Enable Javscript for better performance
பாலதோஷம் போக்கும் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்- Dinamani

சுடச்சுட

  பாலதோஷம் போக்கும் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்

  By கு. வைத்திலிங்கம்  |   Published on : 15th October 2021 01:44 PM  |   அ+அ அ-   |    |  

  MANDURAITEMPLE-29

  பாலதோஷம் போக்கும் திருமாந்துறை ஆம்ரவனேசுவரர்

  நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
  ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
  மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணை நாளும்
  கோல மேத்திநின் நாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே


  என திருஞானசம்பந்தரால்  காவிரி வடகரை மாந்துறை தேவார திருப்பதிகம் பாடல் பெற்றது திருமாந்துறை அருள்மிகு  பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்.

  சூரியனின் வெப்பக்கீற்றைப் பொறுத்து தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை வேண்டி, சமுக்ஞை தேவி வழிபட்ட திருக்கோயில்.

  மாந்துறை அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில் ராஜகோபுரம்

  சிவனை அழையாமல் தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர வந்து வழிபட்டது, திருவண்ணாமலையில் சிவனது முடியினைக் கண்டுவிட்டதாக பொய்கூறி சாபம் பெற்ற பிரம்மன் தன் சாபம் நீங்க வழிபட்டது, மிருகண்டு முனிவர் தவமிருந்து மார்க்கண்டேயனைப் பெற்றது இக்கோயிலில்தான்.

  தாயை இழந்த மான்குட்டிக்காக சிவனும், சக்தியும் மானுருவம் எடுத்துக் காப்பாற்றியது, ககோளர்  மகன் மருந்தாந்தகன் என்னும் மன்னனின் மாத்ருகணதோஷம் நீங்கப் பெற்றும், மருந்தாந்தகன் சாபவிமோசனம் பெற்றது, கௌதமர் வடிவில் அகலிகையை இந்திரன் தீண்டியதால் கௌதமர் விட்ட சாபதோஷம் நீங்கியது, ஆதிசங்கரர் வழிபட்டது, மூலம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பரிகாரத் தலம்,  குழந்தைகளுக்கான பாலதோஷம் நீக்கும் பரிகாரத் தலம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்திருக்கோயில்.

  கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு காட்சிகள்

  காவிரியின் வடகரையில் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 58-ஆவது தலமாக விளங்குவது திருமாந்துறை கோயில். இது மூர்த்தி, தலம், கீர்த்தி எனும் மூன்றிலும் சிறப்புடையது.  மாமரங்கள் நிறைந்த இப்பகுதியில் எழுந்தருளிய ஈசனுக்கு மாந்துறை நாதர் எனப்படும் ஆம்ரவனேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

  திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மாந்துறையில் அமைந்த இத்திருக்கோயிலைப் பற்றி சேக்கிழார் பெரியபுராணத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும்,  வடலூர் ராமலிங்க அடிகளார் திருவருட்பாவிலும் பாடியுள்ளனர்.  திருமாந்துறை எனப்படும் இத்திருக்கோயில் ஆம்ரவனம், ப்ருமம் தீர்த்தபுரம், பிரம்மானந்தபுரம், அகாபஹாரி, மிருகண்டீசுவரபுரம், மிருகதீர்த்தபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.

  மாந்துறை ஆம்ரவனேசுவரர் சன்னதி வாயில்

  சாபவிமோசனம் பெற்ற மருதாந்தகன்
  சரஸ்வதி நதிக்கரையிலுள்ள சாரத்வதம் என்ற குடியிருப்புப் பகுதியில் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த ககோளர் என்ற முனிவர் (அந்தணர்) வாழ்ந்து வந்தார். அவருக்கு லீலாவதி என்ற மனைவியும், மருதாந்தகன் என்ற மகனும் இருந்தனர்.

  ககோளரின் மறைவுக்குப் பின்னர்  மருதாந்தகன் கல்வி, வேள்விகளில் தேர்ச்சி பெற வெளியூர் சென்றான். புலனடக்கம்,  ஒழுக்கம் ஆகிய குணங்களைப் பெறாத லீலாவதி நிலைத்தடுமாறி, பிற ஆடவர்களுடன் பழகித் திரிந்தாள். தன் ஊரில் இல்லாமல் கோதாவரி நதிக்கரையிலுள்ள உத்தமபுரத்தில் இருந்தாள்.

  அருள்மிகு பாலாம்பிகா அம்மன் சன்னதி

  இதற்குள் சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்த மருதாந்தகனுக்குத் தனது அவையில் மந்திரி பதவி அளித்தார் அந்நாட்டு அரசன். அப்போது மன்னிக்க முடியாத தோஷத்தை செய்த மருதாந்தகன் தனது தவறுக்குப் பரிகாரம் செய்ய முற்பட்டான். தன்னையறியாமல் இக்குற்றம் செய்ததால் அதற்குரிய பரிகாரத்தை முனிவர்கள் கூறினர்.

  அருள்மிகு நர்த்தன விநாயகர்.

  இரும்பால் உருவான கருப்பு மணிகளைக் கோர்த்து, மாலையை கழுத்தில் கட்டியவாறு பல திருத்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரையாகச் சென்று, தான் செய்த குற்றத்தை வெளிப்படையாகக் கூறுமாறு மருதாந்தகனிடம் முனிவர்கள் கூறினர்.

  எந்த இடத்தில்  இரும்பு மணிகள் இரத்தினக் கற்களாக மாறுகின்றனவோ, அந்தப் பகுதியில் சாமவிமோசனம் கிடைக்கும் எனவும் முனிவர்கள் தெரிவித்தனர்.  காவிரி வடகரையில் அகம்ஹரம் என்ற இடத்தில் மருதாந்தகன் முறைப்படி தவமியற்றினான். பின் அருகிள்ள ஆம்ரவனம் சென்ற போது இரும்புமணிகள் இரத்தினங்களாக மாறின.

  தனக்கு சாபவிமோசனம் கிடைத்த இடத்தில் மருதாந்தகன் இறைவழிபாடு நடத்தினான். பின்னர் தாம் தவம் இயற்றிய அகம்ஹரத்தில் (ஆங்கரை) தனது பெயரால் மருதாந்தேசுவரர் என்ற லிங்கத்தையும், அதற்குப் பூஜை நடத்தும் அர்ச்சகர்கள் வாழ ஒரு அக்ரஹாரத்தையும் நிறுவினான்.

  கற்பு நெறி தவறித் தவறான வழியில் சென்ற லீலாவதியைக் கருப்பு ஆடை தரித்து, தலங்களில் புனித நீராடிவழிபடுமாறு தவசிகள் அறிவுரை வழங்கினர். முடிவில் ஆம்ரவனத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நீராடி,  ஈசனை வழிபட்டாள்  லீலாவதி.

  கோயில் வளாகத்திலுள்ள வில்வமரம்

  அங்காரக சதுர்த்தி நாளில் ஜைமினி என்ற முனிவர் தனது கரத்திலுள்ள கலசத்தில் பிரம்மதீர்த்ததிலிருந்து நீர் எடுத்து அபிஷேகம் செய்ய முற்பட்ட போது, லீலாவதியின்  கருப்பு ஆடை வெண்பட்டாக மாறியது.

  லீலாவதி  சாப விமோசனம் அடைந்த செய்தி ககோள முனிவரை எட்டியது. இருப்பினும் அச்சம்பவத்தை அவர் நம்ப மறுத்தார். லீலாவதியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆம்ரவனத்திலிருந்த மாமரமும், பிரம்ம சரஸ் என்ற புனித புனலும் முனிவர் முன் தோன்றின. ஜைமினி முனிவர் அருளால் லீலாவதி புரிந்த பாவங்கள் நீங்கியதாக அவை சாட்சி கூறிவிட்டு உடன் மறைந்தன. பாவம் நீங்கி பரிசுத்தம் அடைந்த லீலாவதியை ககோள முனிவர் ஏற்றார்.

   

  சாபவிமோசனம்  அளித்த திருக்கோயில்

  தென்னகத்தில் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த சில அந்தணர்கள்  ஆசிரமத்தைச் சேர்ந்த பசுக்களிடமுள்ள அனைத்துப் பாலையும் எடுத்துக் கொண்டு, கன்றுகளைப் பசியால் தவிக்கச் செய்தனர். ஆநிரைகளை பேணிவந்த இடையனுக்கும் சரிவர ஊதியம் அளிக்கவில்லை.  இடையன் தனது கோபத்தை ஆநிரைகள் மீது காட்டி, அவற்றை அடித்தான்.

  இப்பாவச் செயல்களின் விளைவாக அந்தணர்கள் மான் ஜோடியாகவும், மான் குட்டிகளாகவும், இடையன் வேடனாகவும் மறுபிறவியெடுத்தனர். பாவம் புரிந்த போதிலும் அந்த வேதியர்கள் தல யாத்திரையின்போது அங்கு வந்த உக்கிரபாக முனிவருக்குப் பூஜைகள் நடத்தி, மலர்களை அளித்ததால் ஆம்ரவனத்தில் மான்களாக பிறக்கும் பேறு பெற்றனர். வேடன் மான் ஜோடியை வேட்டையாடிக் கொன்றான். தனியே விடப்பட்ட மான்குட்டிகள் பரிதவித்தன.

  அர்த்தமண்டப வாயிலின் முன்பு இடதுபுறத்தில் அமைந்துள்ள விநாயகர்.

  அவ்வழியே வந்த மிருகண்டு முனிவர் மான்குட்டிகளிடம் கருணைக் காட்டுமாறு ஈசனிடம் முறையிட்டார்.  ஈசனும் - மான்குட்டிகளுக்கு சாபவிமோசனம் அளித்தார். மிருகண்டு முனிவர் உதவியுடன் மான்கள் இறையருள் பெற்றதால் இத்திருக்கோயில் மிருகதீர்த்தபுரம் எனப் பெயர் பெற்றது. மேலும் மிருகண்டு முனிவர்கள் இத்தலத்து ஈசனை வழிபட்டு, அவர் அருளால் மார்க்கண்டேயரை மகனாகப் பெற்றாராம்.

  மான்களுக்கு சாபவிமோசனம் அளித்தது குறித்து மற்றொரு தகவலும் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.  முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகிரிஷி ஒருவர் சிவ அபசாரம் செய்ததால் மானாகப் பிறக்கும்படி சாபம் பெற்றார்.
   

  மயில் மீது சாய்ந்த கோலத்தில் அருள்மிகு வள்ளி-தெய்வசேனா சமேதராய் சுப்பிரமணியர்.

  இவ்வனத்திலேயே தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டிமானை விட்டுவிட்டு தாய், தந்தை மான்கள் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்திலேயே வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி, சாப விமோசனம் தந்தனர்.

  இரவு நெடுநேரம் ஆகியும் தாய்மான் இருப்பிடத்துக்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான், கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக மானுக்கு பசியெடுக்க அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடிய குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் குட்டிமானை ஆற்றுப்படுத்தினார்.

  சிவன், பார்வதி தரிசனம் பெற்ற குட்டி மான், தன் சாபத்துக்கு விமோசனம் பெற்று மீண்டும் மகிரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காகவே சிவன் இத்திருக்கோயிலில் ஆம்ரவனேசுவரராக சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.

  கஜலட்சுமி

  பிரம்மன் சாபம் நீக்கியது

  ஈசனின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்த பிரம்மன், ஈசனால் ஒடுக்கப்பட்டான். பரிகாரமாக இங்கு அசுவமேதயாகம் செய்ய விரும்பினான். இத்திருக்கோயிலுக்கு அருகே அசுவமேதயாகம் நடத்த  பிரம்மதேவன் ஏற்பாடு செய்தான்.

  யாகம் தொடங்குவதற்கு முன்னர் அபிவருத ஸ்நானம் செய்வதற்காக நான்முகன் காயத்ரி தேவி உதவியை நாடினான்.  காயத்ரிதேவி  இத்திருக்கோயிலின் கிளை ஆறாக லிங்கத்துக்கு தென்புறம் ஓடிக் காவிரியில் சங்கமமானாள். இதுவே காயத்ரிநதி என்ற பெயருடன் கோயிலுக்குரிய புண்ணியநதியாக விளங்குகிறது. கோயிலுக்கு நேர் எதிரில் பிரம்மதீர்த்த குளமும் அமைந்துள்ளது.

  புத்திரபாக்கியம் அருளும் கோயில்

  வைஜயந்தம் என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்த ஸ்வேதகேது என்ற அரசன், சிறந்த சிவபக்தன் ஆவான். தான தருமங்கள் செய்த போதிலும் அவனுக்கு புத்திரப் பாக்கியம் ஏற்படவில்லை.

  மனசஞ்சலத்துடன் இருந்த அரசினின் கனவில் இறைவன் காட்சியளித்தார். ஆம்ரவனத்தில் எழுந்தருளிய லிங்கத்திருமேனியை உள்ளடக்கியவாறு விமானம், மண்டபங்கள்,கோபுரம் ஆகியவற்றுடன் கூடிய பெரிய திருக்கோயிலை உருவாக்குமாறு ஈசன் கட்டளையிட்டார்.

  கோயிலின் உள்பிரகாரம்

  அவ்வாறே ஸ்வேதகேதுவும் அனைத்து பரிவாரத் தேவதைகளையும் நிறுவி, பிரம்மாண்டமான கோயிலைக் கட்டச் செய்தான். திருப்பணிகள் நிறைவேறியவுடன் குடமுழுக்கு விழாவையும் நடத்தினான். இறையருளால் அரசனின் வம்சத்தை விருத்தி செய்ய ஒரு புத்திரன் பிறந்தான். எனவே இத்திருக்கோயிலில் குழந்தைபேறு இல்லாதவர்கள் அர்ச்சித்தால் குழந்தைபேறும் ஏற்படும் என்பது ஐதீகம்

  இறைவன் மாந்துறைநாதர்

  ஒரே மண்டபத்தில் மாந்துறைநாதர் எனப்படும் இறைவன் ஆம்ரவனேசுவரரும்,  இறைவி பாலாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். சுவாமி சன்னதி வாயிலுக்கு மேல் ஈசன் மான் குட்டிகளைக் காத்த சம்பவமும், மிருகண்டு முனிவர் அருளிய காட்சியும் சிற்ப வடிவில் அமைந்துள்ளன. அர்த்த மண்டப நுழைவுவாயிலில்  விநாயகரும், பாலதண்டாயுதபாணியும் காட்சியளிக்கின்றனர்.

  மூலவர் ஆம்ரவனேசுவரர்

  கருவறையில் மூலவரான ஆம்ரவனேசுவரர் லிங்கவடிவத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தமிழில் இத்திருக்கோயில் இறைவன் மாந்துறைநாதர் என அழைக்கப்படுகிறார்.  ஆதிரத்னேசுவரர், சுத்தரத்தேனசுவரர், மிருகண்டீசுவரர் ஆகிய பெயர்கள் தலப்புராணத்தில் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.

  மான்களாக பிறந்த அசுரத் தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தி தினத்தன்று  விமோசனம் தந்ததாக ஐதீகம். இதனடிப்படையில் மாந்துறை ஆம்ரவனேசுவரருக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தியன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.  இந்நேரத்தில் இறைவனை வழிபட்டால், குறைவில்லாத வாழ்க்கை, பாவ மன்னிப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

  இறைவி பாலாம்பிகை அம்மன்

  சுவாமி சன்னதிக்கு அருகில் தனி சன்னதியில் இறைவி பாலாம்பிகை அம்மன் எழுந்தருளியுள்ளார். தமிழில் இவருக்கு அழகம்மை என்ற பெயர் வழங்கப்படுகிறது.  அம்மனின் மேற்கரங்கள் தாமரை மலர்களை எழிலூட்டுகின்றன. கீழுள்ள கரங்கள் வரத, அபய முத்திரைகளையும் வழங்குகின்றன.

  அருள்மிகு பாலாம்பிகை அம்மன்

  பாலதோஷத்தில் கஷ்டப்படும் குழந்தைகள் இக்கோயிலில் பாலாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அபிஷேக தீர்த்தத்தை பருகி வர பாலதோஷம் விலகும் என்பது ஐதீகம்.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், தங்கள் குழந்தைளின் பாலதோஷம் போக்க இக்கோயில் இறைவியை வழிபட்டுச் செல்கின்றனர்.

  மூலம் நட்சத்திர பரிகாரப் பூஜை

  மூலம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்குரியவர்களுக்கான திருக்கோயில் என்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இத்திருக்கோயில் இறைவன் ஆம்ரவனேசுவரரை (மாந்துறை நாதர்) வணங்கினால், உரிய பலன்களைப் பெறுவர் என்பது ஐதீகம்.

  மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று பரிகார ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. ரூ.301 கட்டணம் செலுத்தி, பக்தர்கள் பரிகாரஹோமத்தில் பங்கேற்கலாம். தற்போது கரோனா காலமாக இருப்பதால், பரிகார ஹோமம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் மூலம் நட்சத்திரத்தன்று இக்கோயிலில் இறைவனுக்கும், இறைவிக்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து, தங்களது பரிகாரப் பூஜையை செய்து கொள்ளலாம்.

  கோயிலின் வடிவமைப்பு

  கோயிலின் புறச்சுவர்களிலுள்ள கோஷ்ட பஞ்சாரங்களில் தெற்கில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி,  ஆதிசங்கரர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன. மேற்குக் கோட்டத்தில் மகா விஷ்ணுவும், வடக்குப் புறத்தில் துர்க்கை அம்மனும் எழுந்தருளியுள்ளனர்.
   

  கோயிலில் எதிரில் அமைந்துள்ள நந்தி.

  வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் விநாயகர் தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மயில் மீது சாய்ந்த கோலத்தில் வள்ளி, தெய்வசேனா சமேதராய் அருள்மிகு சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். இதைத் தொடர்ந்து அருகே தண்டாயுதபாணியும், கஜலட்சுமியும் தனி சன்னதிகளைக் கொண்டுள்ளனர்.  வடபிரகாரத்தில் வில்வமரமும் அமைந்துள்ளது.

  இதையும் படிக்கலாமே.. பித்ரு தோஷம் நீக்கும் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயில்

  தல விருட்சம் மாமரம்

  மற்ற கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் தல விருட்சத்திலும் தனி சிறப்பு பெற்றிருக்கிறது. மாந்துறை நாதர் திருக்கோயிலின் தென்புறத்தில் தலவிருட்சமாக மாமரம் அமைந்துள்ளது. இதை வடமொழியில் ஆம்ரம் எனக் குறிப்பிடுவர். மாமரங்கள் மிகுந்து வளர்ந்திருந்த வனப்பகுதி ஆம்ரவனம் எனப்பட்டது.

  தனி சிறப்பு பெற்ற நவக்கிரகங்கள்

  இத்திருக்கோயிலில் எழுந்தருளிய நவக்கிரகங்கள் தனி சிறப்பு பெற்று விளங்குகின்றன.  நவக்கிரகங்களிலுள்ள சூரியன்,  சமுக்ஞை (சமுக்யாதேவி), சாயா தேவியுடன் தம்பதி சமேதராய் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.

  நவக்கிரகங்கள்

  மேலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தவாறும் அமைந்துள்ளன. சூரியன், பைரவரும் இதே பகுதியில் காட்சியளிக்கின்றனர். இந்த சிறப்புக்கும் தனி கதை உள்ளது.

  தட்சனின் மகளான அதிதி, தவத்தில் சிறந்த மரீசி முனிவரை மணந்து, ஆரியதேவனை ஈன்றாள். வேத சிற்பியான விசுவகர்மாவின் மகளான சமிக்ஞையை சூரியன் தனது பத்தினியாக ஏற்றான். இத்தம்பதியிருக்கு வைவவஸ்த மனு எனப்படும் சிரார்த்ததேவன் மகனாகப் பிறந்தான்.  அடுத்து யமதர்மனும், யமமுனாநதி தேவதையும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர்.

  சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளி,வெப்பம் ஆகியவற்றை சமிக்ஞையால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதனால் துன்பட்ட சமிக்ஞை தனது நிழலுக்கு ஒரு வடிவம் கொடுத்து, அதற்கு சாயாதேவி எனப்பெயரிட்டாள்.

  சுவாமி சன்னதி வாயிலுக்கு மேல் ஈசன் மான் குட்டிகளைக் காத்த சம்பவமும் மிருகண்டு முனிவர் அருளிய காட்சி விளக்கம்

  தனக்குப் பதிலாக சூரியனுக்குப் பணிவிடை செய்யுமாறு கூறிவிட்டு, சமிக்ஞை வேறு இடம் சென்றாள். ஆள்மாறாட்டம் பற்றி அறியாத சூரியன், சாயாதேவியுடன் இல்லறம் நடத்தினான். சாயாதேவி மூலம் ச்ருகச்வர்ஸ், ச்ருதகர்மா, தபதீ ஆகிய மூவர் பிறந்தனர்.

   கைத்தடியை ஊன்றவாறு காட்சியளிக்கும் சுந்தரர்.

  தனக்குக் குழந்தைகள் உண்டான பின்னர், சாயாதேவி சமிக்ஞையின் வாரிசுகளை மாற்றான் தாய் போலவே நடத்தினாள். யமனேயே ஒருமுறை சபித்தாள். இச்சம்பவத்துக்குப் பிறகு சூரியன் உண்மையை உணர்ந்தான்.

  சமிக்ஞை  பெண் குதிரை வடிவெடுத்து, ஆம்ரவனப் பகுதியில் சிவவழிபாடு செய்வதாக அறிந்தான். விசுவகர்மாவின் அறிவுரையின்படி சூரியன் தனது உக்கிரத் தன்மையைக் குறைக்கச் செய்தான். தானும் குதிரை வடிவம் பூண்டு சமிக்ஞையைச் சந்தித்தான்.

  பெண் குதிரை வடிவிலுள்ள சமிக்ஞையின் நாசியிலிருந்து அசுவினித் தேவர்கள் தோன்றினர். பின்னர் சூரியன் சமிக்ஞையை ஏற்று, ஆம்ரவன நாதரைப் பூஜித்தான்.  உக்கிரம் குறைந்த சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பத்தைத்தாங்கும் சக்தியை சமிக்ஞைக்கு ஆம்ரவனேசுவரர் வழங்கினார். சூரியனும், சந்திரனும் இத்திருக்கோயில் இறைவனை வழிபட்டு பகல், இரவு ஆகிய காலங்களுக்கு அதிபதியாகும் பேறு பெற்றனர்.

  பைரவர், சூரியன்.

  சூரியபூஜை
  பங்குனி மாதத்தின் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீது படும் அரிய நிகழ்வு சூரியபூஜையாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போது இறைவனைத் தரிசித்தால்  பிறவி இல்லா நல்வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் 3 நாள்களில் சூரிய பூஜை நடைபெறுகிறது.

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

  நால்வர்
  அம்மன் சன்னதிக்கு முன் மண்டபத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய  நால்வரின் திருமேனிகள் எழுந்தருளப்பட்டுள்ளன. இதில் சுந்தரர் கைத்தடியை ஊன்றியவாறு காட்சியளிக்கிறார்.  இது மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு.

  கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள காவல் தெய்வம் கருப்புசாமி , பண்டிதர்சாமி, வீரன்.

  காவல் தெய்வங்கள்
  கோயிலுக்கு வெளியே கருப்புசாமி, பண்டிதர்சாமி, வீரன் ஆகிய கிராமக் காவல் தெய்வங்களின் சன்னதி ஆலமரத்துடன் அமைந்துள்ளது. கிராமத்துக்கு மட்டுமல்ல, கோயிலுக்கும் காவலராக கருப்புசாமி எழுந்தருளியுள்ளார். கருப்புசாமிக்கு எதிரே  மண்ணால்  உருவான பெரியக் குதிரைகள் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

  கருப்புசாமி சன்னதியில் உள்ள குதிரைகள்.

  தங்களது வேண்டுதல்கள், கோரிக்கைகளை நிறைவேற வேண்டும் என பிரார்த்திப்பவர்கள், வேண்டுதலும், கோரிக்கைகளும் நிறைவேறிய பின்னர் கருப்புசாமிக்குப் பூஜைகளை நடத்தி, படையல்களை அளிக்கின்றனர். வேண்டுதலுக்காக வேல், சிறிய யானை போன்ற உருவங்களை கருப்புசாமிக்கு அளிக்கின்றனர். இந்த ஆலமரத்து வேர்மண் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மண் பயந்த கோளாறுகளுக்கு எடுத்துச் சென்று வழங்கலாம்.

  ஆதிசங்கரர்.

  திருவிழாக்கள்

  சித்திரை மாதத்தில் தமிழ் வருடப்பிறப்பு, வைகாசியில் ஸ்ரீசங்கரர் ஜயந்தி, ஆடி மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரிப் பெருவிழா,  ஐப்பசியில் அன்னாபிஷேகம், தீபாவளியன்று விசேஷ பூஜை, கார்த்திகையில் சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழியில்  திருவாதிரை வழிபாடு, தைதமாத்தில்  பொங்கல் விழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி, நடராஜர் அபிஷேகம், மாசி மகப் பெருவிழா போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன.

  குடமுழுக்கு
  இக்கோயிலில் 2001, ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து 2014, செப்டம்பர் 7-ஆம் தேதியும் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கின் போது பல்வேறு பணிகள் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  பிரம்ம தீர்த்தம்.

  கோயில் திறந்திருக்கும் நேரம்
  காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும்
  மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

  எப்படி செல்வது?
  திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவிலும், நெ.1.டோல்கேட்டிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் மாந்துறை ஆம்ரவனேசுவரர் உடனுறை பாலாம்பிகை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

  இத்தலத்தைப் பற்றியும் அறியலாம்... திருமணத் தடை நீக்கும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்

  தென் மாவட்டங்களிலிருந்தும், மத்திய மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், நெ.1 டோல்கேட், வாளாடி வழியாக கோயிலை வந்தடையலாம்.  சென்னை போன்ற வட மாவட்டங்கள்,  சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1.டோல்கேட், வாளாடி வழியாக மாந்துறை வந்தடையாலம்.

  சுவாமி சன்னதி கோபுரத்துடன் உள் பிரகாரப் பகுதி.

  திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மாந்துறை கோயிலுக்குச் செல்ல லால்குடியிலிருந்து ஆட்டோ வசதிகளும் உள்ளன.  ரயில், விமானம் மூலம் வருபவர்கள் திருச்சியிலிருந்து கோயிலுக்கு வர ஆட்டோக்கள், கார் போன்ற வசதிகள் உள்ளன.

  தொடர்பு முகவரி
  செயல் அலுவலர்,
  அருள்மிகு பாலாம்பிகை உடனுறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில்,
  மாந்துறை,
  லால்குடி வட்டம்,
  திருச்சி மாவட்டம் - 621703.

  படங்கள் : எஸ். அருண்


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp