பரிகாரங்களால் எதிர்கால வாழ்க்கையில் நன்மை கிடைக்குமா? ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை

ஜோதிடம் உருவான வரலாற்றையும், காலத்துக்கு ஏற்ப கடந்துவந்த பாதையையும்....
பரிகாரங்களால் எதிர்கால வாழ்க்கையில் நன்மை கிடைக்குமா? ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை

ஜோதிடம் உருவான வரலாற்றையும், காலத்துக்கு ஏற்ப கடந்துவந்த பாதையையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். வாழ்வை சந்தோஷமானதாகவும், வெற்றிகரமாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் மனிதனின் ஆகப்பெரிய விருப்பம்.

பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்பது வாழ்வின் சுழற்சிமுறை. நல்வினையும், தீவினையும் சுழற்சிமுறைக்கான காரணங்கள். பிறப்பு, இறப்பு சுழற்சி துன்பமயமானது. அதனால்தான் பிறப்பு, இறப்பு அற்ற முக்தி நிலையை அடைவதே வாழ்வில் இலக்காக வைத்து ஒருவன் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவம் கூறுகிறது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடி சேராதார்

பிறவி என்னும் பெருங்கடலைக் கடந்து இறுதியில் இறைவனை சரணடைவதுதான் மனிதனின் இலக்கு என்பதுதான் இக்குறளின் பொருள். இதனை சற்று தெளிவாகப் பார்ப்போம்.

நமது உடல் என்பது இரண்டு பகுதிகளாக உள்ளது.

1. பருவுடல்

2. நுண்ணுடல்

பருவுடல் என்பது இயங்கும் உடலின் கட்டமைப்பு. நுண்ணுடல் என்பது சூட்சம உடல். இதுவே ஆன்மா அல்லது உயிர் என்று கூறப்படுகிறது. பருவுடலில் இருந்து உயிர் பிரிவது இறப்பு. அந்த உயிர் வேறொரு பருவுடலில் இணைவது மறுபிறப்பு. இந்தச் சுழற்சி துன்பமயமானது எனில், நாம் நினைத்தபடி வாழ முடியாமல் போவது என்பது இயல்பே. அதற்கான காரணம் என்ன?

உயிர் (ஆன்மா) என்றும் நிலைத்திருப்பது. உடல் அழியக்கூடியது. ஒரு உடலில் இருந்து ஆன்மா வெளியேறிய பிறகு அந்த உடல் அழிக்கப்படுகிறது. உடல் அனுபவிக்கும் சுக, துக்கங்கள் ஆன்மாவுக்கு இல்லை. சுக, துக்கங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக உள்ளவை விலக வேண்டும். இதற்கு உலகப் பற்றை விட வேண்டும். அதற்கு, அவற்றை அனுபவித்து சலிப்பு ஏற்படும்போதுதான் அவற்றின் மீதான பிடிப்பு விடுபடும். அப்பொழுதுதான், அடுத்த நகர்வாக இறைவனைப் பற்றிய புரிதலும், தக்க குருவின் மூலம் இறையை உணர வேண்டும் என்ற பக்குவமும் வரும். பக்குவப்பட்ட நிலையில், ஞானம் என்பது தானாகக் கிடைத்துவிடுவதால், இறைவனைச் சரணடைதல் அல்லது முக்தி என்பது எளிதாகக் கிடைக்கப்பெறுவதாக இருக்கிறது. ஆனால், இதை விடுத்து உலகப் பற்றுகளை அனுபவிக்கும் நோக்கில் வாழ்க்கையை நடத்தும்பொழுதுதான் துன்பங்களும் பிரச்னைகளும் வருகின்றன. இது இயல்புதானே.

மனத்தில் தோன்றும் ஆசைகளினால் பொருளாதாரம், குழந்தைச் செல்வம், உலக வாழ்க்கை ஆகியவற்றை அவரவர்கள் என்ணியபடி, விருப்பப்படி அனுபவிக்க நினைக்கிறோம். இதிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் இதிகாசங்கள், புராணங்கள், வேதங்கள், உபநிடதங்கள் அனைத்தும் போதிக்கின்றன. அதற்கு மாறாக, நாம் அவற்றை அடைய முயற்சிக்கிறோம். அத்தகைய முயற்சிகளில் ஏற்படும் தடைகளைச் சரிசெய்துகொள்வதன் மூலம், நம் விருப்பங்களை வெற்றிகொள்ள முடியும் என்ற நோக்கில், மேற்கொள்ளும் வழிமுறைகள்தான் பிராயச்சித்தங்கள் எனப்படும் பரிகாரங்கள்.

பிராய்ச்சித்தம் என்பது எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஹோமங்கள், யாகங்களானாலும் சரி; பூஜை, புனஸ்காரங்களானாலும் சரி; மந்திரங்கள் ஜெபித்தல், யந்திரங்கள் தரித்தல், மாந்திரீக முறைகளாயினும் சரி; நற்பலன்களை உண்டு செய்யும் காரியங்கள் செய்தல் என்ற அடிப்படையில் பொருள்தானம் செய்தல், அன்னதானம், கோயில் நன்கொடை போன்ற காரியங்களில் பற்று வைத்தாலும் சரி; இவற்றில் இருந்து அனைவரும் எதிர்பார்ப்பது அவரவர் சுயநலத்துக்கான வெற்றி, சந்தோஷம் மட்டுமே.

காரணம் தெரிந்த இடையூறுகளாயினும் சரி; காரணம் தெரியாத இடையூறுகளாயினும் சரி; அவை நம்முடைய தவறுகளால் உருவாகியுள்ளது என்பதை உணர்வதால் அல்லது ஜோதிடர்கள் மூலம் உணர்த்தப்படுவதால், பரிகாரங்களை மேற்கொண்டு நினைத்தபடி வாழ்வை வாழ முயற்சிக்கிறோம். இவ்வாறு மேற்கொள்ளும் பரிகாரங்களால் வாழ்க்கையில் வெற்றி என்ற இலக்கை எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறோம்?

இன்றைய வாழ்க்கைச் சூழலில், குறைந்த அளவு பயன்பாடுகள் கிட்டினால்கூட போதும் என்ற நிலையில், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஆனால், உண்மை அப்படியில்லை. இதன் தன்மையைப் புரிந்துகொண்டு செயல்படும்போது, செயற்கரிய மாற்றங்களைக்கூட உருவாக்கமுடியும். பரிகாரங்களை நமக்குப் புரிந்தமட்டில் அணுகுவது என்ற அளவிலேயே முயற்சிகள் இருந்து வருகிறது. இதனால், நினைத்த பலன்களைப் பெற முடியாமல், கிடைத்த அளவில் பயன்படுத்திக்கொள்வோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

இதற்கு, அவசர உலகம், வேகமான வாழ்க்கை முறை, பின்னோக்கி திரும்பிப் பார்க்க முடியாத அளவு முன்னோக்கி நகர்த்தும் விஞ்ஞான பிரமிப்புகள் என பல காரணங்களை அடுக்கலாம். அதனால், நாம் விரும்பியபடி வாழ்வை முழுமையாக அமைத்துக்கொள்ளும் வழிமுறைகள் நமக்கு அரிதாகிவிட்டது. ஒருவேளை, அது எளிதாகக் கிடைத்திருப்பின், எந்தச் சூழ்நிலையிலும் அதை பயன்படுத்தத் தயாராக இல்லை என்று மறுப்பவர்கள் யாரும் இல்லை என்பது என் கருத்து.

இன்றைய நம் அணுகுமுறைகள் எப்படி உள்ளது என்பதையும், அதைத் தாண்டி சிறப்பாக அணுகுவதற்கான வாய்ப்புகள், அடுத்தடுத்த நிலைகள் உள்ளதா, அவற்றைப் பயன்படுத்தி முழு வெற்றி என்பது சாத்தியம்தானா என்பது பற்றியும் என் அனுபவங்களையும், உண்மை படிநிலைகளையும் இனி பார்ப்போம்.

வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம்; நன்மை, தீமை ஆகிய அனைத்தும் கிரகங்களின் தாக்கங்களினால்தான் ஏற்படுகின்றன என்பதை அறிந்துகொண்டு, சந்தோஷத்துக்கும் விருப்பத்துக்கும் தடையாக உள்ள காரணிகளைச் சரி செய்ய, நாம் அதிகமாக நாடிச் செல்லும் ‘புகலிடம்’ ஜோதிடம். ஜோதிடமானது, கிரகங்களின் தாக்கங்களை பற்றி இரு வகைகளில் கூறுகிறது.

1. கோச்சாரம்

2. ராசிக் கட்டம்

கோச்சாரம் என்பது, கிரகங்கள் தற்காலத்தில் அமைந்துள்ள விதத்தைப் பொருத்து, அது நிகழ்த்தும் பாதிப்புகளைக் கூறுவது. ராசிக் கட்டம் என்பது, நாம் பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் சுழற்சியைப் பொருத்து, எந்தெந்த காலங்களில் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றிக் கூறுவது.

அதன்படி, கிரகங்களின் தாக்கம் நன்மை தரக்கூடியதாக இருப்பின், அவற்றின் மூலம் நாம் விரும்பிய செயல்கள் நிறைவேறும் என நம்பிக்கை கொள்கிறோம். ஆனால், தீமை தரக்கூடியதாக இருப்பின், அதன்மூலம் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சத்தில், அத்துன்பங்களின் தாக்கத்தைக் குறைக்க அல்லது அதிலிருந்து முழுமையாக விடுபட பரிகாரங்கள் மூலம் இறைவனை துணைக்கு அழைக்கிறோம். இருப்பினும், அவற்றிலிருந்து முழுமையாக விடுபட முடிகிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்ற பதில்தான் வரும்.

ஏனெனில், நாம் வாழ்வில் அனுபவிக்கும் / அமையும் ‘எதுவும்’ காரண, காரியமின்றி அமைவதில்லை. இன்று அனுபவிக்கும் துன்பங்களும் தடைகளும், முற்காலங்களில் செய்த தவறுகளினால் உருவானதே, அந்தத் தவறுகளுக்கான தண்டனையானது, இப் பிறவியில் நம் சந்தோஷத்தை தடை செய்யும் காரணியாக அமைகிறது. இதைப்போன்று, முற்காலங்களில் செய்த நன்மைகள், நம் வாழ்க்கையில் குறிப்பிட்ட அளவு சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இந்த நன்மை, தீமைகளையே இறந்த கால வினைப்பதிவுகள் என்று குறிப்பிடுகிறோம்.

சில சமயங்களில், ஜோதிடர் குறிப்பிட்ட காலங்களில் சில கிரகங்களினால் நற்பலன்கள் நடைபெறும் என்று கூறியபோதிலும், நடைமுறையில் அவை கிடைக்காமல் துன்பங்களை மட்டும் அனுபவிப்பதை உணர்கிறோம். காரணம் என்னவெனில், தீமைகளின் வலிமையானது கிரகங்களின் வலிமையைவிட அதிகமாக இருப்பதுதான். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், கிரகங்களையும் தாண்டி, இறந்த கால வினைப்பதிவுகளும் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன.

இறந்த காலம் என்பது, பிறந்ததில் இருந்து தற்போது வரை நடைபெற்ற காலங்கள் மட்டும் அல்ல என்பதை முக்கியமாக நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மாவானது, இப்பிறவியில் பிறப்பு எடுப்பதற்கு முன், பல்வேறு முந்தைய பிறப்புகளில் புலன்களின் வழியே எதிர்கொண்ட நிகழ்வுகள், விளைவுகள் மற்றும் அதன்மூலம் பெற்ற அனுபவங்களையும் வினைப்பதிவுகளாக தன்னுள் சேர்த்துக்கொள்கிறது.

அந்தக் குறிப்பிட்ட ஆன்மாவானது, ஒரு உடலில் இருந்து பிரிந்து வேறொரு உடலில் மறுபிறவி எடுக்கும்பொழுது, முற்பிறவியில் பெற்ற அனுபவங்களையும் புதிய உடலில் பதிவிறக்கம் செய்கிறது. இவ்வாறாக, நிகழ் ஜென்மத்தில் நம் உடலில் உள்ள ஆன்மாவானது பல ஜென்மங்களாகப் பிறவி எடுத்து, அதன்மூலம் பெற்ற அனுபவங்களையும் சேர்த்து நம் உடலில் பதிவிறக்கம் செய்து இயங்குகிறது. இந்த அனுபவங்களையே இறந்த கால வினைப்பதிவுகள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

இந்த வினைப்பதிவுகளுக்கு ஏற்பவே, கரு உருவாகும் நேரம், பிறக்க வேண்டிய நேரம், இடம், அச்சமயத்தில் கிரகங்களின் சூழ்நிலை, நம் உடலின் தோற்றம், புலன்கள், பலம், பலவீனம், திறமைகள், பண்புகள், குணநலன்கள், வாழ்க்கையில் அனுபவிக்கப்போகும் நன்மை, தீமைகள், அன்றாட நிகழ்வுகள், அதைச் சமாளிப்பதில் உள்ள ஆற்றல் ஆகிய அனைத்தும் அமைகின்றன.

இதனால்தான், உலகில் இப்போது பிறவி எடுத்துள்ள மக்களில் ஒருவரின் கைவிரல் ரேகை மற்றொருவருடன் ஒத்துப்போவதில்லை. இதற்கு முன் வாழ்ந்து இறந்தவர்களாயினும் சரி, இனி பிறக்கப்போவர்களானாலும் சரி. மேலும், அவர்களின் உடல் அமைப்புகள், குணநலன்களும்கூட ஒரே மாதிரியாக அமைவதில்லை. ஏனெனில், ஒவ்வொரு ஆன்மாவும், அதன் வினைப்பதிவுகளும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. ஆல மர விதைக்குள் அதற்கான முழு மரமும் ஒளிந்துள்ளதுபோல, மனிதனின் கரு விதைக்குள் அனைத்து சூட்சமங்களும் அடங்கியுள்ளது. இதனால்தான், ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் வாழ்க்கை வெவ்வேறாக அமைகிறது.

இதிலிருந்து, வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான காரணங்களும் இறந்த கால வினைப்பதிவுகளுடன் தொடர்புடையது என்பது புலனாகிறது. அந்த வினைப்பதிவுகளை அலசி ஆராய்ந்து, பிரச்னைகளுக்கான காரண காரியங்களைக் கண்டறிந்து, தவறுகளை உணர்ந்து, நமது செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே முழுத்தீர்வு சாத்தியமாகும்.

ஆனால், இன்று காரணங்கள் அறியாமல் வெறும் பதிலை மட்டும் தீர்வாகப் பெறும் நோக்கில், ஆலயங்கள் மற்றும் ஜாதகத்தில் உள்ள விஞ்ஞானத்தை கையில் எடுத்துக்கொண்டு பரிகாரங்களை மேற்கொள்கிறோம். இவை நமக்கு முழுத் தீர்வை கொடுக்காவிட்டாலும், எதிர்பாராத சிறு நற்பலனைக் கொடுக்கும்பொழுது, காலத்தின் வேகமான இயக்கத்தினால் சிறு பலன்களே நமக்கு தாற்காலிக நம்பிக்கையைக் கொடுப்பதால், மீண்டும் மீண்டும் அதையே முயற்சிக்கிறோம். இந்த நம்பிக்கை நாளடைவில் பயமாக மாறி, வாழ்வதற்கான சூட்சுமத்தை மறைத்து, சாதாரண சூழ்நிலைகளைக் கையாள்வதில்கூட அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது. இத்தகைய பயத்திலிருந்து விடுபட, இறைவன் வழங்கிய வரமே ஜோதிடம்.

ஜோதிடத்தில் உள்ள 6 படிநிலைகளையும் (கணிதம், கோளம், ஜாதகம், ப்ரச்னம், முகூர்த்தம், நிமித்தம்) பயன்படுத்தி, மறைந்துகிடக்கும் நம் முன்ஜென்ம வினைப்பதிவுகளையும், பிறந்ததில் இருந்து தற்போது வரை கையாண்ட வினைப்பதிவுகளையும் ஆராய்ந்து, நமது பலம், பலவீனங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், முழுமையான தீர்வைப் பெற்று, நம் எண்ணப்படி சிறப்பான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.

(தொடரும்)

  • வாழ்வியல் வழிகாட்டி ராஜேஸ் கன்னா (தொடர்புக்கு – +91-9443436695; rajeshkanna.astro@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com