Enable Javscript for better performance
நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்- Dinamani

சுடச்சுட

  

  நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்

  By பி.எஸ்.மீனாட்சிசுந்தரம்  |   Published on : 01st April 2021 06:46 PM  |   அ+அ அ-   |    |  

  NGL29KOVIL

  நாகராஜா கோயிலின் எழில்மிகு தோற்றம்

   

  நாக தோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாகத்  திகழ்கிறது நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோயில். குமரி மாவட்ட தலைநகராக விளங்கும் நாகர்கோவில் நகருக்கு இப்பெயர் வரக் காரணமாக அமைந்தது நாகராஜா கோயிலாகும். 

  நாகராஜ கோயிலின் முகப்பு

  குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு அடுத்து மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாகவும் நாகராஜா கோயில் விளங்கி வருகிறது. தமிழகத்தில் நாகர் வழிபாட்டுக்கு எனத் தனியாக அமைந்த கோயில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழப்பெரும்பள்ளம், கோடகநல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்) போன்ற கோயில்களில் மூலவரான சிவபெருமானை நாகங்கள் வழிபட்டுத் தங்களது கொடிய தோஷங்களை போக்கிக்கொண்டதால் இத்தலங்கள் பெருமை பெற்றன.

  இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

  ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகரே மூலவராக வீற்றிருக்கும் கோயில் நாகராஜா கோயில் மட்டுமே. முற்காலத்தில் இந்தப் பகுதி வயல்கள் சூழ்ந்த பகுதியாக இருந்தது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருந்த ஒரு பெண், ஒரு நெற்கதிரை அறுக்கும்போது அதிலிருந்து ரத்தம் வந்தது. இதைக் கண்டு பதறிய அப்பெண் இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் கூற அவர்கள் ரத்தம் வந்த இடத்தை பார்த்தபோது அங்கு ஒரு பாறையின் மேல் 5 தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது. அந்த நாகர் சிலையின் மேற்பகுதியிலிருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது.

    கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நாகர் சிலைகள்

  இதையடுத்து அந்த நாகர் சிலைக்குப் பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டதும் ரத்தம் வருவது நின்றுவிட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் தொடர்ந்து தினமும் அந்த நாகர் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து வந்தனர். இதனால் அவர்களது வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கின. இதைத் தொடர்ந்து நாகர் சிலைக்கு ஓலையால் வேய்ந்த குடிசை அமைத்து, நாகர் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.

  ஒருமுறை தோல் நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டு வந்த மார்த்தாண்டவர்மா, நாகராஜா கோயிலுக்கு வந்தார். அவர் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு பூரண குணமடைந்தார். இதனால் மனமகிழ்ந்த அரசன் அந்த இடத்தில் நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப ஓலைக் கூரையாலேயே அமைக்கப்பட்டது. 

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

  ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களே ஓலைக்கூரையைப் பிரித்து மீண்டும் புதிய கூரை வேய்கின்றனர். கேரள கட்டடக் கலை பாணியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் 5 தலைகளுடன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும் பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.

  கோயில் கொடிமரம்

  மூலவர் நாகராஜாவின் எதிரே உள்ள தூணில் நாக கன்னி சிற்பம் உள்ளது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. வயல் இருந்த இடம் என்பதால் இந்த இடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே கோயில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த மணல் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும்  மாறிக்கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

  நாகராஜர் சன்னதிக்கு வலதுபுறத்தில் காசி விஸ்வநாதர், அனந்தகிருஷ்ணன், கன்னிமூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன. மூலவரான நாகராஜருக்கு தினமும் பூஜைகள் நடந்த பின்னர்தான் மற்ற சன்னதிகளில் பூஜைகள் நடைபெறும். அர்த்தஜாம பூஜை மட்டும் முதலில் அனந்தகிருஷ்ணருக்கு நடத்தப்படுகிறது. நாகராஜா கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆனால் முக்கிய நுழைவாயில் தெற்கு நோக்கியே உள்ளது. இந்த வாசலை மகாமேரு மாளிகை என்று அழைக்கிறார்கள்.

  நாக தீர்த்தம்

  இக்கோயிலின் மூலவர் நாகராஜா என்றாலும் அனந்தகிருஷ்ணர் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தைப் பெருந்திருவிழா 10 நாள்கள் உற்சவமாக  வெகு விமரிசையாக நடைபெறும். 9ஆம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறும், இத்தேரில் அனந்தகிருஷ்ணர் எழுந்தருளி  வீதியுலா வருவார். பெருமாள் கோயில்களில் கொடி மரத்தின் உச்சியில் கருடன் இருப்பது வழக்கம், ஆனால் இங்கு ஆமை உள்ளது. பாம்பும் கருடனும் பகைவர்கள் என்பதால் கொடி மர உச்சியில் ஆமை இருப்பதாகக் கூறப்படுகிறது.

  இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப் பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

  நாக தோஷங்களை நீக்க நாகராஜா கோயில் ஒரு சிறந்த பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. நாகராஜரை வணங்குவோர் நோய், நொடியின்றி நலம் பெற்று வாழ்வார்கள் என்றும், குழந்தை இல்லாதவர்கள் மகப்பேறு அடைய நாகராஜரை வேண்டி வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்றும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத தோல் தொடர்பான நோய் நாகராஜரை தினமும் வழிபடுவதால் நீங்கிவிடுகிறது என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

   நுழைவு வாயிலில் துவாரபாலகர்களாக ஆண், பெண் நாகங்கள்

  ஓடவள்ளி என்ற கொடிதான் இந்த ஆலயத்தின் தல விருட்சமாகும். இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டியுள்ளான். அவன் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோயிலுக்கு வந்து விசேஷ வழிபாடுகள் செய்துள்ளான். அன்று தொடங்கிய வழக்கம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு பால் வார்ப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கோயில்  திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். குமரி மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜா கோயிலுக்கு வந்து பால், உப்பு, நல்ல மிளகு, மரப்பொம்மைகள் ஆகியவற்றைக் காணிக்கையாகச் செலுத்தி பயபக்தியுடன் வணங்கிச் செல்கிறார்கள்.

  இந்தக் கோயிலையும் வலம் வரலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

  ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) இந்த கோயிலின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி பால் அபிஷேகம் செய்யலாம். நாகராஜா கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.

  நாகராஜா கோயிலின் முன்பகுதியில் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்யும் நாகர் சிலைகள்

  ஆயில்ய நட்சத்திர நாள்களில் சிறப்பு வழிபாடு

  நாகராஜா கோயிலுக்கும் ஆயில்ய நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ராம அவதாரத்தில் லட்சுமணர் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். கிருஷ்ண அவதாரத்தின் போது அனந்தன் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். தற்போதைய கலியுகத்தில் நாகராஜா ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம்.

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

  எனவேதான் நாகராஜா கோயிலில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஆயில்ய நட்சத்திர தினத்தன்று முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும். மேலும் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவபூர்வ நம்பிக்கை.

  திருக்கோயிலுக்கு போக்குவரத்து

  பேருந்து அல்லது ரயிலில் நேரடியாக நாகராஜா கோயிலுக்கு வரலாம்.  விமானத்தில் வருபவர்கள் திருவனந்தபுரம் அல்லது தூத்துக்குடிக்கு வந்து கார் மூலம் திருக்கோயிலை அடையலாம். 

  ஆலய தரிசன நேரம்

  காலை 5.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். 

  கோயில் முகவரி

  அருள்மிகு நாகராஜா திருக்கோயில்

  நாகர்கோவில் - 629 001

  கன்னியாகுமரி மாவட்டம்

  தொலைபேசி எண்: 04652 - 232420

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp