திருமணத் தடை நீக்கும் அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்

திருமணத் தடை, காது சம்பந்தமான குறைபாடுகளைப் போக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது.
சௌந்தரநாயகி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரர்
சௌந்தரநாயகி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரர்
Published on
Updated on
6 min read

சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் சுவாமிகளால் பாடல்பெற்ற அன்பில் அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் திருமணத் தடை நீக்குதல் மற்றும் காது சம்பந்தமான குறைபாடுகளைப் போக்கும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருக்கோயில்களில் அன்பில் 57-ஆவது கோயிலாக உள்ளது. அன்பில் என்ற இந்த ஊரில் ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் கோயில் அமைந்துள்ளது. அதனாலேயே ஊரின் பெயருடன் ஆலந்துறை இணைத்து, இக்கோயிலில் இறைவனின் பெயர் அன்பிலாந்துறையார் என்றழைக்கப்படுகிறார்.

இதைத் தவிர பிரம்மன் வந்து இறைவனை வழிபட்டதால், கோயிலின் பெயர் பிரம்புரீசுவரர் திருக்கோயில் என்றும், இறைவன் பெயர் பிரம்மபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது. இதைத் தவிர, வாகீசர் முனிவர் வழிபட்ட திருக்கோயில் என்பதால், இங்குள்ள இறைவன் சத்தியவாகீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சுவாமி-அம்பாள் உற்சவ மூர்த்தி
சுவாமி-அம்பாள் உற்சவ மூர்த்தி

வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக மூன்று கோயில்கள் அன்பில் கிராமத்தில்  உள்ளன. அதில் பிரம்மபுரீசுவரர் கோயில் மட்டுமல்லாது, அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்,  அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலும் உள்ளது.

அருள்மிகு கணபதி
அருள்மிகு கணபதி

இக்கோயிலின் ராஜகோபுரம், உள் மண்டபக் கோபுரம், உள்பிரகார மண்டபம், மகா மண்டபத்தின் தூண்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், மகா மண்டபத்தின் இடது, வலது புறங்களில்  காணப்படும் சிற்பங்கள் போன்றவை இந்த திருக்கோயிலின் பழைமையை எடுத்துரைக்கின்றன.

மற்ற சிவன் கோயில்களில் இல்லாத வகையில் இறைவன், இறைவி சன்னதிகள் ஒரே நிலையில் கிழக்கு நோக்கிய திசையில்  அமைந்திருப்பது, மூன்று நந்தியெம்பெருமான்கள் எழுந்தருளியிருப்பது, செவி சாய்த்த நிலையில் விநாயகர் காட்சியளிப்பது,  ஈசானிய மூலையில் கோயிலின் தல விருட்சம் அமைந்திருப்பது போன்றவை  அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.

திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய
தேவாரம் - திருக்குறுந்தொகை 5-ஆம் திருமுறைப் பாடல்கள்

திருஅன்பிலாந்துறை என்ற இத்திருக்கோயில் இறைவன் குறித்து திருநாவுக்கரசர் சுவாமிகள் திருக்குறுந்தொகை (5-ஆம் திருமுறை), திருஞானசம்பந்தர் பண்-தக்கராகம் (1-ஆம் திருமுறை)  என்ற தலைப்புகளில் தேவாரப் பதிகம் அருளியிருக்கின்றனர்.

திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் (பண் தக்கராகம் 1)ஆம் திருமுறைப் பாடல்கள்
திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய தேவாரம் (பண் தக்கராகம் 1)ஆம் திருமுறைப் பாடல்கள்

தல வரலாறு

ராவணன் குபேரனைத்  தந்திரத்தால் வென்று, அவனது புஷ்பக விமானத்தைக் கவர்ந்தான். மிதமிஞ்சிய ஆணவத்தால் கயிலையை அடைந்த ராவணன், ஈசன் (சிவபெருமான்) வாழ்ந்த மலையைப் பெயர்த்தெடுக்கத் தொடங்கினான். ராவணனின் கொட்டத்தை அடக்க ஈசன் தனது வலது பெருவிரல் நுனியை அழுத்த, ராவணனின் கைகள் சிக்கிக் கொண்டன. கடுமையான வலியால் துடித்த ராவணனின் அழுகுரல் அங்கு தவம் செய்து கொண்டிருந்த வாகீச முனிவரின் காதில் விழுந்தது.

இதனால் மனம் இளகிய வாகீச முனிவர், "ஈசனின் மனம் கனிய உனது இசையால் அவரைப் போற்றி பாடு' என்று ராவணனுக்கு உபதேசம் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஈசனின் கருணையால் ராவணன் உயிர் தப்பினான். தன்னால் தண்டிக்கப்பட்ட ராவணனுக்கு உதவிய வாகீசரின் செயல் ஈசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் "நீ பூலோகத்தில் பிறக்கக் கடவுவது' என்று சாபமிட்டார்.

சமயக் குரவர்கள் நால்வருடன் சேக்கிழார்
சமயக் குரவர்கள் நால்வருடன் சேக்கிழார்

இதனால் கலங்கிய வாகீசர், பூமியில் அன்பிலாந்துறை என்னும் இத்திருக்கோயிலில் சுயம்புவாய் எழுந்தருளிய ஈசனைப் பணிந்து வழிபட்டார். ஈசனின் கருணையால் திருஆமூரில் மருள் நீக்கியவராகப் பிறந்தார்.  இந்த நிகழ்வை தனது பதிகத்திலும் குறிப்பிட்டுள்ளார் திருநாவுக்கரசர்  சுவாமிகள். இதனால் வாகீசர் பணிந்த ஈசன் சத்தியவாகீசர் என்ற திருநாமம் கொண்டார்.   வாகீசர் என்ற திருப்பெயர் நான்முகனுக்கும், பிரகஸ்பதிக்கும் உண்டு. அவர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டார்கள் என தல வரலாறு கூறுகிறது.

இறைவன் பிரம்மபுரீசுவரர்

கிழக்கு நோக்கிய சன்னதியைக் கொண்டு சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார் அருள்மிகு பிரம்மபுரீசுவரர். விசேஷமான சதுர பீட ஆவுடையராக இவர் திகழ்கிறார். பிரம்மபுரீசுவரரை வணங்கினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த தீவினைகள் விலகி, நல்வாழ்வை அடையலாம் என்றும், ஒவ்வொரு பிறவியிலும் அடைந்திருக்கும் மூன்று விதமான கடன்களிலிருந்தும் மீளலாம் என்றும் கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் உருகி, உருகிப் பாடிய பிரம்மபுரீசுவரர் மிகவும் விசேஷமானவர். இவரை வணங்கி வலம் வருவோரை வானுலகத் தேவர்கள் வலம் வந்து தொழுவர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இறைவனை இறைஞ்சுவார்கள் என்று திருநாவுக்கரசர் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோயிலின் வெளிப் பிரகாரம்
கோயிலின் வெளிப் பிரகாரம்

இறைவி சௌந்தரநாயகி

மற்ற திருக்கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவி பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் இறைவன், இறைவி சன்னதிகளில் வெவ்வேறு திசைகளை நோக்கி அமைந்திருக்கும். இறைவன் சன்னதியைக் காட்டிலும் சற்று உள்ளடங்கி இறைவி சன்னதி அமைந்திருக்கும். ஆனால், அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயிலில் இறைவி சன்னதி முன்னதாகவும், இறைவன் சன்னதி பின்னடங்கியும் அமைந்திருக்கிறது. மேலும் சௌந்தரநாயகி அம்மன் மணக்கோலத்தில் காட்சியளிப்பதும் தனிச் சிறப்புக்குரியது.

பெயருக்கேற்றவாறு வடிவழகு கொண்டவர் சௌந்தரநாயகி அம்மன். திருமணத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சன்னதியில் தங்கள் ஜாகதத்தை வைத்து, விளக்கேற்றி வழிபட்டுச் சென்றால், தடை நீங்கி திருமணம் விரைவில் கைகூடும்.

செவி சாய்த்த விநாயகர்

திருஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக் காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டதால், இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் செவி சாய்த்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

அருள்மிகு செவி சாய்த்த  விநாயகர்
அருள்மிகு செவி சாய்த்த  விநாயகர்

நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவாலயங்கள் பலவற்றுக்கு வந்தார். சிவபெருமானுக்கு இவரைச் சோதிக்க ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடச் செய்தார். இதனால் திருஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடையமுடியவில்லை. தொலைவில் நின்றவாறே சுயம்புவாய் காட்சியளித்த அன்பில் ஈசனை (சிவபெருமான்) நோக்கிப் பாடினார்.

சந்திரன் பூஜை செய்யும் சிற்பம்
சந்திரன் பூஜை செய்யும் சிற்பம்

காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. அங்கிருந்த சிவனின் மூத்த மகனான விநாயகர், இளையப் பிள்ளையார் என்றழைக்கப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம்பந்தரின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக் கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது.

தல விருட்சமான வில்வமரம்
தல விருட்சமான வில்வமரம்

ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் ரசித்ததால்,  இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் செவி சாய்த்த விநாயகர் என்றாக்கப்படுகிறார்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

இறைவன், இறைவியை நோக்கி சந்திரன், சூரியன்

கோயிலின் மகா மண்டபத்தின் இடது, வலது புறங்களில் சூரியன், சந்திரன் எழுந்தருளியுள்ளனர். இவர்கள் இருவரும் இறைவன், இறைவியை நோக்கியவாறு எழுந்தருளியிருப்பதும் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது.

சர்ப்பபூஜை நடத்தும் வாகீச முனிவர் சிற்பம்
சர்ப்பபூஜை நடத்தும் வாகீச முனிவர் சிற்பம்

மூன்று நந்தியெம்பெருமான்

இதுபோல,  மகா மண்டபத்தின் முன்பகுதியிலும், அதைத் தொடர்ந்துள்ள மண்டபத்திலும் என இறைவன் பிரம்மபுரீசுவரை நோக்கி இரு நந்தியெம்பெருமானும், இறைவி  சன்னதிக்கு நேர் எதிரில் மற்றொரு நந்தியெம்பெருமானும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளனர்.

காசி விசுவநாதர்
காசி விசுவநாதர்

இதுபோல, நவக்கிரக நாயகர்கள் சன்னதியில் சூரியனை நோக்கி இதர கிரகங்கள் எழுந்தருளியிருப்பது விசேஷமானதாகும்.  இதனால் இந்த சன்னதியில் வந்து வழிபடுவர்கள் அனைத்துவிதமான தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம்.

இறைவன் சன்னதியின் திருகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேசுவரர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். இதைத் தவிர, மகா மண்டபத்தின் இடது, வலதுப்புறப் பகுதிகளில் சிவபெருமானை இறைவி, மகா விஷ்ணு, பிரம்மா, முருகப்பெருமான், சந்திரன், சூரியன் போன்றோர் வழிபடுவது போன்ற சிற்பங்களும்,  சிவபெருமானுக்கு சர்ப்ப பூஜை நடத்தும் வாகீச முனிவர் சிற்பமும் காணப்படுகிறது.

விசாலாட்சி அம்மன்
விசாலாட்சி அம்மன்

கோயிலின் திருச்சுற்றில் சேக்கிழாருடன் நால்வர் சன்னதி, அருள்மிகு கணபதி, வள்ளி-தேவசேனா சமேத ஆறுமுகப் பெருமான் தனித்தனி சன்னதிகளைக் கொண்டுள்ளனர். மேலும் இந்த திருச்சுற்றில் லிங்கோத்பவர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, பிச்சாடனார், பைரவர் எழுந்தருளியுள்ளனர்.

மகா விஷ்ணு
மகா விஷ்ணு

திருமணத் தடை  நீங்க

இக்கோயிலில் இறைவன் பிரம்மபுரீசுவரர், இறைவி சௌந்தரநாயகி அம்மன் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பதால் இத்திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

ஜாதக ரீதியில் திருமணத் தடை ஏற்பட்டிருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.

வள்ளி-தேவசேனா சமேதராய் ஆறுமுகப் பெருமான்
வள்ளி-தேவசேனா சமேதராய் ஆறுமுகப் பெருமான்

இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று இறைவன், இறைவிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இதில் பங்கேற்று, மாலை மாற்றிக்கொள்ளும் வழிபாட்டு முறையைச் செய்தால் விரைவில் அவர்களுக்குத் திருமணம் கைகூடும் என்பதால், சித்ரா பௌர்ணமியன்று நடைபெறும் திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

பிச்சாடனார்
பிச்சாடனார்

மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்

மகம் நட்சத்திரக்காரர்களுக்கான கோயிலாக அன்பில் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதனால் இந்த நட்சத்திரக்காரர்கள் மகம் நட்சத்திரத்தன்று இங்கு வந்து இறைவன், இறைவியை வழிபட்டு அபிஷேக, அர்ச்சனைகளை செய்தால் உரிய பலன்களை பெறுவர்.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி
நவக்கிரக நாயகர்கள் சன்னதி

காது சம்பந்தமான குறைபாடுகளுக்கு

பிரம்மபுரீசுவரர், சௌந்தரநாயகி அம்மன் போன்று, கோயிலில் செவி சாய்த்த விநாயகரும் சிறப்புப் பெற்று எழுந்தருளியுள்ளார். இதனால் இக்கோயில் காது சம்பந்தமான குறைபாடுகளைப் போக்கும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. காது சம்பந்தமான அறுவைச் சிகிச்சைகள், காது கோளாறு போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் இக்கோயிலுக்கு வந்து இறைவன், இறைவிக்கும், விநாயருக்கும் பூஜைகள் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

சந்திரன்
சந்திரன்

தல விருட்சம்

ஆலமரங்கள் நிறைந்த வனப்பகுதியில் கோயில் அமைந்திருந்தாலும் கோயிலின் தல விருட்சம் வில்வமரமாகும். அதுவும் கோயிலின் ஈசானிய மூலையில் தல விருட்சம் அமைந்திருப்பதும் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று திருக்கல்யாண வைபவம், ஆடி மாதத்தில் ருத்ரஹோமம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர ஆடல்வல்லான் நடராசப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மேலும் மாதந்தோறும் பௌர்ணமி, பிரதோஷ வழிபாடுகள், அஷ்டமி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்றவையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சூரியன்
சூரியன்

எப்படிச் செல்வது?

திருச்சியிலிருந்து சுமார் 31 கி.மீ. தொலைவில் அன்பில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி போன்ற தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் எனில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், வாளாடி, மாந்துறை, லால்குடி, மணக்கால், கொப்பாவளி, நடராஜபுரம் வழியாக அன்பில் வந்தடைய வேண்டும்.

இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ள நந்தியெம்பெருமான்
இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ள நந்தியெம்பெருமான்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி செல்லாமல்,  பூண்டி, செங்கரையூர் வழியாக அன்பில் கிராமத்தை வந்தடையலாம்.

கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், வாளாடி, மாந்துறை, லால்குடி வழியாக அன்பில் சென்றடையலாம்.

பைரவர்
பைரவர்

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நெ.1.டோல்கேட்,  வாளாடி, மாந்துறை, லால்குடி வழியாக அன்பில் வந்தடையலாம்.

பிரம்மா
பிரம்மா

திருச்சி விமான நிலையம், ரயில் நிலையத்திலிருந்து அன்பிலுக்கு கார், வேன் போன்ற வாகனங்கள் வசதியுள்ளன. இதைத் தவிர திருச்சி சத்திரம்பேருந்து நிலையத்திலிருந்தும், லால்குடியிலிருந்தும் நகரப் பேருந்துகள் அன்பிலுக்கும், அன்பில் வழியாகச் செல்லும் கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்பு முகவரி

அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்,
அன்பில்,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.