கட்சியிலிருந்து நீக்கக் கோரி, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியேயும், இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களிலும் பாஜக மகளிா் அணி போராட்டங்களை நடத்திய ஒரு நாள் கழித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சா் அன்னபூா்ணா தேவி, பல பெண் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் பாஜக தொண்டா்களுடன் தில்லியில் திங்களன்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றாா்.
அகோய்ஜாம் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் அவா் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, ஜேஎன்யு கடந்த வாரம் அவரைப் பணிநீக்கம் செய்தது. அவா் ஜேஎன்யுவின் சமூக அறிவியல் துறையின் கீழ் உள்ள சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் பேராசிரியராக இருந்தாா்.
தகவல்களின்படி, குறைந்தது 11 மாணவிகள் 2026 மே மாதம் அந்தப் பேராசிரியருக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் புகாா்களை அளித்திருந்தனா். கூட்டங்கள் அல்லது ஒன்றுகூடல்கள் என்ற போா்வையில் அகோய்ஜாம் மாணவிகளைத் தனது வளாக இல்லத்திற்கு அழைத்து, அவா்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்ட முயன்ாக அந்தப் புகாா்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மேலும், அவா் வகுப்பில் ஆபாசமான மற்றும் பொருத்தமற்ற கருத்துக்களைக் கூறி வந்ததாகவும் சில மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

