குமரி நாட்டில் சமணம் (தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி); சிவ.விவேகானந்தன், பக். 615, ரூ.650; காவ்யா பதிப்பகம், சென்னை-24; ✆ 044-2372 6882.
சமண சமயம் உயர்ந்த வாழ்க்கை நெறியையும், அகிம்சையையும் வலியுறுத்துகிறது. சமணத்தில் கடவுள் வழிபாடு இல்லை. ஆன்ம உய்வு பெற்ற மேன்மையான துறவியர்களே தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்படுகின்றனர். தீர்த்தங்கரர்கள் போன்று உயர்நிலையை அடைவதற்கு ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தகுதி உள்ளது என்கிறது சமணம். அத்தகைய சமணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றி, செல்வாக்கு பெற்று, வீழ்ச்சியடைந்த வரலாற்றை ஏராளமான சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.
இதற்கு ஆதாரமாக திருக்கோட்டாறு நாகராஜா கோயில், சிதறால் திருச்சாரணத்து மலை, கழுகுமலையில் காணப்படும் கல்வெட்டுகளையும், அதிலுள்ள தகவல்களையும் தொகுத்து தந்திருப்பது நூலுக்கு வலு சேர்க்கிறது. இன்றும் காணப்படும் தீர்த்தங்கரர்கள், அவர்களது சாசன தேவதைகளான இயக்கன், இயக்கியர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகள் வியக்கத்தக்க தகவல்களை உள்ளடக்கியவை. இவை தொடர்பான புகைப்பட பின்னிணைப்பு அருமை. சமணர்களின் மருத்துவக் கலை, வாழ்வியல் செய்திகள் போன்ற கட்டுரைகள் பெரும் ஆய்வின் பலன்கள்.
குமரி மாவட்டத்தில் சம்பந்தர் வருகை புரிந்தது முதல் சமணம் தன் வீழ்ச்சியின் முதல் படியில் கால்வைத்தது எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். சமணத்தின் வீழ்ச்சியில் சைவம், வைணவத்தின் பங்கு குறித்தும் பேசுகிறது நூல். குமரி மாவட்டத்தில் சமணம் வீழ்ச்சியடைந்துவிட்டாலும் சமணர்களின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் இந்த நூல், வரலாற்று ஆய்வுக் களஞ்சியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.