செவ்வாய், சனி தோஷம் போக்கும் பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து ஊராட்சிக்குள்பட்ட பெருங்குடியிலுள்ள  அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை அகஸ்தீசுவரர் திருக்கோயில்.
செவ்வாய், சனி தோஷம் போக்கும் பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்
செவ்வாய், சனி தோஷம் போக்கும் பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்
Published on
Updated on
6 min read


கண் பார்வைக்கான பிரார்த்தனைத் தலமாகவும்  செவ்வாய் மற்றும் சனி  தோஷம் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது திருச்சி மாவட்டம்,  ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து ஊராட்சிக்குள்பட்ட பெருங்குடியிலுள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை அகஸ்தீசுவரர் திருக்கோயில்.

அகஸ்தீசுவரர் திருக்கோயில் நுழைவுவாயில்
அகஸ்தீசுவரர் திருக்கோயில் நுழைவுவாயில்

கி.பி. 969-ஆம் ஆண்டில் சுந்தர சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட  இக்கோயில், இரண்டாம் ஆதித்தன் காலத்தில் பராமரிக்கப்பட்டது. சோழ மன்னர் சுந்தர சோழர், போசள மன்னர் வீரராமநாதன், பாண்டிய மன்னர்கள் இத்திருக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றிய பதிவுகள்  கல்வெட்டுகளில் உள்ளன.

கோயில் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளின் சிறப்பை விளக்கும் அர்ச்சகர் வெ.கோவிந்தராஜ் ஐயர்
கோயில் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளின் சிறப்பை விளக்கும் அர்ச்சகர் வெ.கோவிந்தராஜ் ஐயர்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  இக்கோயிலில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்ட ஆனித் திருமஞ்சனம், திருவாதிரை விழா பற்றிய கல்வெட்டுகளும் கோயில் பிரகாரத்தில் காணப்படுகின்றன.

மேற்கே வயலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கிழக்கே உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாத சுவாமி திருக்கோயில், தெற்கே உய்யகொண்டான் சர்ப்ப நதி ஆகியவற்றைக் கொண்டு, நடுவில் அமைந்துள்ளது பெருங்குடி அகஸ்தீசுவரர் திருக்கோயில்.

பல்வேறு காலகட்டங்களில் பெருமுடி, திருபெருமுடி என்ற பெயர்களோடு  விளங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்போது இந்த ஊர் பெருங்குடி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளிய  சுயம்பு மூர்த்தியான அகஸ்தீசுவரர்,  தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சனீசுவர பகவான் தெய்வங்கள் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு காட்சியளித்து வருகின்றனர்.

அகஸ்தீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்
அகஸ்தீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்

கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயில் அர்த்த மண்டபம்,  முக  மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம், பலிபீடம்,  கொடிமர பீடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கருவறை விமானம் வேசர  வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

சுவாமி அகஸ்தீசுவரர்
சுவாமி அகஸ்தீசுவரர்

இறைவன் அகஸ்தீசுவரர்

இக்கோயிலில் சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இறைவன்  அகஸ்தீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.

அகத்திய மாமுனிவரால் பூஜை செய்யப்பட்ட இந்த இறைவன், வடக்குத் திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குத் திசை பார்த்து ஆனந்த சயனக்  கோலத்தில் காட்சியளித்து வருவது மிகவும் விசேஷமானது.

தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளைச் செவிமடுத்து, இறைவன் கேட்டு,  காட்சியளித்து வருகிறார். இறைவன் கருவறை மண்டபம் முன்பு இரு பகுதிகளிலும் துவார பாலகர்கள் எழுந்தருளியுள்ளனர்.

கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கும் திருக்கோயிலாகப் பெருங்குடி விளங்குகிறது. கண் பார்வை குறைபாடு உடையவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள் மற்றும் கண் பார்வை பிரச்னையுடன்  தொடர்புடையவர்களுக்கு இக்கோயில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகத்துக்குப் பிறகு எண்ணெய் வழங்கப்படுகிறது. அதை அவர்கள் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர்.

கோயில் தோட்டம்
கோயில் தோட்டம்

இதற்கும் வரலாற்றுக் கதை இருப்பதாக கோயில் தல வரலாற்றுத் தகவல்களில் கூறப்படுகின்றன. பெருங்குடி கோயிலில் பல்வேறு திருப்பணிகளைச் செய்த மன்னன் கூத்தனின் மகன் நல்லமங்கை என்பவர் பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்.

இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகளை மன்னன் கூத்தன் செய்து வந்த நிலையில்,  இதனால் மகிழ்ந்த இறைவன், அவரது மகன் நல்லமங்கைக்கு கண் பார்வை கொடுத்தது இங்குதான்.

எனவே, பார்வைக் குறைபாடு போன்ற பாதிப்புள்ளவர்கள் இத்திருக்கோயில் இறைவனைத் தரிசனம் செய்து, மனமுருக வேண்டினால் உரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவன் சதுரகிரி ஈசனை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதும் இக்கோயிலுக்கான மற்றொரு விசேஷமாகும்.

சிவகாமசுந்தரி அம்மன்
சிவகாமசுந்தரி அம்மன்

இறைவி சிவகாமசுந்தரி

இத்திருக்கோயில் இறைவி சிவகாமசுந்தரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பாண்டியர் காலத்தில்  அம்மன் சன்னதி அமைக்கப்பட்ட நிலையில், சாந்த சொரூபியாக அவர் எழுந்தருளியுள்ளார்.

அம்மன் சன்னதியின் வெளிப்புற கோஷ்டங்களில் மேற்கில் ஸ்ரீ சுபயக்ஷினி, காமதேனு, வடக்கில் அகத்தியர், கிழக்கில் வீர ஆஞ்சனேயர் சிலை ரூபங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.  இறைவன் சன்னதிக்கு அருகிலேயே அம்மன் சன்னதி அமைந்திருப்பதால், ஒரே நேரத்தில் இரு சன்னதிகளையும் வழிபடலாம்.

திருக்கோயிலில் உள்ள நந்தியெம்பெருமான்
திருக்கோயிலில் உள்ள நந்தியெம்பெருமான்

மங்களாம்பிகா லோகத்திலுள்ள கோலத்தில் தட்சிணாமூர்த்தி

திருக்கோயிலின் வெளிப்புற கோஷ்டங்களில் தெற்கில் சன்னதி கொண்டு காட்சியளித்து வருகிறார் தட்சிணாமூர்த்தி. இந்த தட்சிணாமூர்த்தி பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளார்.

மங்காளம்பிகை லோகத்திலுள்ள கோலத்தில் தட்சிணாமூர்த்தி
மங்காளம்பிகை லோகத்திலுள்ள கோலத்தில் தட்சிணாமூர்த்தி

மங்களாம்பிகை லோகத்திலுள்ள கோலத்திலேயே தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.  அதற்கு சாட்சியாக அவர் காலின் கீழுள்ள பூதகனின் தலைபாகம் வேறு எந்த சிவன் கோயில்களிலும் இல்லாதவாறு கிழக்குத் திசை நோக்கியும், அவருக்கு கீழே ஸ்ரீ நந்தியெம்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில், தன் தலையை மட்டுமே மேற்குத் திசை நோக்கி சுவாமியைப் பார்ப்பதும் மிக விசேஷமானது.

தட்சிணாமூர்த்தி பாதத்தில் உள்ள பூதகனின் தலைபாகம்
தட்சிணாமூர்த்தி பாதத்தில் உள்ள பூதகனின் தலைபாகம்

ஒவ்வொரு வியாழக்கிழமை மற்றும் நவமி திதியன்று கைகளிலும்,  கால்களிலும் மருதாணி இட்டுக்கொண்டு, தட்சிணாமூர்த்தியை  வலம் வந்து வழிபடுவதால் குழந்தைகளுக்கு நல்ல கல்விச் செல்வமும் மற்ற அனைவருக்கும் நல்ல நினைவாற்றலும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ரிக்வேதத்தில் குறிப்பிட்டவாறு அமைந்துள்ள மகாகணபதி.
ரிக்வேதத்தில் குறிப்பிட்டவாறு அமைந்துள்ள மகாகணபதி.

சிறப்பு வாய்ந்த மகாகணபதி
பெருங்குடி கோயிலிலுள்ள மகாகணபதி, ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.

இந்த மாதிரியான திருமேனி இந்தியாவில் 4 இடங்களில்தான் உள்ளன. தமிழகத்தில் இக்கோயிலில் மட்டும்தான் ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மகா கணபதி காட்சியளிக்கிறார்.

லட்சுமிநாராயணர்
லட்சுமிநாராயணர்

இவருக்கு அருகிலேயே  ஸ்ரீ வெங்கடேச பெருமாள், லட்சுமிநாராயணர்  தெய்வத் திருமேனிகள் உள்ளன. இத்திருக்கோயில் இறைவன் அகஸ்தீசுவரர் குபேர திசை நோக்கி சாய்ந்து, ஸ்ரீ லட்சுமி  நாராயணரைப் பார்ப்பதால்,  ஸ்ரீ லட்சுமி தேவிக்கு சாமரம், நிறைகுடம், கண்ணாடி, அங்குசம், முரசு, விளக்கு, கொடி, இரட்டை மீன்கள் என எட்டு விதமான மங்கல சக்திகள் கிடைக்கும் என அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். மங்கல சக்திகளை நாம் பெறுவதற்கு உரிய பரிகாரத்தை செய்தால், பலன் பெறலாம்.

சிவகாமசுந்தரி சன்னதி வெளிப்புற கோஷ்டத்தில் உள்ள சுப யக்ஷினி புடைப்புச் சிற்பம்
சிவகாமசுந்தரி சன்னதி வெளிப்புற கோஷ்டத்தில் உள்ள சுப யக்ஷினி புடைப்புச் சிற்பம்

ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை ஏகாதசியன்று ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், லட்சுமி நாராயணருக்கும் நடைபெறும் அபிஷேகங்களில் பங்கேற்றால், சகலவித ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என அகத்திய மாமுனிவர் குறிப்பிட்டுள்ளார் என திருக்கோயில் தல வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அர்த்தநாரீசுவரர்

சுவாமி சன்னதியின் வெளிப்புற கோஷ்டங்களில் மேற்குப் பகுதியில் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளியுள்ளார். அதற்கு மேலே யோக நரசிம்மர் சிலை வடிவம் உள்ளது.

அர்த்தநாரீசுவரர் - பிரம்மா
அர்த்தநாரீசுவரர் - பிரம்மா

கோஷ்டத்தின் வடக்குப் பகுதியில் தனி சன்னதி கொண்டு  பிரம்மா எழுந்தருளியுள்ளார். வாரந்தோறும் பிரம்மாவுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்று வருகிறது.

சண்டிகேசுவரர்
சண்டிகேசுவரர்

அவருக்கு அருகிலேயே தனியே ஸ்ரீ சண்டிகேசுவரர் சன்னதியும் அமைந்துள்ளது.

தெய்வசேனா - சுப்ரமணியசுவாமி
தெய்வசேனா - சுப்ரமணியசுவாமி

விஸ்வரூப தரிசனத்தில் சுப்ரமணிய சுவாமி
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுப்ரமணியர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடல்பெற்றவர்.

வள்ளியை மணம் புரிவதற்கு முன்னர், அருள்மிகு தெய்வசேனாவுடன் சுப்ரமணியர் காட்சியளித்தது இத்திருக்கோயிலில்தான். வள்ளி இங்கு அரூபமாகக் காட்சியளிக்கிறார். இங்குதான் சுப்ரமணியர் தனது விஸ்வரூபத் தரிசனத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கோயில் யானை புடைப்புச் சிற்பம்.
கோயில் யானை புடைப்புச் சிற்பம்.

உஷ்ண கிரகணமான செவ்வாயின் அதிதேவதையாக விளங்கக்கூடிய சுப்ரமணியரின் விஸ்வரூபத்தினால் ஏற்பட்ட வெப்பத்தை நவக்கிரகங்களில் சனி பகவானும், சப்த மாதர்களில் ஸ்ரீவராஹி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீ பிராமி மட்டுமே எதிர்கொண்டனராம்.

எனவேதான் சுப்ரமணியருக்கு அருகிலேயே சப்த மாதர்களில் இந்த மூவரும், எதிரில் சனீசுவர பகவானும் எழுந்தருளியுள்ளனர்.

சிறப்புவாய்ந்த சனீசுவரர்
சிறப்புவாய்ந்த சனீசுவரர்

செவ்வாய், சனி தோஷம்போக்கும் கோயில்

செவ்வாய்க்கு அதிபதியான ஸ்ரீசுப்ரமணியர், தனக்கு எதிராக சன்னதி கொண்டுள்ள சனீசுவர பகவானை பார்த்து இருப்பது செவ்வாய், சனிதோஷ நிவர்த்திக்கு சிறந்ததாகும்.

இதுபோல, சனீசுவரரும் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். திருநள்ளாறு ஸ்ரீ சனீசுவரருக்கு நிகரான வல்லமை உடையவர் பெருங்குடியில் காட்சியளிக்கும் சனீசுவரர் என அகத்தியர் தன்னுடைய ஓலைச் சுவடியில் குறிப்பிட்டுள்ளார்.

அம்மன் சன்னதி கோஷ்டத்தின் வடக்குப் பகுதியிலுள்ள அகத்தியர்
அம்மன் சன்னதி கோஷ்டத்தின் வடக்குப் பகுதியிலுள்ள அகத்தியர்

மேலும் சனீசுவரருக்கு எதிரில் சுப்ரமணியர் எழுந்தருளியிருப்பதால்,  சனீசுவரரால் ஏற்படக்கூடிய அனைத்து தோஷங்களும், செவ்வாய் தோஷமும் நீங்கும். மேலும் சனீசுவரர், மூலவர் அகஸ்தீசுவரைப் பார்த்து இருப்பதும் மிகவும் விசேஷமானது.

இவ்விரு தோஷங்களும் நீங்க செவ்வாய், சனிக்கிழமைகளில் சுப்ரமணியர், சனீசுவர பகவானுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்  பூஜைகளில் பங்கேற்கலாம்.

வெங்கடேசப் பெருமாள்
வெங்கடேசப் பெருமாள்

தனது காக வாகனத்தை இழந்த சனீசுவரப் பகவான், இத்தலத்து அம்மனை நோக்கித் தவம்புரிந்து வழிபட்டதால்,   தங்கக் காக வாகனத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால்  புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என விருப்பம் உள்ளவர்கள், வாகனப் பிரச்னை உள்ளவர்கள், வாகனத்தை இழந்தவர்கள் போன்ற பலரும் இங்கு வந்து  சனீசுவர பகவானையும், இறைவி சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் உரிய பலன்களை அடைவர்.

அம்மன் சன்னதி கோஷ்டத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள வீர ஆஞ்சனேயர்.
அம்மன் சன்னதி கோஷ்டத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள வீர ஆஞ்சனேயர்.

சனிக்கிழமையில் பலன் கிட்டும்

சனிக்கிழமை தோறும் பெருங்குடி கோயிலில் அகஸ்தீசுவரர், சனீசுவரர், ஆஞ்சனேயருக்கு  அர்ச்சனை செய்து வந்தால், ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம், எதிரிகளால் ஏற்படக்கூடிய பயம், பூர்வஜன்ம சாபம், உத்தியோக, திருமணத் தடைகள் ஆகியவை முற்றிலும் நீங்கி, நம் மனம் எண்ணுவதற்கு  ஏற்றாற்போல வாழ்க்கை அமையும் என  அகத்தியர் குறிப்பிடுகிறார். இதற்கு ஏற்றவாறு சனிக்கிழமை தோறும் அதிகளவிலான பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

அர்த்தநாரீசுவரர் மேல்பகுதி சிற்பம்
அர்த்தநாரீசுவரர் மேல்பகுதி சிற்பம்

சூரிய தரிசனம்

ஆண்டுதோறும் பங்குனி மாதம் 22, 23, 24-ஆம் நாள்களில் சூரிய பகவான் தன் கதிர்களால் 5 மண்டபங்களைக் கடந்து, அகஸ்தீசுவரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் சூரிய தரிசனம் (பாஸ்கர பூஜை) இக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும்.  

சிறந்த கண்பார்வை, நல்லொழுக்கம், சாந்தமான இல்லறம், நல்ல கல்வி, பிதுர்தோஷ நிவர்த்தி, பெரியோர்களை மதித்தும் போற்றும் குணம், மனதிலுள்ள மாசுகள் அகலுதல் ஆகியவை சூரிய தரிசனம் காண்பதால் ஏற்படும் பலன்கள் என்கிறது இத்திருக்கோயில் தல வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தல திருவோடு மரம்
தல திருவோடு மரம்

தல விருட்சம்  திருவோடு  மரம்
இத்திருக்கோயிலின் தல விருட்சமாக திருவோடு மரம் உள்ளது. இந்த மரம் பல்வேறு  சிறப்புகளைக் கொண்டிருக்கிறது.

ஆனித்திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது குறித்த கல்வெட்டு
ஆனித்திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது குறித்த கல்வெட்டு

திருவிழாக்கள்

இத்திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம், திருவாதிரைப் பெருவிழா, அன்னாபிஷேக பெருவிழா போன்றவை சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர மாதந்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் செவ்வாய், சனிக்கிழமைகளில் சுப்ரமணியர், சனீசுவர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயிலில் உள்ள கல்வெட்டு.
கோயிலில் உள்ள கல்வெட்டு.

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்
காலை 8.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோயில்நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?
ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை அருகிலுள்ள மல்லியம்பத்து  ஊராட்சியில் பெருங்குடி அமைந்துள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலுக்கு வரும் தென் மாவட்டங்கள், மத்திய மண்டல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்  மத்திய பேருந்து நிலையம்,  புத்தூர் நான்கு சாலை, உய்யகொண்டான் திருமலை, கோனார் சத்திரம், மல்லியம்பத்து வழியாக  கார், வேன் போன்ற வாகனங்களில் வரலாம்.

வடக்கு, மேற்கு போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் அல்லது உறையூர், புத்தூர் நான்கு சாலை, வயலூர் சாலை, உய்யகொண்டான் திருமலை, கோனார் சத்திரம், மல்லியம்பத்து வழியாக கோயிலுக்கு வரலாம்.

கோயில் வெளிப்பிரகாரம்
கோயில் வெளிப்பிரகாரம்

சோமரசம்பேட்டையிலிருந்தும், கோனார் சத்திரம் பகுதியிலிருந்தும் ஆட்டோக்கள் உள்ளன. ரயில், விமானம் மூலம் வருபவர்களுக்கு வாகன வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு

இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வருபவர்கள் அர்ச்சகர் வெ. கோவிந்தராஜ் ஐயரை 98424-33744, 70100 55893 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை அகஸ்தீசுவரர் திருக்கோயில்,
பெருங்குடி,
ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம்.


படங்கள்: எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.