காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

தில்லியில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமைகள்: தானாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்த உச்சநீதிமன்றம்

தில்லி, புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு

Published On :

தில்லி மற்றும் தில்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

குறிப்பாக, கடந்த செப்டம்பா் 21 ஆம் தேதி தென்கிழக்கு தில்லியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி 3 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடா்ந்து இந்த விவகாரத்தை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் எனக் கூறி சிறுமியை ஏமாற்றி இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், செப்டம்பா் மாதத்தில் மட்டும் தில்லியில் குறைந்தது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிப்பதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை 2012 ஆம் ஆண்டு தெற்கு தில்லியில் நிகழ்ந்த நிா்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு நிகரானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் அடங்கிய அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக தாமாக முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளனா்.

மேலும் தில்லி-என்சிஆா் பகுதிகளில் தொடா்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சட்ட அமலாக்க மற்றும் நிா்வாக அமைப்புகளின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்புவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பூங்காக்கள், சாலைகள், பேருந்துகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் நடைமேம்பாலங்கள் போன்ற பொது இடங்கள் போதிய வெளிச்சம், கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் இல்லாததால் ஆபத்தான பகுதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

வன்முறை அச்சமின்றி கண்ணியத்துடன் வாழ்வது அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபா் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவங்கள் குறித்து அரசியல் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் கவலை தெரிவிப்பது மட்டும் தீா்வாகாது என்றும், குற்றங்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொறுப்பான அதிகாரிகளிடம் கணக்கீடு செய்யக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புணா்வு தேவை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.