நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

தெய்வ தரிசனம்... சகல பாவங்களைப் போக்கும் மயிலாடுதுறை மயூரநாதர்!

பாவங்களை போக்கும் துலா நீராடல் பற்றி..

News image

மயூரநாதர் திருக்கோயில்

Updated On :11 நவம்பர் 2025, 12:34 pm IST

இறைவன் பெயர்: மயூரநாதர்

இறைவி பெயர்: அபயாம்பிகை

எப்படிப் போவது?

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக மயிலாடுதுறை விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளன. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆலய முகவரி

அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்,

மயிலாடுதுறை, மயிலாடுதுறை அஞ்சல்,

மயிலாடுதுறை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609 001.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை, 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம், 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம், மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.

ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற சொல் வழக்கே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில், பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாகக் கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை (சென்னை, மயிலாப்பூர்) ஆகும்.

Story image

சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில், இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்துகொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்துவிடுகிறார். காவிரிக் கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு பார்வதிக்கு சிவன் சாப விமோசனமும் தந்துவிடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை மயிலாடுதுறை ஊரில் காவிரி நதியின் தென்புறத்தில் வெகுகாலம் தவம் இருக்கிறாள். தவத்தை மெச்சிய சிவன், ஆண் மயில் உருவெடுத்து பெண் மயிலான பார்வதியுடன் ஆடி, பார்வதிக்கு சாப விமோசனம் அருளினார். சிவனும், பார்வதியும் மயில் உருக்கொண்டு ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித் துறை என்று இத்தலம் பெயர் பெற்றது.

Story image

ஒருமுறை கன்வ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும்போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கன்வ முனிவரை வணங்கி, தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற, தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற, மூவரும் அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் துலா கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது. துலா மாதத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர் என்று தல புராணம் கூறுகிறது.

Story image

இத்தகைய தலபுராண சிறப்பு பெற்ற மயிலாடுதுறை சென்று ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) காவிரியில் நீராடி இறைவன் மயூரநாதரையும் அம்பிகை அபயாம்பிகையையும் வழிபட நாம் செய்த பாவங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும் என்று கூறப்படுகிறது.

ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும், கடைசி நாளான 30-ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் நமது பாவங்கள் யாவும் விலகும், மோட்சம் கிட்டும்.

Story image

மறுநாள், கார்த்திகை மாதத்தின் முதல் நாள் முடவன் முழுக்கு என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலின் சிறப்பைப் பற்றி கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகிவிட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கிவைத்ததால் இந்நாளை, முடவன் முழுக்கு நாள் என்கின்றனர்.

துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30-ம் நாள் நீராடல் முடிந்துவிட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில், கார்த்திகை முதல் நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

Story image

தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல், இத்தலத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அன்று காவிரியில் புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, நம் முன்னோர்களின் பாவங்களைப் போக்க சிறப்பு பூஜை செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

கோவில் அமைப்பு

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற மூன்று பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிராகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உட்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன.

Story image

கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்துக்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கனமூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தைக் காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிராகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

Story image

நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், அதுமட்டுமன்றி “அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்” என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்.

இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி (குமரக்கட்டளை) மட்டும் தருமை ஆதீனத்துக்குரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

Story image

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிராகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

Story image

மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்தவாரியும் மிகச்சிறப்பாக நடைபெறும். தீர்த்தவாரியை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், மாயூரம் பரிமள ரங்கநாதர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் காவிரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

Story image

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம். ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவிரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐப்பசியில் காவிரியில் ஒருமுறை நீராடினால் – கங்கையில் மூன்று முறை நீராடிய பலனும்; யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

எனவே நீங்களும் இந்த ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை சென்று காவிரியில் நீராடி மயூரநாதரை வழிபட்டு உங்களின் பாவங்கள் யாவும் நீங்கி எல்லா நலன்களும் பெறுங்கள்.

Story image

திருஞானசம்பந்தர் பதிகம், திருநாவுக்கரசர் பதிகம் தவிர அபயாம்பிகை சதகம் என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நல்லத்துக்குடி என்ற ஊரில் பிறந்த கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் அம்பிகையின் பூரண அருளைப் பெற்றவர். இவர் அம்பாள் அபயாம்பிகையைப் போற்றி அபயாம்பிகை அருள் வடிவை, மனக்கண் முன் நிறுத்தி மனக்கவலையை தீர்க்கும் பாடல்களைப் பாடியுள்ளார். அபயாம்பிகை பட்டர் என்று இவர் போற்றப்படுகிறார்.

காவிரி வடகரை தலம்

காவிரியின் வடகரையில், சிதம்பரம் சாலையில் இருந்து மயிலாடுதுறைக்கு உள்ளே நுழையும் இடத்தில் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்தத் தலத்துக்கு உத்திர மாயூரம் என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஞானாம்பிகா சமேத அருள்மிகு வதான்யேஸ்வரர், ஞானத்தையும் தர்மநெறியையும் அளிப்பதில் பிரத்யேக சக்தி கொண்ட பெருமான். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, கல்வி - முன்னேற்றம் அளிப்பதில் தன்னிகரற்ற பெருமானாவார். காசிக்குச் சமமாகப் பூஜிக்கப்படும் இத்திருத்தலத்தில் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டு ஞானஉபதேசம் பெற்ற மகரிஷிகளில் கன்வ மகரிஷி, அகத்தியர் ஆகியோரைக் கூறலாம். இக்கோயில், வள்ளலார் கோயில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

Story image

ஒரு சமயம், தர்ம தேவன் ரிஷப வாகனமாக இறைவனை சுமந்து செல்லும் பேறு பெற்றான். உலகை ஆளும் ஈசன்கூட நம்மால்தான் வேகமாகப் பல இடங்களுக்கும் செல்லமுடிகிறது என மனதில் நினைத்து கர்வமடைந்தது, அது சிவபெருமானுக்குத் தெரிந்து, தன்னுடைய சடைமுடி கற்றை ஒன்றினை ரிஷபத்தின் மேல் வைக்க, அது பாரம் தாங்காமல் மயங்கியது. பின் இறைவன் அதனை நோக்கி, உனக்கு தான் எனும் கர்வம் வந்துவிட்டது. அதனால் என்னை சுமக்கும் அருகதை உனக்கில்லை. உனது பாவம் நீங்க காவிரியில் நீராடி, வில்வ இலைகள் கொண்டு எம்மை பூஜித்தால் உனது பாவம் நீங்கப்பெற்று எம்மை வந்தடைவாய் எனக் கூறினார். நந்தியும் அவ்வாறே செய்து வர, இறைவன் அதற்கு குருவடிவாகக் காட்சி தந்து அருள் செய்தார்.

Story image

நந்தி தேவனும் அப்போது இறைவனை நோக்கி எட்டு பாடல்கள் பாடி வணங்கினார். பின்னர் நந்தி தேவன், “குருவடிவாகக் காட்சி தந்த இறைவா”, தாங்கள் இத்தலத்தில் என் மீது அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்; நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறைவனும் அவ்வாறே தன் எதிரில் இருத்திக்கொண்டார். அதனால் குருபகவானின் முன் நந்தி இருப்பதை இத்தலத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.