செல்வ வளங்களைப் பெருக்க உதவும் நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர்

பணம், நகைகள் மீதான தோஷங்களைப் போக்கி, செல்வ வளங்களை அளிக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இத்திருக்கோயில்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில். பணம், நகைகள் மீதான தோஷங்களைப் போக்கி, செல்வ வளங்களைப் பெருக்க உதவும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் அருள்வழி காட்ட குபேரனின் மகன்கள் வழிபட்ட திருக்கோயில் இது. மிகவும் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலில் இறைவன் ஐந்தடி உயரத்தில் கரும்பச்சை நிறத்தில் மரகதமேனியராய் வீற்றிருப்பதும் சிறப்புக்குரியதாகும்.

திருக்கோயில் நுழைவுவாயில்
திருக்கோயில் நுழைவுவாயில்

ஊரின் சிறப்பு

பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தபோது, அவர் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டார்.சிவபெருமான் தனது ஐந்து முகங்களான சத்யோஜாதம், வாமதேவம், அகோரம்,  ஈசானம், த்ருபுருஷம் ஆகியவற்றுடன் பிரம்மாவுக்கு காட்சித் தந்து அவரை மோட்சம் பெறச் செய்தாராம்.

சுந்தரேசுவரர்
சுந்தரேசுவரர்

ஐந்து முகங்களுடைய சிவபெருமானை தன் ஐந்து தலைகளால் (சென்னி) வணங்கி பிரம்மா மோட்சம் பெற்றதால், சென்னிசிவம் என்று அண்ணாமலையாரால் அசரீரியாக குபேரனின் மகன்களுக்கு அருள்வழி காட்டப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னிவளநாடு என்று பெயர் பெறலாயிற்று. தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

கோயிலின் தல வரலாற்றுச் சிறப்பு

பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வமரம், எந்த தேவலோகத்திலும் கிடைக்காத பெருமைகளை உடையது. எந்தவொரு சுயம்புலிங்கத்தின் மீது வைத்து "ஓம் நமசிவாய'' என்று ஓதி ஒருமுறை அர்ச்சித்து வழிபட்டால், உடனே அது பன்மடங்காகப் பெருகி பிரகாசித்து, நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் உடையது.

கோயிலின் கருவறை சன்னதி எதிரிலுள்ள மண்டபம்
கோயிலின் கருவறை சன்னதி எதிரிலுள்ள மண்டபம்

யோக, தவ, ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர, இந்த பொன்வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது. எவர் கரங்களிலும் நிலைத்திருக்காது. இவ்வளவு மகிமைகளுடைய பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேர பெருமான் அதைத் தனது இரு மகன்களான மணிக்ரீவன், நளகூபனிடம் அளித்து பூலோகம் எங்குமுள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு, இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார். சிறந்த சிவசேவகர்களான குபேரனின் மகன்கள், சுயம்புலிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்களும்கூட. இவர்களின் கண்களில்பட்ட பொன் வில்வசாரம் அவர்களது கரங்களில் நிலைத்து நின்றது.

சிவபெருமான் தனது தந்தைக்கு அளித்த தெய்வீக மருத்துவம் வாய்ந்த பொன் வில்வசாரம் எந்த சிவன்கோயிலில் பன்மடங்காகப் பெரும் தெய்வீகத் தன்மையுடையது என்ற தேவரகசியம் அறியாமல், பூலோகம் வந்த குபேரனின் மகன்கள் இங்குள்ள சிவாலயங்களில் சுயம்புலிங்க மூர்த்திகளின் மீது  பொன் வில்வசாரத்தை வைத்து வழிபட்டனர். பல இடங்களில் பசுமையாக, சாதாரண வில்வதளம் போலக் காட்சி தர, சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது.

விநாயகர்
விநாயகர்

பல கோடி யுக தல யாத்திரையின் பயனாக, கோடிக்கணக்கான சுயம்புலிங்க மூர்த்திகளைத் தரிசித்ததின் பலனாக, குபேரனின் மகன்கள் மணிக்ரீவன், நளகூபன் தெய்வீக பிரபஞ்ச மையமாகத் திகழும் திருவண்ணாமலைக்கு வந்து, பௌர்ணமியன்று பொன்வில்வ சாரத்தை அருணாச்சலேசுவரர் பாதங்களில் வைத்து, ஓம் நமசிவாய என்று ஓதினர். இதன் மகிமையையும், தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு இறைவன் அருணாச்சலேசுவரரிடம் வேண்டி நின்றனர். அண்ணாமலையாரிடம் வில்வதளம் சொர்ணமாக பிரகாசித்தது. இதன் மகிமையையும், தெய்வீக ரகசியத்தையும் அறிய வேண்டுமெனில்

" தென்திசைக் காவேரி இயல்சீர் சேர்

சென்னிச் சிவக்கயல் சுந்தரம் பார்''

என்றுக் கூறி, சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாக வழிகாட்டினார். இதைத் தொடர்ந்து குபேரனின் மகன்கள் இருவரும் தென்திசை நோக்கி பயணம் மேற்கொண்டனர். சோழவளநாட்டில் திருத்தவத்துறை என்ற பெயர்கொண்ட லால்குடிக்கு வந்து, அங்குள்ள சப்தரிஷீசுவரர் திருக்கோயிலின் சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினர். நீராடி எழுந்தபோது அவர்கள் வேறொரு திருக்கோயிலில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரத்திலிருந்த பொன் வில்வசாரம் மறைந்து போனதைக் கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர். தொடர்ந்து அந்த திருக்கோயிலின் கருவறை நோக்கிச் சென்ற போது அதியசம் ஒன்றைக் கண்டனர்.

குபேரரின் மகன்களான மணிக்ரீவன், நளகூபன்
குபேரரின் மகன்களான மணிக்ரீவன், நளகூபன்

கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்புலிங்கத் திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம் பொங்கிப் பொங்கி, பன்மடங்காகப் பெருகி ஒளிவீசுவதை குபேரனின் மகன்கள் கண்டனர். தொடர்ந்து இருவரும் மெய் சிலிர்த்து, ஓம் நமசிவாய என ஓதி அர்ச்சிக்க, அது மேலும் மேலும் பொங்கி பன்டமங்கு ஒளிவீசத் தொடங்கியது. கரும்பச்சை வண்ண மரகதத் திருமேனியில் ஸ்வர்ண வில்வதளம் பன்மடங்கு பொங்கி பிரகாசித்ததைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர்.

இதனால் மனம் நிறைந்து, பூரிப்புடன் தேவலோகத்துக்கு குபேரனின் மகன்கள் சென்றனர். தன் மகன்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும், தேவரகசியத்தையும் உணர்ந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் மகன்களுக்கு கிடைத்ததை எண்ணி, சென்னிவளநாடு எனப்படும் சென்னிவாய்க்கால் (நன்னிமங்கலம்) மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு குபேரன் வந்து வழிபட்டார். இதனால் பௌர்ணமி நாளன்று இக்கோயிலுக்கு வந்து, மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபடும் பக்தர்கள் சகல நன்மைகளையும், பொருள்களையும் பெற குபேரன் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

நந்தியெம்பெருமான்
நந்தியெம்பெருமான்

கோயிலின் அமைப்பு

மேற்குத் திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் முன்முகப்பை கடந்ததும் நீண்ட நடைபாதையும், அடுத்து இன்னொரு முகப்பும் உள்ளது. இதைத் தொடர்ந்து அகன்ற பிரகாரமும், மகா மண்டபமும் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் நடுவில் நந்தியெம்பெருமானும், பீடமும் அமைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறையும் அமைந்துள்ளது.

இறைவன் சுந்தரேசுவரர்

மேற்குத் திசை நோக்கிய சன்னதியில் லிங்கத் திருமேனியில் சுந்தரேசுவரர் எழுந்தருளியிருக்கிறார். ஐந்தடி உயரத்தில் கரும்பச்சை நிறத்தில் மரகதமேனியராய் இறைவன் சுந்தரேசுவரர் வீற்றிருப்பதும் சிறப்புக்குரியது. சுந்தரேசுவரின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் ஆனது. எனவே இத்திருக்கோயில் லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது.

அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி கருவறை விமானம்
அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி கருவறை விமானம்

இந்த சன்னதியில் அர்ச்சகர் கற்பூரத் தீபாராதனை காட்டும்போது, அந்த ஒளி இறைவனின் திருமேனியில் பட்டு, இறைவன் திருமேனி பளபளவென்று ஜொலிப்பதை காண கண்கோடி வேண்டும். பொதுவாக இறைவனின் கோமுகம் இடது புறத்தில்தான் இருக்கும். ஆனால், இத்திருக்கோயில் இறைவன் சுந்தரேசுவரரின் கோமுகம் வலதுபுறத்தில் அமைந்திருப்பதும் தனி விசேஷமானதாகும்.

அருள்மிகு  துர்க்கை அம்மன்
அருள்மிகு  துர்க்கை அம்மன்

கல்விக்கு அதிபதி புதன்.  எனவே மாணவ, மாணவிகள் புதன்கிழமைகளில் இக்கோயில் வலதுபுறத்தில் கோமுகத்தை கொண்டுள்ள இறைவனைத் தரிசித்தால் கல்வியில் சிறந்து விளங்குவர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நகை வியாபாரம் செய்வோர், நகைகள் மீதான தோஷம் நீங்க தங்கள் கடைகளிலிருந்து நகைகளை எடுத்து வந்து, சுந்தரேசுவரர் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தி எடுத்துச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இறைவி மீனாட்சியம்மன்

மகா மண்டபத்தின் இடதுபுறத்தில் இறைவி மீனாட்சியம்மன் எழுந்தருளியிருக்கிறார். முன்கை அபய முத்திரையைக் காட்ட, மறுகையில் மலர்கொண்டு, கால் கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி காட்சியளித்து வருகிறார். மகா மண்டபத்திலிருந்து இறைவன் சுந்தரேசுவரரையும், இறைவி மீனாட்சியம்மனையும் தரிசித்து, எண்ணியதை பெறலாம். கருவறை தேவக்கோட்டத்தில் கையில் சங்கு சக்கரத்துடன் துர்க்கையம்மனும், தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

அருள்மிகு மீனாட்சியம்மன் கருவறை விமானம்
அருள்மிகு மீனாட்சியம்மன் கருவறை விமானம்

இரு பெருமாள் சன்னதிகள்

பிரகாரத்தின் மேற்கில் பெருமாள் கோயில்  உள்ளது. லட்சுமிதேவியை மடியில் அமர்த்தியவாறு லட்சுமி நாராயணர் ஒரு சன்னதியிலும், அவருக்கு அருகில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாளும் காட்சியளிக்கின்றனர்.

அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதி விமானம்
அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதி விமானம்

சண்முகர்

திருச்செந்தூரில் சூரபதுமனை சம்ஹாரம் செய்த பிறகு, முருகப்பெருமான் சாந்தமானார். அந்த வகையில் இத்திருக்கோயில் வள்ளி-தேவசேனா சமேதராய் சண்முகர் என்ற திருநாமத்துடன் முருகப்பெருமான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.சாந்தமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் மயில் வாகனத்தில் சண்முகர் எழுந்தருளியுள்ளார். மற்ற கோயில்களில் மயிலின் தலை வலதுபுறத்தில் இருக்கும். ஆனால், இக்கோயிலில் இடதுபுறத்தில் மயிலின் தலை அமைந்திருப்பதும் தனிச் சிறப்புக்குரியது. தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வள்ளி-தேவசேனா சமேதராய் சண்முகர்
வள்ளி-தேவசேனா சமேதராய் சண்முகர்

சண்டிகேசுவரர்கள் இருவர்

கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு இரு சண்டிகேசுவரர்கள் உள்ளனர். ஒருவர் கடாசனத்திலும், மற்றொருவர் அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காகக் காட்சியளிக்கின்றனர். கோயிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் சன்னதியும், இதன் அருகில் பைரவர் சன்னதியும், மேற்கில் செவிசாய்த்த விநாயகர் சன்னதியும் அமைந்துள்ளன. நவக்கிரக நாயகர்களில் சூரியனைப் பார்த்தவாறு மற்ற நவக்கிரகங்கள் இங்கு எழுந்தருளியுள்ளதும் விசேஷமானதாகும்.

கோயிலின் தல விருட்சமான பொன் வில்வமரம்
கோயிலின் தல விருட்சமான பொன் வில்வமரம்

சிறப்பு வாய்ந்த தலவிருட்சம்

கோயில் வடக்குப் பிரகாரத்தில் பொன்வில்வ மரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. பொன் வில்வசார தரிசனத்தையும், இதன் பலாபலன்களையும் கலியுக மக்கள் அடையும் வகையில், லட்சுமிதேவி பொன் வில்வமரத்தைத் தலவிருட்சமாக இக்கோயிலில் படைத்து, ஒவ்வொரு வில்வதளத்திலும் தானே உறைந்து பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சத்தைத் தருகிறார்.

பைரவர்
பைரவர்

குபேர சந்திர நாகங்கள்

பிரபஞ்சத்தின் அனைத்து கோடி நாகலோகங்களிலும் உள்ள நாகங்களுக்கு அதிபதியாக விளங்கும் ஸ்ரீ அஸ்தீக சித்தர் யோககன யாத்திரையில் வழிபடும் நித்யபூஜை திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. இதனால் இக்கோயிலில் குபேர சந்திர நாகங்களின் நடமாட்டங்கள் அதிகமாக இருக்கும்.

குபேரன், லட்சுமிதேவியின் அருள் கிடைக்க

லட்சுமிதேவி தன் கடாட்சத்தை நாம் ஈட்டும் செல்வத்திலும், சேர்த்து வைப்பதிலும் அருளுவதில்லை. முறையாக சம்பாதிக்கப்படாத பூர்வீக சொத்திலும், குறுகிய வழியிலும், அதர்மமாக உடல் வருத்தமின்றி எப்படியாவது ஈட்டிய பொருளிலும் நிலை நிறுத்துவதில்லை. பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் அந்த கிரிவலம் முடிந்த பிறகு, இத்திருக்கோயிலுக்கு வந்து  தலவிருட்சமான பொன் வில்வமரத்துக்கு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிபிரதட்சிணம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால் குபேரன், லட்சுமிதேவியின் அருளைப் பெறலாம். இதற்கு காரணம்  சிவபெருமான் குபேரனுக்கு அளித்த பொன்வில்வசாரம் இந்த கோயிலில் பன்மடங்காகப் பெருகி அற்புதம் அளித்ததே காரணமாகும்.

நவக்கிரக நாயகர்கள்
நவக்கிரக நாயகர்கள்

பௌர்ணமி தினத்தன்று இறைவன், இறைவியை வலம் வந்து வழிபடும் பக்தர்கள் தம் வாழ்நாளில் முறையாக ஈட்டும் ஒவ்வொருபைசா சம்பாதியத்திலும் பரிபூரண சக்தி நிறைந்திடவும், பரிபூரண லட்சுமி கடாட்சத்தைப் பெறவும், தன்னுடைய சங்க பதும புண்ணிய சக்திகளையும், அவற்றின் ஆசீர்வாதங்களையும் கூட்டி, அவற்றை நல்ல முறையில் பெருக்கி நிறைவு பெறச் செய்து செலவிட செய்யவும்,  வியாபாரம், தொழில், பதவி போன்றவற்றில் அதர்ம முறையில் சம்பாதித்து பணக் கஷ்டம் இல்லாமல் இருந்தும்,  மனகஷ்டப்படுவோரின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் ஈட்டிய நிதியை தர்ம காரியங்களில் செலவிட செய்து சொத்தை பெருக்கவும் குபேரன் அருள்பாலிக்கிறார் என்பதால், ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி நாளில் இறைவனையும், இறைவியையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

இத்திருக்கோயில் பணம், நகைகள் மீதான தோஷங்களைப் போக்கி, செல்வ வளங்களை அளிக்கும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. மேலும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவன், இறைவிக்கு மாலை சாத்தி வழிபட்டால்,  அவர்களின் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சிறப்பு வாய்ந்த பிரதோஷ வழிபாடு

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதுபோல பௌர்ணமி வழிபாட்டிலும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பர்.
குபேரனின் மகன்கள் ஆனி மாத பௌர்ணமியில்தான் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பௌர்ணமியன்று மீனாட்சி சுந்தரேசுவரரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதுபோல ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ருத்ராபிஷேக வழிபாடு, ஆடி, தை வெள்ளி, வைகுந்த ஏகாதசி, சிவராத்திரி போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டிலும் மார்ச் 15 முதல் 30ஆம் தேதி வரையிலும், செப்டம்பர் 15 முதல் 30-ஆம் தேதி வரையிலும் சூரிய பூஜை வழிபாடு நடைபெறும். அப்போது சூரிய ஒளி சுந்தரேசுவரர் மீது பட்டு காட்சியளிக்கும் போது, மரகதலிங்கத் திருமேனி ஜொலிக்கும். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில்  சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் திருக்கல்யாணம் போன்றே, அதே நாளில் இக்கோயிலிலும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ள இரு சண்டிகேசுவரர்கள்
ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ள இரு சண்டிகேசுவரர்கள்

எப்படி செல்வது?

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் நன்னிமங்கலம் அமைந்துள்ளது. லால்குடியிலிருந்து சாத்தமங்கலம், ஆனந்திமேடுக்கு செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் நன்னிமங்கலம் பகுதி அமைந்துள்ளது.

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலிருந்து கோயிலுக்கு வருபவர்கள் மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், தாளக்குடி, வாளாடி, ஆங்கரை, லால்குடி வழியாக நன்னிமங்கலம் கோயிலுக்கு வரலாம்.

இதுபோல கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையம் வந்து, மேற்கண்ட வழித்தடம் வாயிலாக கோயிலை வந்தடையலாம். நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்தும், பெரம்பலூர், சென்னை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற இதர மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் சமயபுரம், நெ.1. டோல்கேட் வந்து தாளக்குடி, வாளாடி, ஆங்கரை, லால்குடி வழியாக நன்னிமங்கலம் கோயிலுக்கு வந்து சேரலாம்.

மேலும் லால்குடியிலிருந்து நன்னிமங்கலத்துக்கு நகரப் பேருந்துகள், ஆட்டோ, கார் போன்ற வசதிகள் உள்ளதால், லால்குடிக்கு வரும் நகரப் பேருந்துகளில் வந்து, பின்னர் கோயிலை சென்றடையலாம். திருச்சி ரயில், விமான நிலையங்களிலிருந்தும் கார், வேன் போன்ற வசதிகள் நன்னிமங்கலத்துக்கு உண்டு.

நடைதிறப்பு: இக்கோயில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் திறப்பு நேரம் மாறுபடும்.

தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் கோயில் பரம்பரை அறங்காவலரான என்.சியாமளாவை 9486597484 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,
நன்னிமங்கலம்,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com