ராகு-கேது தோஷம் நீக்கும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்

ராகு-கேது தோஷம் நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது கத்திரிநத்தம்  காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
ஸ்ரீஞானாம்பிகை உடனாய ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர்
ஸ்ரீஞானாம்பிகை உடனாய ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர்

கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் கோயில் ராகு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. கீழப்பெரும்பள்ளம் கோயில் கேது தலமாக விளங்குகிறது. ராகு, கேது இரண்டுக்கும் பரிகாரத் தலமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தி. இதேபோல, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அருகேயுள்ள கத்திரிநத்தம் ஞானாம்பிகை உடனாய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் ராகு, கேது தலமாகப் போற்றப்படுகிறது. இந்த இரு கோயில்கள் மட்டுமே ராகு, கேது இரண்டுக்குமான தலமாக இருக்கிறது.

காளஹஸ்திக்கு நிகரானதாகக் கருதப்படும் கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் தென் காளஹஸ்தியாகவும் உள்ளது. இக்கோயில் சோழப் பேரரசின் மாமன்னன் ராஜராஜன் காலத்தில் எடுக்கப்பெற்று அச்சக்கரவர்த்தியால் வழிபட்ட சிறப்புடையது.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

மாமன்னன் ராஜராஜசோழன் (கி.பி. 985 - 1014) தன்னுடைய சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரித்து அவ்வளநாடுகளுக்குத் தன் பட்டப் பெயர்களைச் சூட்டினான். அவ்வாறு பகுக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானதாக சிங்க வளநாடு திகழ்ந்தது. இந்தச் சிங்க வளநாட்டில் குளிச்சப்பட்டு, கத்திரிநத்தம், தளவாய்ப்பாளையம், மருங்கை ஆகிய ஊர்கள் இடம்பெற்றிருந்தன.

காளகஸ்தீஸ்வரர் சன்னதி முகப்பு
காளகஸ்தீஸ்வரர் சன்னதி முகப்பு

இதில், கத்திரிநத்தத்தில் அமைந்துள்ள இக்கோயில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு செங்கற் கட்டுமானத்தில் கட்டப்பட்டது. பழங்காலம் முதல் செங்கல் தளியாகவே இருந்துவந்த இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழன் காலத்திலேயே விநாயகர், சுப்பிரமணியர், ஈஸ்வரர், அம்மன், கைலாய தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கால பைரவர், நந்தீஸ்வரர் ஆகியவை மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் சிற்பங்கள் அமைக்கப்பட்டன.

திருச்சுற்று
திருச்சுற்று

பாடல் பெற்ற தலம்

கண்ணப்ப நாயனாருக்கு ஈசன் அருள்பாலித்தது இந்தக் கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோயில். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் வழிபடப்பட்ட தேவாரப் பாடல்கள் பாடிய தலம் இது. சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை காளத்தீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்ற சிறப்பும் இத்தலத்துக்கு உண்டு. காளத்திநாதனை தன் தலைநகரமாகிய தஞ்சாவூருக்கு அருகிலேயே அமைத்து திருக்காளத்தியாகவே வழிபட விரும்பியதால்தான் ராஜராஜன் இக்கோயிலைக் கட்டியுள்ளான்.

ஸ்ரீ கன்னி மூலை விநாயகர்
ஸ்ரீ கன்னி மூலை விநாயகர்

இறைவன் - காளகஸ்தீஸ்வரர்

இக்கோயிலில் மூலவராக லிங்க வடிவில் காளஹஸ்தீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இச்சிவலிங்கம் தஞ்சாவூர் பெரியகோயிலின் மூலவரான ராஜராஜேச்சரமுடைய பரமசாமி என அழைக்கப்படும் பெருவுடையாரின் திரைவடிவத்தைப் போன்று உள்ளது.

கோயில் முகப்பிலுள்ள நந்திகேஸ்வரர்
கோயில் முகப்பிலுள்ள நந்திகேஸ்வரர்

தஞ்சாவூர் பெரியகோயிலுக்குரிய ஆகம சிற்ப சாஸ்திர அளவீட்டுக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதால்தான் பெருவுடையாரின் தோற்றத்திலேயே இந்த லிங்கம் அமைந்துள்ளது. வட்ட பீடம், அகண்ட பாணம், அரை வட்ட வடிவில் பாண சிகரம் ஆகியவை அமைந்துள்ளன.

இறைவி - ஞானாம்பிகை

மாமன்னன் ராஜராஜன் சோழன் காலத்தில் திருக்காமகோட்டம் எனப்படும் தனித்த அம்மன் சன்னதி அமைப்பதில்லை. பின்னர், வந்த சோழ மன்னர்கள் காலத்தில்தான் தனித்த அம்மன் வடிவம் இடம்பெற்றது. அதேபோல, இத்திருக்கோயிலிலும் பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட தனி அம்மன் திருமேனி உள்ளது. அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை. திருக்காளத்தியில் அம்பிகையின் பெயர் ஞானாம்பிகை என அழைக்கப்படுவதைப் போல இங்கும் அத்திருநாமமே உள்ளது. நின்ற கோலத்தில் அக்கமணி மாலையும் தாமரை மலரும் பின்னிரு கரங்களில் ஏந்திய நிலையில் அபய வரத கரங்களோடு தேவி காட்சி தருகிறாள்.

இத்திருக்கோயிலில் அஷ்ட பரிவாரங்களான சூரியன், சந்திரன், சப்தமாதர், கணபதி, முருகன், ஜேஷ்டா தேவி, சண்டீசர், பைரவர் ஆகிய திருமேனிகள் இடம் பெற்றிருந்தன. பின்னாளில் இக்கோயில் சிதைவுற்ற பின்பு மீண்டும் பின் வந்தோர் திருப்பணிகள் செய்தபோது சண்டீசர், பைரவர், கணபதி, முருகன் போன்ற பழைய திருமேனிகளே எஞ்சியிருந்ததால் புதிதாக ஜேஷ்டா தேவிக்குப் பதில் கஜலட்சுமியை மட்டும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஸ்ரீ துர்க்கை
ஸ்ரீ துர்க்கை

இதேபோல, கோஷ்ட தெய்வங்களாக ஆலமர செல்வராகிய தட்சிணாமூர்த்தி, காளையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் ரிஷபதேவர் (காளை) ஆகிய திருமேனிகள் சோழர் காலத்தைச் சார்ந்தவை. பிற்காலத் திருப்பணிகளின்போது பிரம்மன், துர்க்கை ஆகிய திருவடிவங்களை இடம் பெறச் செய்துள்ளனர். தனித்த சிவலிங்க பாணம் ஒன்று பிரகாரத்தில் காட்சி நல்குகிறது.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

சிறிய வடிவில் திகழும் முருகப் பெருமான் சிற்பமும், கணபதியார் வடிவமும் சோழர் கலையின் சிறப்புக்குரிய படைப்புகள். சண்டீசர் அமர்ந்த கோலத்தில் கையில் மழுவினை ஏந்தியவாறு காணப்படுகிறார். ரிஷபம் (நந்தி) சோழர் கலையின் சிறப்புக்குரிய வடிவமாகும்.

திருக்குளம்
திருக்குளம்

புராண வரலாறு

ஒரு முறை இறைவனுடைய சாபத்துக்கு ஆளான சப்தரிஷிகளான அத்ரி, வசிட்டர், காச்யபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகியோர் 48 நாட்கள் கோயில் எதிரே உள்ள குளத்தில் மூழ்கி, ஸ்ரீகாளகஸ்தீஸ்வரரை வழிபட்டனர். இதன் மூலம், அவர்களுடைய சாபம் நீங்கப்பெற்று, கடுமையான நோயிலிருந்தும் விடுபட்டனர்.

ஸ்ரீ காலபைரவர்
ஸ்ரீ காலபைரவர்

துளஜா மன்னர் திருப்பணி

இக்கோயிலின் முன் மண்டபத்தில் தஞ்சாவூர் மராட்டிய மன்னர் முதலாம் துக்கோஜி என்கிற துளஜா என்பவரின் கல்வெட்டு சாசனம் உள்ளது. அதில், ஆங்கீரஸ ஆண்டு கார்த்திகை மாதம் இரண்டாம் நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, 1752ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் நாளாகிய செவ்வாய்க்கிழமையை குறிக்கிறது.

மேலும், ராய மானியமாகிய துக்கோஜி மகாராஜா சப்தரிஷி நத்தம் என்கிற ஊரில் உள்ள ஸ்ரீகாளகஸ்தீவர சுவாமிக்கு சர்வ மானியமாக நிலம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. ராராமுத்திரக்கோட்டை எல்லைக்கு மேற்கும், குளிச்சப்பட்டு எல்லைக்கு கிழக்கும், மருங்கை எல்லைக்கு தெற்கும், குளிச்சப்பட்டு எல்லைக்கு வடக்கும் ஆகிய இந்த நான்கு எல்லைக்கும் உள்பட்ட சப்தரிஷி நத்தம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சர்வ மானியமாக பிரமாணம் செய்து கொடுத்தார் எனவும் கல்வெட்டு விளக்குகிறது.

வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணியர்
வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணியர்

பின்னர், இக்கோயிலில் 30.6.1955ஆம் ஆண்டு நடைபெற்ற மகா குடமுழுக்கு விழாவுக்கு பிறகு 5.6.2011 அன்று குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

காளகஸ்திக்கு இணையான பலன்

தொண்டை மண்டலத்து திருக்காளத்தி என்கிற தலத்தை ராகு-கேது தலம் எனக் குறிப்பிடுவர். ராகு - கேது  என்கிற கோள்களின் சாரத்தால் ஏற்படும் தீவினைகள் அனைத்தும் அங்கு நீங்கும் என்பது வழிபாட்டு மரபு. அதே பலனை கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலிலும் மக்கள் வழிபட்டு நலம் பெறுகின்றனர்.

ஸ்ரீ பிரம்மா
ஸ்ரீ பிரம்மா

இறைவி மீனாட்சியம்மன்

ராகு, கேது பரிகார தலமாகத் திகழும் இக்கோயிலில் குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும், குறைவற்ற செல்வத்துக்கும் ஸ்ரீகால பைரவர் வழிபாடும் செய்கின்றனர். மேலும், பிரதோஷ வழிபாடும் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்

வைதீக முறைப்படி நவகிரகங்கள்

மற்ற கோயில்களில் வழக்கமான ஆகம விதிப்படி சூரிய பகவானை மையமாக வைத்து நவகிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோயிலில் வைதீக முறைப்படி நவகிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல, கத்திரிநத்தம் காளகஸ்தீஸ்வரர் கோயிலிலும் நவக்கிரகங்கள் வைதீக முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, நவகிரகங்களில் தெற்கு பகுதியில் ராகுவும், அடுத்து அங்காரகனும் இடம்பெற்றிருப்பது சிறப்புக்குரியது. இங்கு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ கெஜலட்சுமி
ஸ்ரீ கெஜலட்சுமி

திங்கள்கிழமை விசேஷம்

இக்கோயிலில் வாரந்தோறும் திங்கள்கிழமை ராகு காலமான காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். இங்கு வந்து பூஜை செய்தால் நீண்ட காலமாக தடைப்பட்டுள்ள திருமணம், வியாபாரம், தொழில் விருத்தி, உத்தியோகம், பதவி உயர்வு போன்றவை நடைபெறும். மேலும், ஆரோக்கியமாக வாழ்ந்திட, வளமான வாழ்வு அமைந்திட, நீடித்த ஆயுள், நிறைமதி, பூரண செல்வம் நிலைத்திட, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் பெற்றிட, கல்வியில் சிறந்திட இக்கோயில் ஞானாம்பிகை உடனாய காளகஸ்தீஸ்வரரை வழிபடலாம்.

ஸ்ரீ சண்டிகேஸ்வரர்
ஸ்ரீ சண்டிகேஸ்வரர்

செல்லும் வழி

தஞ்சாவூரிலிருந்து நாகை சாலையில் 8 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலம் மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோ அல்லது நடந்தோ செல்லலாம்.

நவக்கிரகங்கள்
நவக்கிரகங்கள்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கத்திரிநத்தம் வழியாக ஒரத்தநாடுக்குச் செல்லும் பேருந்திலோ, பழைய பேருந்து நிலையத்திலிருந்து கத்திரி நத்தத்துக்கு இயக்கப்படும் சிற்றுந்திலோ (மினி பஸ்) சென்றடையலாம். வெளியூரிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி மாரியம்மன் கோயில் வழித்தட பேருந்துகள் மூலம் செல்லலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி, சாலை வழியாகச் சென்றடையலாம்.

தெற்கு மூலையில் அமைந்துள்ள புதன், அங்காரகன்
தெற்கு மூலையில் அமைந்துள்ள புதன், அங்காரகன்

தொடர்புக்கு: 9360971329 (ராஜா சிவாச்சாரியார்)

நடைதிறப்பு

இக்கோயில் நாள்தோறும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

ஸ்ரீஞானாம்பிகை உடனாய ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில்,
கத்திரிநத்தம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.