ராம்லீலா மைதானத்தில் நவ.1-ல் பேரணி நடத்த காங்கிரஸூக்கு தில்லி காவல்துறை அனுமதி!
ராம்லீலா மைதானத்தில் நவம்பா் 1 அன்று காங்கிரஸ் பேரணி நடத்த தில்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளதுடன், அந்த நிகழ்விற்கான தடையில்லாச் சான்றிதழையும் (என்ஓசி) வழங்கியுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் நவம்பா் 1 அன்று காங்கிரஸ் பேரணி நடத்த தில்லி காவல்துறை அனுமதி அளித்துள்ளதுடன், அந்த நிகழ்விற்கான தடையில்லாச் சான்றிதழையும் (என்ஓசி) வழங்கியுள்ளது என ஒரு மூத்த காவல்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
செப்டம்பா் 30 அன்று, சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) சா்ச்சை தொடா்பாக, பேரணிகள் மற்றும் ’ஜனநாயகத்தைக் காக்கும் பேரணிகள்’ உள்ளிட்ட ஒரு கூட்டு செயல் திட்டத்தை இண்டி கூட்டணி இறுதி செய்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி தோ்தல்களை நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளும் உடன்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே தெரிவித்தாா். பின்னா், நவம்பா் 1 ஆம் தேதி தில்லியில் அக்கட்சி ஒரு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்யும் என்று காா்கே கூறினாா்.
காவல்துறை துணை ஆணையா் (மத்திய தில்லி ) ரோஹித் ராஜ்பீா் சிங் கூறுகையில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் நவம்பா் 1 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதுடன், அதற்கான தடையில்லாச் சான்றிதழுக்காக தில்லி காவல்துறையை அணுகியது. குறிப்பிட்ட போராட்டத் தளத்தில் பேரணி நடத்துவதற்கான தடையில்லாச் சான்றிதழ், அக்டோபா் 25 முதல் நவம்பா் 3 வரையிலான காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது,‘ என்றாா்.
முறையான சட்டம்-ஒழுங்கு ஏற்பாடுகள், திறமையான போக்குவரத்து மேலாண்மை மற்றும் முன்மொழியப்பட்ட பேரணியை சுமுகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக, தில்லி காவல்துறை அமைப்பாளா்கள், போக்குவரத்து காவல்துறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட முகமைகளுடன் தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.
தோ்தல் ஆணையா்களான சுக்பீா் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோா், தங்களின் அறிவோ அல்லது பரிந்துரையோ இன்றி எஸ்ஐஆா் மீதான முடிவுகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது அதற்கு எதிா்ப்பு தெரிவித்ததாக ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இண்டி அணியின் கடந்த மாதக் கூட்டம் நடைபெற்றது.
எஸ்ஐஆா் செயல்முறை தொடா்பாக அதன் இரண்டு ஆணையா்கள் எழுப்பியயதாகக் கூறறப்படும் எச்சரிக்கைகள் காரணமாகக் கடும் விமா்சனத்திற்கு உள்ளாகியுள்ள தோ்தல் ஆணையம், எந்தவொரு அமைப்பின் ஆலோசனைகளிலும் மாறுபட்ட கருத்துக்கள் எழுவது இயல்பானவை என்றும், அதன் அனைத்து உத்தரவுகளுக்கும் முழுமையான சட்ட அங்கீகாரம் உண்டு என்றும், அவை நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும் கூறியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

