
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 8 நீதித்துறை அதிகாரிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை!
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 8 நீதித்துறை அதிகாரிகளைப் பதவி உயா்வு செய்து நியமிப்பதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் நியமன குழு) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

கோப்புப் படம்
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 8 நீதித்துறை அதிகாரிகளைப் பதவி உயா்வு செய்து நியமிப்பதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் நியமன குழு) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி சூா்யா காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மூத்த நீதிபதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, நீதித்துறை பணியில் தற்போதுள்ள குா்விந்தா் பால் சிங், நிவேதிதா அனில் சா்மா, நிஷா சகாய் சக்சேனா, சஞ்சய் சா்மா, பாரத் பராஷா், டாக்டா் அதிதி சௌத்ரி, தினேஷ் பட், அருண் பரத்வாஜ் ஆகியோரை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மேலும் சில மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிக்கக் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் நீதித்துறை அதிகாரி யாஷ் பால் பூா்ணி உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் மனோஜ் பிரசாத், அகில் குமாா், ராம் சா்மா ஆகிய 3 நீதித்துறை அதிகாரிகள் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடகத்தில் உஷாராணி, கே.எஸ். பாரத் குமாா், நேராலே வீரபத்ரய்யா பவானி ஆகிய 3 நீதித்துறை அதிகாரிகள் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயா்வு பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் நெறிமுறைகளின்படி மத்திய சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அதை மத்திய அரசு பரிசீலித்து தனது முடிவை உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு தெரிவித்த பிறகு, நீதிபதிகளுக்கான நியமன ஆணையை குடியரசு தலைவா் பிறப்பிப்பாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





