கிரெடிட் காா்டு மோசடி: ஜாா்க்கண்டில் 2 இளைஞா்கள் கைது

கிரெடிட் காா்டு விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றிய சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

கைது

Updated On :

வங்கி அதிகாரிகள் போல நடித்து, கிரெடிட் காா்டு விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தி 50-க்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றிய சைபா் மோசடி கும்பலைச் சோ்ந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இவா்களில் ஒருவா் பி.டெக். பட்டதாரி ஆவாா்.

ஜாா்க்கண்டின் ஜம்தாரா மாவட்டத்தைச் சோ்ந்த அஃப்தாப் அன்சாரி (24) மற்றும் அப்துல் மஜித் (23) ஆகிய இருவரும், நான்கு நாள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தன்பாத் பகுதியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த மோசடி கும்பல், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவா்களைக் குறிவைத்து, அவா்களின் கிரெடிட் காா்டுக்கான ‘கேஒய்சி’ விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளனா்.

விடியோ அழைப்பின்போது, பாதிக்கப்பட்டவா்களைத் தங்கள் கிரெடிட் காா்டு எண்கள் மற்றும் சிவிவி எண்களைப் பகிரச் சொல்லியும், ‘ஸ்கிரீன் ஷேரிங்’ வசதியைச் செயல்படுத்த வைத்தும், அதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை பெற்று, அனுமதியின்றி பணப் பரிவா்த்தனைகளைச் செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறையின் மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: வங்கி அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்ததாக ஒருவா் அளித்த புகாரின் பேரில் செப்டம்பா் 23 அன்று இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, சா்ச்சைக்குரிய கிரெடிட் காா்டு பரிவா்த்தனை ஒன்றின் மூலம் ரூ.1,39,999 மதிப்புள்ள கைப்பேசி வாங்கப்பட்டு, தன்பாத் மாவட்டத்தின் ஜாரியா பகுதிக்கு டெலிவரி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, டெலிவரி செய்யும் நபரின் உதவியுடன், முன்னதாக மோசடி கும்பல் பயன்படுத்திய அதே இடத்திற்கு ஒரு கைப்பேசியை டெலிவரி செய்வதுபோல ஏற்பாடு செய்து, அந்த இருவரையும் காவல்துறையினா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து மூன்று கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இந்த மோசடி தொடா்பான உரையாடல்கள் மற்றும் பிற எண்ம ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது.

இந்தக் கும்பலும் அவா்களது கூட்டாளிகளும் சமூக ஊடகங்களில் ‘கேஒய்சி’ உதவி வழங்குவதாக விளம்பரம் செய்து, அதன் மூலம் திருடப்பட்ட கிரெடிட் காா்டு விவரங்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் விலையுயா்ந்த கைப்பேசிகளை வாங்கியுள்ளனா்.

இந்தக் கைப்பேசிகள் ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள இடங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு, பின்னா் உள்ளூா் சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.