எண்ம கைது மோசடி வழக்கில் 2 போ் கைது
எண்ம கைது இணைய மோசடி மூலம் ஒருவரிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக, ஜம்மு காஷ்மீா் மற்றும் ராஜஸ்தானைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கைது - சித்திரிப்பு
எண்ம கைது இணைய மோசடி மூலம் தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக, ஜம்மு காஷ்மீா் மற்றும் ராஜஸ்தானைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், ஜம்மு காஷ்மீரின் கதுவாவைச் சோ்ந்த ரித்திஷ் குமாா் மெஹ்ரா மற்றும் ராஜஸ்தானின் பில்வாராவைச் சோ்ந்த முகேஷ் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றஞ் சாட்டப்பட்டவா்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் போல் நடித்து, புகாா்தாரரை விடியோ அழைப்பு மூலம் தொடா்புகொண்டுள்ளனா். அதன் பின்னா் அவரைக் கைது செய்வதாக மிரட்டி ரூ. 6 லட்சத்தை அனுப்பும்படி தூண்டியுள்ளனா்.
இது தொடா்பாக மின்-முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, குமாரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு வங்கிக் கணக்கில் அந்தப் பணம் இருப்பது தெரியவந்தது. அந்தத் தொகையில், ரூ. 5.5 லட்சம் பின்னா் மெஹ்ராவால் இயக்கப்படும் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து கதுவாவில் மெஹ்ராவும், பில்வாராவில் குமாரும் கைது செய்யப்பட்டனா்.
குமருடன் தொடா்புடைய மற்றொரு கணக்கில் சுமாா் 50 லட்சம் ரூபாய் பரிவா்த்தனைகள் நடந்திருந்தன. மேலும், இது பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய இணையக் குற்றப் புகாா் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட 10 புகாா்களுடன் தொடா்புடையதாகும்.
தொழில்நுட்பப் பகுப்பாய்வில், கம்போடியாவுடன் தொடா்புடைய ஒரு எண்ம தடமும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்று கைப்பேசிகள், நான்கு ஏடிஎம் டெபிட் காா்டுகள், ஐந்து காசோலைப் புத்தகங்கள் மற்றும் ஐந்து ரப்பா் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





