பாலகனுக்காக உருவாகிய பால் கிணறு
சீர்காழியிலிருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ தூரத்தில் உள்ள வடகால் கிராமத்திலிருந்து...


சீர்காழியிலிருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலை மார்க்கத்தில் 6 கி.மீ தூரத்தில் உள்ள வடகால் கிராமத்திலிருந்து தெற்கே 1 கி.மீ தூரத்தில் சென்றால் நாம் திருக்குருகாவூர் வெள்ளடை (தற்போது திருக்கடாவூர்) என்ற சிவஸ்தலத்தை அடையலாம். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 13வது தலம் திருஞானசம்பந்தர், சுந்தரர் தேவாரப் பதிகம் பெற்றது. இறைவன் சுந்தரருக்கு கட்டமுது அளித்தருளிய விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பௌர்ணமியில் சிறப்பாக நடைபெறும். இத்தலத்திற்கு உண்டான தீர்த்தம் 'பால்கிணறு' என்று அழைக்கப்படும் ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணறு(கூபம்), ஒவ்வொரு தை அமாவாசை தினத்தன்று பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று நீராடுவார்கள். இதன் சிறப்பாகச் சொல்லப்படும் தல வரலாற்றுப் பின்னனியை நோக்குவோம்...
சைவ சமயம் தழைக்க பாடுபட்ட சம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் வாதிட்டு வென்றார். அவருடன் வாதத்தில் தோற்ற சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். சமணர்களை கழுவேற்றிய பாவம் நீங்க சம்பந்தர் காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட விரும்பி சீர்காழி தலத்து இறைவனை வேண்டுகிறார். அக்காலத்தில் காசிக்கு செல்வது என்பது அதிக நாட்கள் பிராயணம் செய்ய வேண்டும். தட்பவெப்பநிலை, உடல் நிலை போன்றவைகளும் கருத்தில் கொள்ள வேண்டும். இக்காரணங்களுக்காக ஞானசம்பந்தப்பெருமான் துன்பப்படுவதை இறைவன் விரும்பவில்லை போலும், ஆம் அவருக்காக இத்தலத்து கிணற்றிலேயே கங்கையை பொங்கச் செய்தார். அதில் நீராடிய சம்பந்தர் பாவம் நீங்கப்பெற்றார். அவ்வாறு கங்கை பொங்கியது ஒரு தை அமாவசை தினம் என்று கருதப்படுகிறது.
இன்றளவும் அன்றையதினம் கிணற்றின் நீர் சற்று பால் நிறமாக மாறுவது கண்கூடு. அக்காரணத்தில் தான் பால் கிணறு என்று அழைக்கப்படுகிறது. இச்சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு தை அமாவாசை தினத்தன்று சீர்காழி தலத்திலிருந்து ஞானசம்பந்த மூர்த்தி (உற்சவர்) இந்த தீர்த்தத்திற்கு எழுந்தருளுவார். இக்கோயிலுள்ள சிவனும், அம்பாளும் அவருக்கு காட்சிதந்து தீர்த்தம் கொடுக்கின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் இக்கிணற்றில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.
பக்தர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது இத்தலத்திற்கு சென்று சுயம்பு மூர்த்தியான வெள்ளடையீசுவரரையும், காவியங்கன்னி அம்மையும் தரிசனம் செய்து பிறவிப் பெரும்பயனை அடையலாம்.
அடியார்களுக்கு அருள்புரிய எந்நேரமும் காத்துக் கொண்டிருக்கிறார். ஞான சம்பந்தருக்காக கங்கையை கொணர்ந்த இறைவன் பின்னாளில் ஸ்ரீ தர ஐயாவாள் என்னும் மகானுக்காக திருவிசலூரில் அவரது இல்லத்தில் உள்ள கிணற்றில்(கூபத்தில்) ஒரு கார்த்திகை அமாவாசையன்று கங்கையை வரவழைத்து இச்சமயத்தில் நினைவு கூறத்தக்கது.
படங்கள் உதவி: என்.எஸ் நாராயணசுவாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...