திருமணத் தடை நீக்கும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்

திருமணத் தடை நீங்க இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து கல்வாழை பரிகாரப் பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 
ஞீலிவனேசுவரர் உடனுறை விசாலாட்சி அம்மன்
ஞீலிவனேசுவரர் உடனுறை விசாலாட்சி அம்மன்

ஆதி திருவெள்ளறை, அடுத்தது திருப்பைஞ்ஞீலி, சோதி திருவானைக்கா, சொல்லிக் கட்டியது திருவரங்கம் என்ற சொல்லாடல் தொடர்பு இந்த நான்கு  திருக்கோயில்களுக்கும் உண்டு.

காவிரி வடகரையில் பாடல்பெற்ற தலங்களில் 61-ஆவது தலமாக விளங்குவது திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயில். திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில் திருமணத்தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும், எமதர்மராஜனுக்கு தனி சன்னதி அமைந்திருப்பதும் இங்குதான்.

திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேசுவரர் திருக்கோயில் மொட்டைக் கோபுரம்.
திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேசுவரர் திருக்கோயில் மொட்டைக் கோபுரம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் ராஜாதிராஜ சோழன், சுந்தரபாண்டியன், மகேந்திர பல்லவ வர்மன் உள்ளிட்ட பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்திருக்கின்றனர். 

இராவணன் திருவாயில் கோபுரம்
இராவணன் திருவாயில் கோபுரம்

ஐந்து பிரகாரங்கள், ராவணன் திருவாயில் கோபுரம், மொட்டைக் கோபுரம் கொண்டது இக்கோயில். இராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இக்கோயிலின் ராஜகோபுரம் இராவணன் திருவாயில் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்குள்ளும், வெளிப்பகுதிகளிலும் சப்த தீர்த்தம், விசாலத் தீர்த்தம், எமத் தீர்த்தம், கல்யாணத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அப்பர் தீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகிய 7 தீர்த்தங்கள் உள்ளன.

சோறுடை ஈசுவரர் சன்னதி, இராவணன் திருவாயில் கோபுரப் பகுதி
சோறுடை ஈசுவரர் சன்னதி, இராவணன் திருவாயில் கோபுரப் பகுதி

திருப்பைஞ்ஞீலி என்று மட்டுமல்லாது தென் கயிலாயம், ஞீலிவனம், கதலிவனம், அரம்பைவனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்ரபுரி, மேலைச்சிதம்பரம் முதலிய பெயர்களும் இந்த ஊருக்கு உண்டு. இத்திருக்கோயில் இறைவன் ஞீலிவனநாதர் என்றழைக்கப்படுகிறார். மற்ற சிவத்தலங்களை இறைவனைத் தரிசிக்க நாம் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் சென்று வழிபடும் நிலை இருக்கும். ஆனால் இத்திருக்கோயிலில் அதற்கு எதிர்மாறாக, படிக்கட்டுகளிலிருந்து கீழே இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும்.

கோயில் உள்பகுதி
கோயில் உள்பகுதி

கருவறை சன்னதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் வசிஷ்ட முனிவருக்கு சிவபெருமான் நடனக் காட்சியருளிய இடம் இருக்கிறது. அதனாலேயே இக்கோயில் ரத்தினசபை எனப்படும் மேலைச் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. சுயம்பு வடிவத்தில் ஞீலிவனேசுவரர் காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு இங்கு உண்டு. அதாவது இக்கோயிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். இதில் நீள்நெடுங்கண் நாயகி சன்னதியில் நவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

திருமணத்தடை நீக்கும் பரிகாரத் தலம் 

பசுமையான ஞீலி என்னும் வாழை மரங்களை (கல்வாழை) தலவிருட்சமாகக் கொண்டிருப்பதால், இங்குள்ள இறைவன் ஞீலிவனநாதர் (வாழைவனநாதர்) என்றழைக்கப்படுகிறார்.

சப்த கன்னிகள் சன்னதி
சப்த கன்னிகள் சன்னதி

பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகள் இக்கோயிலில் கல்வாழைகளாக இருப்பதாக திருக்கோயில் புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திருக்கோயில் செவ்வாய் தோஷம், தார, புத்திர தோஷம் போன்ற பல்வேறு தோஷங்களை நீக்கும் (திருமணத்தடை நீக்கும்) பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

சப்த கன்னிகள்
சப்த கன்னிகள்

திருமணம் ஆகாமல் தடைப்பட்டிருக்கும் ஆண் அல்லது பெண் இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து, கல்வாழை பரிகார பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். கல்வாழைக்கு மாங்கல்யத்தைக் கொண்டு தாலிகட்டி பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஞீலிவனேசுவரர் திருக்கோயிலிலுள்ள கல்வாழை
ஞீலிவனேசுவரர் திருக்கோயிலிலுள்ள கல்வாழை

திருமணம் முடிவாகிய பின்னர், திருக்கோயில் நிர்வாகத்துக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பதும், திருமணம் முடிந்த பின்னர் தம்பதி சகிதமாக வந்து பரிகார நிவர்த்தி பூஜை செய்வதும் தொடர்ந்து வருகிறது. இது இன்றும் இக்கோயிலில் காண முடியும். திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் குங்கும-விபூதி பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது.

கல்வாழைப் பரிகாரப் பகுதியிலுள்ள அருள்மிகு யோகசக்தி அம்மன்
கல்வாழைப் பரிகாரப் பகுதியிலுள்ள அருள்மிகு யோகசக்தி அம்மன்

வாரத்தில் அனைத்து நாள்களிலும் பரிகார பூஜை செய்யப்பட்டாலும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவிலான கூட்டம் கூடுகிறது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, பிற மதத்தினரும் இந்த கல்வாழை பரிகாரப் பூஜையில் பங்கேற்பது தனிச்சிறப்பாகும்.

 கல்வாழைக்கு மாங்கல்யம் கட்டும் பெண்கள்
 கல்வாழைக்கு மாங்கல்யம் கட்டும் பெண்கள்
கல்வாழைக்குப் பரிகாரம் செய்த பின்னர், மாங்கல்ய பொட்டுவை உண்டியலில் செலுத்தும் பெண்
கல்வாழைக்குப் பரிகாரம் செய்த பின்னர், மாங்கல்ய பொட்டுவை உண்டியலில் செலுத்தும் பெண்

கல்வாழை பரிகார பூஜைக்கான பொருள்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தொகையை செலுத்தி, பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

கல்வாழைக்கு மாங்கல்யம் கட்டும் ஆண்கள்
கல்வாழைக்கு மாங்கல்யம் கட்டும் ஆண்கள்

எமதர்மராஜனுக்கு தனி சன்னதி 

திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட எமதர்மராஜனுக்கு, இறைவன் மீண்டும் குழந்தையாய் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்ப அளித்த கோயில் இது.

எமதர்மராஜனுக்கு உயிரை எடுக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டதால், பூமியில் பிறப்பு என்பது மட்டும் இருந்து, இறப்பு என்பது இல்லாமல் போனால் பூமி தாங்காது எனக் கூறி, பூமாதேவியிடம் தேவர்கள் முறையிட்டனர். 

 அதிகாரவல்லவர் (எமதர்மராஜன் சன்னதி) சன்னதி
 அதிகாரவல்லவர் (எமதர்மராஜன் சன்னதி) சன்னதி

இதைத் தொடர்ந்து, தைப்பூசத் தினத்தில் எமதர்மராஜனுக்கு சிவபெருமான் உயிரை எடுக்கும் அதிகாரத்தை வழங்கியதால், இங்குள்ள சன்னதி அதிகாரவல்லவர் சன்னதி என அழைக்கப்படுகிறது. இங்கு சோமாஸ்கந்தருடன் தாட்சாயிணி அம்பிகா சமேத மிருத்யுஞ்ஜயர் இறைவனாகக் காட்சியளிக்கிறார். இறைவன் காலின் கீழ் முயலகன் வடிவம் காணப்படுகிறது.  

எம தீர்த்தம்
எம தீர்த்தம்

அதிகாரம் இழந்தவர்கள், உத்தியோகம் இல்லாமல் இருப்பவர்கள், கடன் பிரச்னையால் சிக்கித் தவிப்பவர்கள் இச்சன்னதியில் வழிபட்டால் பலன் பெறுவர் என்பது ஐதீகம். சனிக்கிழமைகளில் வழிபடுவது மேலும் சிறப்பாகும். இச்சன்னதியில் ஆயுள் ஹோமமும் நடத்தப்படுவது உண்டு. தமிழகத்தில் குடைவரைக் கோயில்களைக் கொண்டவையில் இங்கு அமைந்துள்ள எமதர்மராஜ சன்னதியும் ஒன்றாகும். 

திருவிழாக்கள் 

இத்திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். சித்ரா பௌர்ணமி தினத்தில் தேரோட்டம் நடைபெறும். இவைத் தவிர சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தன்று அப்பர் திருக்கட்டமுது பெருவிழாவும் நடத்தப்படும். 

காலில்  முயலகன் உருவ வடிவத்தில் எமதர்மராஜனை மிதித்தவாறு  சோமாஸ்கந்தருடன் அருள்மிகு தாட்சாயிணி அம்பிகா சமேத மிருத்யுஞ்ஜயர்.
காலில்  முயலகன் உருவ வடிவத்தில் எமதர்மராஜனை மிதித்தவாறு  சோமாஸ்கந்தருடன் அருள்மிகு தாட்சாயிணி அம்பிகா சமேத மிருத்யுஞ்ஜயர்.

அப்பர் திருக்கட்டமுது பெருவிழா 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர், திருவானைக்கா சம்புகேசுவரர், திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரை அப்பர்  தரிசனம் செய்துவிட்டு, திருப்பைஞ்ஞீலியைக் காண வந்தபோது கடும் வெயிலாலும், அகோர பசியினாலும் நடைத் தளர்ந்து வந்தார். தன்னைக் காணவந்தவர் பசியால் தளர்ந்த நிலையில் இருப்பதை உணர்ந்த சிவபெருமான், கட்டுசாதத்துடன் அந்தணர் வேடம் பூண்டு  திருப்பைஞ்ஞீயிலிருந்து 1 கி.மீ. தொலைவுக்கு அப்பால்  உள்ள பகுதியில் அப்பரின் பசியைப் போக்கி, அவரைத் திருக்கோயில் வரை அழைத்துவந்ததாக புராணத் தகவல்களில் கூறப்பட்டுள்ளன.

அப்பருக்கு சிவபெருமான் திருக்கட்டமுது அளித்து பசியைப் போக்கிய விழாவை விளக்கும் காட்சி.
அப்பருக்கு சிவபெருமான் திருக்கட்டமுது அளித்து பசியைப் போக்கிய விழாவை விளக்கும் காட்சி.

திருக்கோயில் வரை அந்தணர் வேடத்தில் வந்த சிவபெருமான், திடீரென மறைந்து பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் அப்பருக்குக் காட்சியளித்தாராம். அதன் பின்னர்தான் தனது பசியைப் போக்கி, தன்னை திருக்கோயில் வரை அழைத்து வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்து, அப்பர் மனமுருகி வழிபட்டார்.  பார்வதி தேவியுடன் ரிஷபாருட வாகனத்தில் சிவபெருமான் அப்பருக்குக் காட்சியளித்த தலமாக திருப்பைஞ்ஞீலி விளங்குகிறது. இதனால் இங்குத் தனி சன்னதியில் சோறுடைஈசுவரர் காட்சியளிக்கிறார். 

சோறுடை ஈசுவரர் சன்னதி
சோறுடை ஈசுவரர் சன்னதி

சூரிய பூஜை 

பங்குனி, புரட்டாசி மாதங்களின் 6,7,8-ஆவது நாள்களில் சூரிய பூஜை பெருவிழா நடைபெறுகிறது. கோயிலிலுள்ள சூரிய பெருமானுக்கு இந்த நாள்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சூரிய ஒளி இறைவன் மீது படும் வகையில் கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூஜைகள் இன்றளவும் உபயதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. 

சோறுடை ஈசுவரர் சன்னதிக்கு எதிரிலுள்ள நந்தி
சோறுடை ஈசுவரர் சன்னதிக்கு எதிரிலுள்ள நந்தி

தைப்பூசத் தீர்த்தவாரி 

தைப்பூசத் தினத்தன்று கொள்ளிடக் கரையில் சுவாமி எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் மற்ற கோயில்களின் சுவாமிகளுடன் சேர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

ஆடிப்பூரத் தேரோட்டம் 

நூறாண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் இருந்த அம்மன் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. உபயதாரர்களைக் கொண்டு புதிய தேர் வடிவமைக்கப்பட்டு, தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கிராமத்திலுள்ள காவல் தெய்வமான அருள்மிகு வனத்தாயி அம்மன் மாசித் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஒரு வாரக் காலத்துக்கு இந்த விழா நடைபெறும்.

நவக்கிரக விக்ரகங்கள் கிடையாது 

மற்ற கோயில்களில் நவக்கிரகங்கள் விக்கிரகங்களாக இருக்கும். ஆனால் இத்திருக்கோயிலில் 9 படிகள் 9 நவக்கிரகங்களாகவும், 9 தீப வடிவிலும் உள்ளதாக ஐதீகம். எமன் சனீஸ்வரனுக்கு அதிபதி என்பதால் இக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது.

திருப்பைஞ்ஞீலி கோயிலில் காணப்படும் நவக்கிரக குழிகள்
திருப்பைஞ்ஞீலி கோயிலில் காணப்படும் நவக்கிரக குழிகள்

இக்கோயிலில் பிரகாரத்தில் விநாயகர், சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் பெருமாளுடன் சேர்ந்தபடி காட்சியளிப்பதும், தட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் சிறப்புக்குரியது.  இவற்றைத் தவிர,  இறைவன் ஞீலிவனநாதரின் சன்னதியின் பின்புறத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பதும் விசேஷமானது.

செந்தாமரைக் கண்ணன் சன்னதி
செந்தாமரைக் கண்ணன் சன்னதி

இக்கோயில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயில்

திருப்பைஞ்ஞீலி  (அஞ்சல்),

மண்ணச்சநல்லூர் வட்டம்,

திருச்சி - 621005.

அலுவலகத் தொலைபேசி எண்: 0431- 2902654.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com