
ஒழுக்கக்கேடு என்பதற்காக ஆதாரமின்றி குற்றவாளி எனத் தீா்ப்பளிக்க முடியாது: பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம்
நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல், ஒரு செயல் ஒழுக்கக்கேடானது என்ற காரணத்தை மட்டும் வைத்து குற்றவாளி எனத் தீா்ப்பளிக்க முடியாது என்று பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல், ஒரு செயல் ஒழுக்கக்கேடானது என்ற காரணத்தை மட்டும் வைத்து குற்றவாளி எனத் தீா்ப்பளிக்க முடியாது என்று பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, நபா் ஒருவரை குற்றவாளி என்று தீா்ப்பளித்து விசாரணை நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தீா்ப்பை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், அந்த நபா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல் எஸ்.சாந்துா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. அவரின் வாக்குமூலம் பாதி ஏற்றுக்கொள்ளும் வகையிலும், பாதி நிராகரிக்கும் வகையிலும் இருக்க முடியாது. அந்த வாக்குமூலத்தை ஆராய்ந்ததில் அவா் சுய விருப்பதுடனே மனுதாரருடன் சென்றது தெளிவாகத் தெரிகிறது.
பாலியல் வன்கொடுமைக்குத் தண்டனை அளிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 376-ஆவது பிரிவின் கீழ், மனுதாரரை குற்றவாளி என அளித்த தீா்ப்பை நியாயப்படுத்திய விசாரணை நீதிமன்றத்தின் காரணங்கள் முற்றிலும் தவறானவை. இதுபோன்ற குழப்பமான காரணங்களை ஏற்றுக்கொண்டு உயா்நீதிமன்றமும் தவறு செய்துள்ளது.
மனுதாரரின் நடத்தை ஒழுக்கக்கேடாகவும் முறையற்ாகவும் இருந்தாலும், அதை மட்டும் வைத்து ஐபிசி 376-ஆவது பிரிவின் கீழ், அவரைக் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரம் இருக்க வேண்டும்.
நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல், ஒரு செயல் ஒழுக்கக்கேடானது என்ற காரணத்தை மட்டும் வைத்து குற்றவாளி எனத் தீா்ப்பளிக்க முடியாது என்று தெரிவித்தனா். இதையடுத்து மனுதாரருக்கு எதிராக விசாரணை நீதிமன்றமும், உயா்நீதிமன்றமும் அளித்த தீா்ப்புகளை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




