Enable Javscript for better performance
மனக்கலக்கங்கள் போக்கும் வலிவலம் ஶ்ரீ மனத்துணைநாதர் திருக்கோயில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மனக்கலக்கங்கள் போக்கும் வலிவலம் ஶ்ரீ மனத்துணைநாதர் திருக்கோயில்

    By எம்.சங்கர்  |   Published On : 01st April 2022 12:41 PM  |   Last Updated : 01st April 2022 12:42 PM  |  அ+அ அ-  |  

    siv-tile1

    மாழையொன்கண்ணி அம்பாள் உடனுறை மனத்துணைநாதர்

     

    பிடியதன் உரு உமை கொள மிகு கரியது

    வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

    கடி கண பதிவர அருளினன் மிகு கொடை

    வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே 

    என திருஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட திருத்தலம் வலிவலம்.

    மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம், எழில்மிகு தொழில் வளர் வலிவலம் என திருஞானசம்பந்தப் பெருமானாலும், கலிவலம் கெட ஆரழல் ஓம்பும், கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும் வலிவலம்- வேதவிற்பன்னர்கள் நிறைந்த பதி என சுந்தமூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழப்பட்டது வலிவலம்.

    கோயிலின் கிழக்குவாயில்

    எல்லாம் வல்ல இறைப் பரம்பொருள் சிவபெருமான் இங்கு, அருள்மிகு மனத்துணைநாதர் என்ற திருப்பெயரில் அருளுகிறார். அருள் சிந்தும் திருநோக்குடன் அன்னை பராசக்தி அருள்மிகு மாழையொண்கண்ணியம்மை என்ற திருப்பெயருடன் தனி சன்னதிக் கொண்டு காட்சியளிக்கின்றார். 

    இறைவனுக்கு அருள்மிகு இருதயகமலநாதர் என்ற பெயர் வடமொழி பெயராகக் குறிப்பிடப்படுகிறது. மாவடு போன்ற கண்களைப் போன்றவர் என்பதைக் குறிப்பிடுவதாக, அம்பாளுக்கு மாழையொண்கண்ணி என்ற பெயர் விளங்குகிறது. தீர்த்தம் - சக்கர தீர்த்தம். தலவிருட்சம் - புன்னை. 

    கோயிலின் இரண்டாம் நிலை கோபுரம்

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் எனத் தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது, சூரியன், வருணன், வலியன், காரணமாமுனிவர் என தேவர்களும், முனிவர்களும், மன்னர்கள் பலரும் வழிபட்டதும், அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகள் பெற்றதுமான இத்தலம், நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்தில் உள்ளது. 

    கொன்றைவனம், வில்வவனம், ஏகசக்கரபுரம், வேத்ரகீயம், முந்நூற்று மங்கலம் என்ற திருப்பெயர்கள், இத்திருத்தலத்துக்கு புராண காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. சோழர் காலத்தில், அருள்மொழிதேவ வளநாட்டு வலிவலக்கூற்றத்து வலிவலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோயிலின் வெளி பிரகாரம்

    காவிரியின் புனல் பரந்து பொன் கொழித்த சோழவள நாட்டில் உள்ள காலப் பழமையும், சாலப் பெருமைகளும் கொண்ட திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது இக்கோயில். கி.பி 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோச்செட்ங்கோட் சோழன் இக்கோயிலுக்குத் திருப்பணி மேற்கொண்டு, மாடக் கோயிலாக அமைத்தார் என்பதன் மூலம் இக்கோயிலின் பழமையை உணர முடியும்.

    அதேபோல, மூன்றாம் குலோத்துங்கச் சோழன், ராஜராஜசோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன், பாண்டிய மன்னன் சடாவர்மன் திரிபுன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கால கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. 

    அருள்மிகு மனத்துணைநாதர்

    இதில், ராஜராஜசோழனின் 14-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது, குலோத்துங்கச்சோழநல்லூரில் வசித்த சிலரின் தவறான நடவடிக்கைகளால், அவர்கள் அரசுத் துரோகிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனவும், அந்த நிலங்களை இவ்வூர் மக்கள் சிலர் முப்பதாயிரம் காசுகளுக்கு வாங்கி, அருள்மிகு மனத்துணைநாதர் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர் என்ற செய்தி ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    மாழையொண்கண்ணி அம்பாள்

    சூரியனால் உருவான அகழி

    சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் அளிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்ற தேவர்கள் அனைவரும், சிவபெருமானில் இருந்து தோன்றிய அகோரவீரபத்திர சுவாமியால் தண்டிக்கப்பட்டனர். இதில், சூரியன் தன் ஒளியை இழந்தார். தன் தவற்றை உணர்ந்த சூரியன் சிவபெருமானை பலவாறு துதித்து வழிபட்டார். அப்போது, வலிவலம் மனத்துணைநாதரை வலம் வந்து வழிபட, எல்லாம் சரியாகும் என சிவபெருமான் அருளியுள்ளார்.

    இதையடுத்து, சூரியன் தேருடன் வலிவலம் வந்து, மனத்துணைநாதரை வணங்கி, தேரிலேயே வலம் வந்து வழிபட்டு, இழந்த ஒளியை மீளப் பெற்றுள்ளார். சூரியனின் தேர் சக்கரம் அழுந்திய தடத்தில் உருவானதே அருள்மிகு மனத்துணைநாதர் சுற்றியுள்ள அகழி எனப்படுகிறது. இதனால், இந்த அகழி சக்கர புஷ்கரணி என்றே குறிப்பிடப்படுகிறது. மேலும், ஒரே சக்கரத்துடைய தேரைக் கொண்ட சூரியன் வலம் வந்த ஊர் என்பதால் இத்தலத்துக்கு ஏகசக்கரபுரம் என்ற பெயரும் விளங்குகிறது.

    தென்புறம் உள்ள அகழி

    பாண்டவர்கள் வாழ்ந்த ஊர்

    வனவாசம் மேற்கொண்டிருந்த பாண்டவர்கள், வேத்ரகீயம் என்ற புராணப் பெயர் கொண்ட இத்தலத்தில், மாறு வேடத்தில் தங்கியிருந்துள்ளனர். அப்போது, இவ்வூரைச் சேர்ந்த பிரதை என்ற பெண், ஒரு நாள் மிகுந்த துயருடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்துள்ளார். அதைக் கண்ட குந்திதேவி, அப்பெண்ணிடம் காரணம் கேட்டார்.

    அதற்கு, அருகில் உள்ள சூரன்மங்கலத்தில் பகன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் ஊருக்குள் வந்து மக்களை இம்சிக்காமல் இருக்க வேண்டுமெனில், நாள் ஒன்றுக்கு ஒரு வீட்டிலிருந்து ஒரு வண்டி உணவும், ஒரு மனிதனையும் அனுப்ப வேண்டும். அந்த வகையில், இன்று என் வீட்டிலிருந்து அவனுக்கு உணவு அனுப்ப வேண்டிய நாள். உணவுடன் என் ஒரே மகனையும் அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளேன் என்று கூறி அழுதுள்ளார்.

    அதைக் கேட்ட குந்திதேவி, அந்தப் பெண்ணிடம் கவலையை விடு, அசுரனுக்கான உணவை நீ தயார் செய். உணவுடன் என் மகனை நான் அசுரனிடம் அனுப்புகிறேன். அவன் உங்கள் துயரைப் போக்குவான் எனக் கூறினார். அதன்படி, ஒரு வண்டி நிறைய உணவுடன் பீமனை அனுப்பினார் குந்தி. 

    வலம்புரி விநாயகர்

    சூரன்மங்கலம் சென்ற பீமன், வண்டியிலிருந்த மாடுகளை கட்டவிழ்த்துவிட்டு, அசுரனுக்குக் கொண்டு வந்த உணவை உண்ணத் தொடங்கினான். அப்போது, காட்டிலிருந்து வெளிப்பட்ட பகாசூரன், பீமனைத் தாக்கினான். இருவருக்கும் பெரும்போர் நடைபெற்றது. இறுதியில், பகாசூரனை பீமன் வீழ்த்தினான் என்பது இவ்வூரின் பழம் பெருமைக்குச் சான்றாகக் கூறப்படுகிறது.

    வலியான் வலம் வந்த தலம்

    முன்னொரு காலத்தில், வலிமையில் சிறந்த ஒருவன் பலவகையான ஆற்றல்களைக் கொண்டவனாகவும், ஒழுக்கச் சீலனாகவும் இருந்துள்ளான். ஆயினும், மாயையால் அவன் சில பாவங்களையும் செய்திருந்தான். அதனால், அடுத்த பிறவியில் ஒரு கரிக்குருவியாக அவன் பிறந்தான். ஒரு நாள், கரிக்குருவியாக இருந்த அவனைப் பெரிய பறவைகள் தாக்கி காயப்படுத்தின. 

    அதனால் பலத்த காயங்களும், பெரும் சோர்வும் அடைந்த அந்தக் கரிக்குருவி, வேதனையுடன் ஒரு மரத்தை அடைந்தது. அப்போது, அந்த மரத்தடியில் ஒரு சிவயோகி, மதுரையம்பதியின் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்புகளை அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசத்தை கரிக்குருவி, ஊன்றிக் கேட்டது. அப்போது, தன்னுடைய முற்பிறவி வினையை அறிந்தது. 

    மனத்துணைநாதர்

    இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

    உடனடியாக, அங்கிருந்து புறப்பட்டு மதுரையை அடைந்த கரிக் குருவி, பொற்றாமரை குளத்தில் தீர்த்தமாடி, சொக்கநாதப்பெருமானை வலம் வந்து வழிபட்டது. 3 நாள்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை அந்தக் கரிக்குருவி மேற்கொண்டது. இந்த வழிபாட்டால் மகிழ்ந்த சொக்கநாதப் பெருமான், அந்தக் குருவியை அருகில் அழைத்து மிருத்தியுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட கரிக்குருவி சிற்றறிவு நீங்கி, பேரறிவு பெற்றது. சொக்கநாதப் பெருமானை பலவாறு துதித்துப் போற்றியது. 

    அப்போது, மற்ற பெரிய பறவைகளால் தனக்கு நிகழ்ந்த துன்புறுத்தல்களை பெருமானிடம் கூறி முறையிட்டது அந்த குருவி. அதுகேட்ட சிவபெருமான், அப்பறவைகள் யாவினும் நீ வலிமையாகக் கடவாய் என அருளினார். இதனால் மகிழ்ந்த கரிக்குருவி, பெருமானிடம் மற்றொரு விண்ணப்பமும் செய்தது. ஈசன், தனக்கு அருளிய வலிமை தன் மரபினர் அனைவருக்கும் கிடைக்கவும் வரம் தந்தருள வேண்டும் என வேண்டி நின்றது. தன்னை மட்டுமல்லாமல், தன் மரபு குறித்தும் சிந்தித்த கரிக்குருவியின் வேண்டுதலை ஏற்ற சொக்கநாதப் பெருமான், அவ்வாறே ஆகுக என்று அருளினார்.

    இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

    மாழையொண்கண்ணி அம்பாள்

    சிவபெருமானின் அருளால் வலிமைப் பெற்ற கரிக்குருவி, அன்று முதல் வலியான் என்ற பெயரைப் பெற்று, தன்னைவிடப் பெரிய பறவைகளையும் வெல்லும் ஆற்றலைப் பெற்றது. அந்த மரபில் தோன்றிய ஒரு கரிக்குருவி, அருள்மிகு மனத்துணைநாதப் பெருமானை வலம் வந்து வணங்கி நற்பேறடைந்ததால், இத்தலத்துக்கு வலிவலம் எனப் பெயர் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

    முனிவர் தவம்

    தவசீலரான காரணமாமுனிவர், தவச்சாலை அமைத்து தவமியற்றிய இடம், இத்தலம். மேலும், அபலைகளாக ஆதரவின்றி வாழ்வோரும், வசதிகள் இருந்தும் பலரது பழிக்கண்களுக்கு ஆளாவோரும், அதற்கான காரணங்களை அறிந்து பரிகாரம் பெற தன் தவப்பலன்கள் அனைத்தையும் காரணமாமுனிவர் இச்சிவாலயத்தில் அர்ப்பணித்துள்ளதால், இத்தலம் ஆதரவற்றோரின் இன்னல்கள் தீர்க்கும் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. இத்திருக்கோயிலில், இறைவன் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தின் கீழ்ப்புறச் சுவரில் புடைப்புச் சிற்பமாக காரணமாமுனிவரின் சிற்பம் காட்சியளிக்கிறது. 

    இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

    தலவிருட்சம்

    இசை நிகழ்ச்சிகளில், தேவாரப் பாடல்களை பாடும் ஓதுவா மூர்த்திகள், இத்தலத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய "பிடியதன் உரு உமை கொள மிகு கரியது" என்ற பாடலைப் பாடிய பின்னரே, தேவாரம் பாடத் தொடங்குவர் என்பது இத்தலச் சிறப்புக்கு ஒரு சான்று. 

    இத்தலத்தில் உள்ள காரணகங்கை தீர்த்தம், ஆகாச கங்கையின் விரஜா சக்திகளை கொண்டு, தக்க காரணங்களைக் காட்டிப் பரிகார நல்வழிகளை உணர்த்தும் எனக் குறிப்பிடப்படுகிறது. திங்கள்கிழமை, சப்தமி திதி, அனுஷம் மற்றும் சுவாதி நட்சத்திர நாள்களில், நவதானியம் மற்றும் சர்க்கரை கலந்த ரவையை இவ்வாலய மதிலோரம் எறும்புகளுக்கு இட்டு வருவோர், இறையருளால் நல்வழி காட்டப்பெறுவர். 

    பிரதட்சிண சக்திகள் நிறைந்த இத்தலத்தில் அருளும் அருள்மிகு மனத்துணைநாதப் பெருமானுக்கு வலம்புரிச் சங்கினால் கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால், மனக்கலக்கங்கள் தீரும், பித்ருக்களின் ஆன்மா சாந்தியடையும், நிர்கதியற்று இருப்போருக்கும் நல்வழி கிட்டும் என்பது உறுதி.

    இக்கோயிலின் மிக முக்கிய விழா சித்திரை பிரமோத்ஸவ விழா. கடந்த 40 ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த இவ்விழா மீண்டும் நிகழாண்டில் நடைபெறுகிறது.

    எப்படிச் செல்வது?

    அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிலிருந்து இக்கோயிலுக்கு ஆகாய மார்க்கமாக வர விழைவோர், திருச்சி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தஞ்சை, திருவாரூர் மார்க்கத்தில் இக்கோயிலை அடையலாம். ரயிலில் வருவோர் திருவாரூர் அல்லது கீழ்வேளூர் ரயில் நிலையங்களில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மார்க்கமாக வலிவலம் வந்தடையலாம். தொடர்புக்கு - 97153 03875.

    தொடர்பு முகவரி

    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில்
    திருவலிவலம், 
    திருக்குவளை வட்டம்
    நாகப்பட்டினம்

    -படங்கள் எச். ஜஸ்வந்த்குமார்


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp