Enable Javscript for better performance
எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    எண்ணியதைத் தரும் திண்ணியம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்

    By கு.வைத்திலிங்கம்  |   Published On : 01st July 2022 05:00 AM  |   Last Updated : 30th June 2022 06:50 PM  |  அ+அ அ-  |  

    murugan_thinniyam

    சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி

     

    திருமணத் தடை, குழந்தைப்பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியத்திலுள்ள அருள்மிகு சுப்ரமணிய (சண்முக) சுவாமி திருக்கோயில்.

    திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மற்ற சிவன் கோயில்களில் முருகப்பெருமான் சன்னதியில் வள்ளி-தேவசேனா சமேதராய் ஒரே மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளியிருக்கும் நிலையில், இக்கோயிலில் மூவரும் தனித்தனி மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் எண்ணியதைத் தருவார் திண்ணியம் முருகன் என்றும் கூறுவர்.

    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நுழைவுவாயில்

    கோயிலின் வரலாற்றுச் சிறப்பு

    இந்த கோயில் ஏற்பட்டு ஏறக்குறை 1400 ஆண்டுகள் ஆகிறது. சோழர்கள் காலத்தில் கோயில்கள் அனைத்தும் புத்துயிர் பெற்றன. அகண்டு விரிந்த நதியாக, கிளை ஆறுகளாக, சிறு ஓடைகளாக விவசாயத்தைப் பெருக்க ஊடறுத்தது காவிரி நதி. அந்தக் காலத்தில் ஊருக்கு ஊர் திருக்கோயில்கள் கட்டப்பட்டன. அந்த கோயில்களில் பிரதிஷ்டை செய்வதற்காக சிவலிங்கம், முருகன், வள்ளி-தேவசேனா போன்ற சிலைகளை உருவாக்கி, எடுத்துச் செல்வது வழக்கம்.

    அருள்மிகு சித்தி விநாயகர்

    அந்த வகையில் ஒரு ஊரில் புதிதாக சிவன் கோயில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருப்பணிகளும் தொடங்கின. வெகு தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்ட பாறைகள் எல்லாம் சோழ சிற்பிகளின் கைவண்ணத்தில் தூண்களாகவும், மண்டப விதானங்களாகவும் மாறின. கோயிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய தெய்வத் திருமேனிகளை வெளியூர்களிலிருந்து செய்து கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள்.

    சுப்ரமணிய சுவாமி சன்னதி கருவறை விமானம்

    அதன்படி ஒரு அழகிய சிவலிங்கமும்,  வள்ளி-தேவசேனா தேவியருடன் முருகப்பெருமானின் திருவிக்கிரகமும் செதுக்கப்பட்டு, வண்டியில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டது. அவர்கள் சிலைகளைக் கொண்டு செல்லும் வழியிலேயே, வண்டியின் அச்சாணி முறிந்து வண்டியின் குடை சாய்ந்தது. தெய்வ விக்கிரகங்கள் தரையில் விழுந்தன. இதனால் வண்டியுடன் வந்த தொழிலாளர்களும், அடியார்களும் பதறிப்போய், அந்த விக்கிரகங்களைத் தூக்க முயன்றும் அவை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அவற்றை அசைக்கவும் முடியவில்லை. சிறிதும் நகர்த்தக்கூட முடியவில்லை.

    கோயில் உள் மண்டபம்

    இதையும் படிக்கலாமே.. மகப்பேறு அருளும் திருச்சி உத்தமர்கோயில்

    தங்கள் ஊர் கோயிலில் இறைவனை குடியிருத்தி தினமும் ஆடை-ஆபரணங்கள் பூட்டி நைவேத்தியம் படைத்துப் பூஜிக்க வேண்டும். ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். அதன் பலனால் பிணியும், வறுமையும் அகன்று தங்கள் ஊர் செழிக்கும், தங்கள் தேசமும் வளம் பெறும் என்ற கனவுகளோடு ஆசை-ஆசையாய் தெய்வ விக்கிரகங்களை எடுத்து வந்தபோது, இறைச் சித்தம் வேறுவிதமாக அமைந்தது.

    இறைவன் கோடீசுவரர் சன்னதி விமானம்

    குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏதோ இறை சாந்நித்தியம் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர். எனவே அந்த இடத்தில் அந்தச் சிலைகளை வைத்து ஒரு கோயிலை நிர்மாணிப்பது என்று தீர்மானித்தனர். அவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட கோயில்தான்  எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றித் தரும் மிகப் புண்ணியம் வாய்ந்த திருத்தலமாக விளங்கும் திண்ணியம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். 

    இறைவன் கோடீசுவரர் 

    கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் இறைவன் கோடீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.  இந்த திருக்கோயில் இறைவனை ஒருமுறைத் தரிசிக்க கோடி மடங்கு புண்ணியத்தை வழங்கும் பேரருளாளன். தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அளிக்கும் இறைவனாக கோடீசுவரர் திகழ்கிறார். தேவேந்திரன் பூஜித்த தலமாகும் இது விளங்குகிறது.

    இந்தக் கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

    இறைவி பிருகந்த நாயகி சன்னதி கருவறை விமானம் 

    இறைவி பிருகந்தநாயகி

    இத்திருக்கோயிலின் இறைவி பிருகந்தநாயகி என்றழைக்கப்படுகிறார். சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வரத்தை வாரி வழங்கும் அம்மனாகத் திகழ்கிறார்.

    சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய சுவாமி 

    இக்கோயிலில் ஈசுவரன் எழுந்தருளியிருந்தாலும், பிரதான வாயிலில் முதன்மையாக சுப்ரமணிய சுவாமிதான் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோயில்களில் முருகன் சன்னதி அமைந்திருந்தாலும், சிவபெருமானைத் தரிசனம் செய்த பிறகே முருகப் பெருமானை தரிசிக்கும் வகையில் அமைப்பிருக்கும். ஆனால், இங்கு ஒரே இடத்தில் நின்று இருவரையும் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.

    சூரியபகவான் சன்னதி

    மற்ற சிவன் கோயில்களில் மயில் வாகனத்தில் வள்ளி-சேவசேனா சமேதராய் அல்லது  தனியாகவோ முருகப்பெருமான் எழுந்தருளியிருப்பார். ஆனால், திண்ணியம் திருக்கோயிலில் மூவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பதும் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இதனால் எண்ணியதைத் தருவார் திண்ணியம் முருகன், குருவாக இருந்து அருளும் குமரன் எனப் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

    தட்சிணாமூர்த்தி

    மேலும் சிவன் கோயில்களில் குரு தட்சிணாமூர்த்திதான் தென்திசை நோக்கி வீற்றிருந்து, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், இக்கோயிலில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி குரு அம்சத்துடன் தெற்குத் திசைநோக்கி எழுந்தருளி குருவாகத் தரிசனம் அளிக்கிறார். ஆதலால் இவரை வணங்கும் பக்தர்கள் சிறந்த கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.

    இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே.. பித்ரு, மாத்ருஹத்தி தோஷம்  நீக்கும் திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோவில்

    ஓராறு முகமும், ஈராறு கரங்களுமாகத் திகழும் திண்ணியம் அருள்மிகு சுப்ரமணியசுவாமிக்கு செவ்வரளி மற்றும் விருட்சிப்பூ மாலை சாத்தி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகமாகும்.

    பைரவர் சன்னதி

    இக்கோயிலில் சுப்ரமணிய சுவாமியின் வலது கரம் அபயம் காட்டுகிறது. பக்தர்களைக் காக்கும் கரமாக விளங்குகிறது. அதேசமயம்  இடது கரம் ஹஸ்தமாக இல்லாமல், அரிச ஹஸ்தமாக உள்ளது.  அதாவது பக்தர்களின் கஷ்டங்களைத் தான்  உள் வாங்கிக்கொள்ளும் கையாக உள்பக்கமாக அணைந்தபடி உள்ளது. பிற பத்துக் கரங்களும் பக்கத்துக்கு ஐந்தாக அமைந்து, பக்தர்களின் துயர்களையெல்லாம் களைகின்றன. திண்ணியம் திருக்கோயிலுக்கு வந்து கந்தனையும், அவரது தாய், தந்தையையும் வழிபட்டால் தோஷங்கள் அகலும். விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பிற சன்னதிகள் 

    கோயிலின் உள்நுழைந்தால் கொடிமரம், மயில் வாகனம், இடும்பன் சன்னதி, பிரகாரத்தின் தென்மேற்கில்  ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. மேலும் நவக்கிரக நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளன. கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.

    நவக்கிரக நாயகர்கள் சன்னதி

    எப்படிச் செல்வது? 

    மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலமாக லால்குடி, அன்பில் வழியாகவோ அல்லது லால்குடி, காட்டூர், செம்பரை வழியாகவோ திண்ணியம் கோயிலுக்குச் செல்லாம்.

    இக்கோயிலைப் பற்றியும் அறியலாமே.. வாஸ்து தோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

    கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, லால்குடி வழியாக செல்லும் நகரப் பேருந்துகள் மூலமாக திண்ணியம் செல்லலாம்.

    நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும், சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற வடமாவட்டங்களிலிருந்து  பேருந்துகளில் வருபவர்கள் நெ.1.டோல்கேட்டில் இறங்கி, லால்குடி வழியாக திண்ணியம் செல்லும் பேருந்துகளில் கோயிலுக்குச் செல்லலாம்.

    லால்குடியிலிருந்து திண்ணியம் கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதிகளும் உள்ளன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து லால்குடி வழியாக திண்ணியம் செல்ல கார், வேன் போன்ற வாகனங்கள் வசதியும் உள்ளது.

    தொடர்புக்கு: திண்ணியம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருபவர்கள் 99439 46086 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

    இதையும் வாசிக்கலாம்: சனி தோஷத்துக்கு தீர்வு காணும் வெண்ணாற்றங்கரை பெருமாள் கோயில்கள்

    தொடர்பு முகவரி

    அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
    திண்ணியம், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp