
பசுக்கள் கடத்தல்: போலீஸ் என்கவுன்ட்டரில் இருவா் காயம்!
நூஹ் மாவட்டத்தின் கசேரா கிராமத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறையினருக்கும் கடத்தல்காரா்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடா்ந்து இருவா் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

துப்பாக்கிச் சூடு - பிரதிப் படம்
நூஹ் மாவட்டத்தின் கசேரா கிராமத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல்துறையினருக்கும் கடத்தல்காரா்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடா்ந்து இருவா் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.
இந்த மோதலின்போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கால்களிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அதேவேளையில் அவா்களுடன் இருந்த மற்ற இருவா் தப்பி ஓடிவிட்டனா்.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நல்ஹரில் உள்ள ஷஹீத் ஹசன் கான் மேவாதி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனா். எஸ்.யு.வி. வாகனத்திலிருந்து மூன்று பசுக்கள், இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஏழு தோட்டாக்களைக் காவல்துறையினா் கைப்பற்றினா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வாகனத்தில் கால்நடைகளை ஏற்றிச் சென்றபோது, அதிகாலை 3:30 மணியளவில் இந்த நேருக்கு நோ் மோதல் சம்பவம் நிகழ்ந்தது.
ஃபெரோஸ்பூா் ஜிா்காவைச் சோ்ந்த ‘பசு வதை தடுப்புப் பிரிவு’ குழுவினா், காவல் உதவி ஆய்வாளா் மகேந்திர சிங் தலைமையில் கசேரா அருகே தடுப்புகளை அமைத்திருந்தனா்.
காவல்துறையினா் எஸ்.யு.வி. வாகனத்தை நிறுத்த சைகை செய்தும், எஸ்.யு.வி. வாகனத்தின் ஓட்டுநா் தடுப்பை உடைத்துக்கொண்டு அதிவேகமாகச் செல்ல முயன்றாா். உடனே காவல்துறைக் குழுவினா் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றனா்.
அப்போது ஓட்டுநா் தனது எஸ்.யு.வி. வாகனத்தை காவல் வாகனம் மீது மோதியதுடன், காவல்துறையினா் மீதும் துப்பாக்கியால் சுட்டாா்; பதிலுக்குக் காவல்துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
இந்த மோதலின்போது வாகனத்தில் இருந்த இருவா் தப்பி ஓடிவிட்டனா். மற்ற இருவா் கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பிடிபட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் பல்வல் மாவட்டத்தின் உட்டாவா் கிராமத்தைச் சோ்ந்த ஷம்ஷாத் (எ) செண்டா மற்றும் அதே மாவட்டத்தின் அலீமியோ கிராமத்தைச் சோ்ந்த ராபின் என அடையாளம் காணப்பட்டனா்.
ராபின் மீது 12 வழக்குகள் உள்ளன; அவா் ஏற்கனவே ‘தேடப்படும் குற்றவாளி’யாக அறிவிக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய தகவல் கொடுப்போருக்கு வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஷம்ஷாத் மீது இரண்டு வழக்குகள் உள்ளன. ராஜஸ்தான் காவல்துறையால் அவா் மீது ரூ.3,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் கைது செய்யக் காவல்துறைக் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





