ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

பண்பாட்டின் வாழ்வியல் - தொ. பரமசிவன்; பக். 190; ரூ. 215; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை -50; 044 - 26251968. 

பழந்தமிழர் வாழ்வின் அடிக்கூறுகளைக் காத்திரமான ஆய்வுகள் மூலம் கண்டடைந்து, சடங்குகள், வழிபாடுகள், திருவிழாக்கள், உணவு என எண்ணற்ற பண்பாடுகளைப் பற்றிய புதிய தரவுகளைத் தமிழர்களுக்கு அளித்தவர் ஆய்வாளர் தொ. பரமசிவன். தொ.ப. மறைவு, அவருடைய நூல்கள் நாட்டுடைமையானதைத் தொடர்ந்து அவருடைய எழுத்துகள் ஏராளமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. பண்பாட்டின் வாழ்வியல் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூலில்  தொ.ப.வின் 29 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

சங்க கால மரபின் தொடர்ச்சிதான் மண விருந்துகளில் பாயசம் வழங்குவது என்று  மேற்கோள் காட்டும் ஆசிரியர், மஞ்சளைப் பேசும்போது விறலி என்ற சொல்லின் வரலாற்றை விளக்குகிறார்.

சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, மஞ்சள், குங்குமம் பற்றியெல்லாம்கூட பேசப்படவில்லை என்பது அதிர்ச்சி தகவல் என்றால் மலர் மாலையின் நெடிய வரலாற்றையும் விளக்குகிறார். தொண்டை மண்டலத்தில் மட்டும் உலகளந்த பெருமாள் திருமேனிகள் காணப்படுவதன் பின்புலமும் வியக்க வைக்கிறது.

கூலம், கூலி சொற்களை விளக்கும் ஆசிரியர், பிறிதொரு கட்டுரையில் நமது பண்பாடு பற்றிய தெளிவுடன்தான் தமிழ்ப் புத்தாண்டு விஷயத்தை அணுக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

வீடும் வாழ்வும் என்ற நெடிய கட்டுரையில் தமிழர் உடை, பருத்திப் பெண்டும் பள்ளர் நெசவும் பாய் நெசவும், தாலி - மஞ்சள் பற்றியும் ஆராய்கிறார்.

தமிழக பெளத்த எச்சங்கள் பற்றி எழுதும்போது, முனீசுவரன், தவசி எனக் கிராமப்புறங்களில் வழிபடப்படும் நிர்வாணத் துறவிகளின் கற்சிலைகள் யாவும் சமண மதத் தீர்த்தங்கரர்களின் சிலைகளே எனக் குறிப்பிடுகிறார் தொ.ப. பக்கத்துக்குப் பக்கம் ஏராளமான தகவல் கொட்டிக் கிடக்கிற, தமிழர் வாழ்வு பற்றி அறிவதற்கான சிறந்த நூல்களில் ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.