காலிங்கராயன் (நதிநீர் இணைப்பின் முதல்வன்) - க. பானுசந்தர்; பக். 286; ரூ. 350; மலர்க்கொடி பப்ளிகேஷன்ஸ், ஈரோடு, ✆ 79040 18795.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே கல்லணை கட்டிய கரிகால சோழனாகவும், தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனாகவும், கடாரம் கொண்ட ராஜேந்திர சோழனாகவும் பெயர் பெற்று இன்றும் நிலைத்து நிற்கிறார்கள். ஆனால், தனது செயல்களால் புகழ் பெற்று 'பேரரசனாக' வாழ்ந்த ஒரு குறுநில அதிகாரிதான் காலிங்கராயன் என்கிற லிங்கய்யன். அவரைப் பற்றிய புத்தகம்தான் இது.
நீர் மேலாண்மை, கொங்குநாடு, பவானி ஆறு, காலிங்கராயன் அணைக்கட்டு உருவான விதம், நம்பிக்கைகளும் உண்மைகளும், காலிங்கராயன் வாய்க்கால் அழிந்த கதை என 15 அத்தியாயங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. காலிங்கராயர் கட்டுமானங்களின் உண்மையான சிறப்புகள், குளங்கள் இணைப்பு, நதிநீர் இணைப்பு, அவர் சந்தித்த போர், துரோகம் ஆகியவற்றைப் பற்றி பத்து ஆண்டுகள் ஆய்வு செய்து தக்க ஆதாரங்களுடன் இந்த நூலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர் ப.பானுசந்தர்.
உலகப் பெரும் பொறியாளராக மேம்பட்ட அணைப் பொறியியல், வாய்க்கால் வெட்டுதல், ஒற்றைக் கரை வாய்க்கால் அமைத்தல், குளங்கள் இணைப்பு, மேல் நீர் வழிப்பாலம், கீழ்நீர் வழிப்பாலம், நீர் சுரங்கப் பாதைகள் என உலகத்துக்கு புதிய உத்திகளை புகுத்தி அனைத்தையும் ஒரே சேர செய்து இன்றைய பொறியாளர்களுக்கு பாடம் எடுத்துச் சென்ற படிக்காத விஞ்ஞானியாக மதிக்கப்பட வேண்டியவர் காலிங்கராயன்.
கொங்கு மண்டலத்தின் ஈரோட்டில் பவானி ஆற்றை மடைமாற்றி, 89 மைல்களுக்கு குளங்களை இணைத்து வாய்க்கால் வெட்டி பாயும் வழியெல்லாம் வேளாண்மையைச் செழிக்கச் செய்து, நதிநீர் இணைப்பை 13-ஆம் நூற்றாண்டிலேயே செயலாக்கம் செய்திருக்கிறார்.
காலிங்கராயனின் வீரமரணத்துக்குப் பிறகு காலிங்கராயன் அணைக்கட்டு மற்றும் கால்வாய் பல அரசுகள், சுதந்திர இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் என்னென்ன மாறுதல்கள் கண்டிருக்கிறது என்பது பற்றியும், 786 ஆண்டு கால வரலாறு, பண்டைய காலத் தொழில்நுட்பம், மூன்று நூற்றாண்டு புள்ளிவிவரங்கள் இந்நூலில் எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










