காரியத் தடையை நீக்கும் தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன் கோயில்

ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தியாக இத்தலம் விளங்குகிறது.
தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்
தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன்

திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

பேரரசர்கள் தங்கள் வெற்றிக்குத் தெய்வமாக விளங்கும் கொற்றவைக்கு ஆலயங்கள் அமைப்பது பண்டைய மரபு. தஞ்சை நகரின் புகழுரைக்கும் செந்தலைத் தூண்கள் (நியமத்துத் தூண்கள்) சுவரன்மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையன் எடுப்பித்த நியமத்து மாகாளத்துப் பிடாரி கோயிலின் தூண்களே என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நியமத்து மாகாளத்துப் பிடாரி தேவியைப் பாண்டியன் மாறஞ்சடையன், தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவன், சோழ மன்னன் ராஜகேசரி வர்மனான ஆதித்தன் போன்ற பெரு மன்னர்கள் போற்றி வழிபட்டனர் என்பதை அதே தூண்களில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இதனால் தமிழகத்து, அனைத்து மன்னர் மரபினர்களும் தேவிக்கு எத்துணை ஏற்றம் தந்து வழிபட்டனர் என்பது தெரிய வருகிறது. இதே நெறியில்தான் விஜயாலயனும் தஞ்சையில் நிசும்பசூதனியை பிரதிஷ்டை செய்தான்.

கோயில் நுழைவுவாயில்
கோயில் நுழைவுவாயில்

அன்னை பராசக்தி துர்க்கையாக, காளிதேவியாகப் பல்வேறு வடிவங்கள் பூண்டு, தீமையின் உருவாகத் திகழ்ந்த அரக்கர் பலரை வதம் செய்தாள் என்பதைத் தேவி மகாத்மியம் உரைக்கிறது. தேவியின் உன்னதத்தை வேதத்தில் கூறப்படும் 'ராத்திரி சூக்தம்' என்பதிலிருந்து பல நூல்கள் எடுத்துரைக்கின்றன.

கோயில் முகப்பு
கோயில் முகப்பு

தேவி துர்கா பரமேசுவரியாக இரத்தபீஜன் எனும் அரக்கனை அழித்தபோது, முதலில் நிசும்பனும் பின்னர் அவன் தம்பி சும்பனும் தேவியுடன் போர் தொடுத்தனர். அகம்பிடித்த அரக்கர்கள் இருவரையும் தேவி அழித்தாள். அப்போது அவள் பூண்ட வடிவே 'நிசும்பசூதனி' என்பதை நூல்கள் கூறுகின்றன.

விஜயாலயன் பிரதிஷ்டை

தஞ்சை கீழவாசலில் விஜயாலய சோழன் பிரதிஷ்டை செய்த நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளிதேவியின் வடிவம் பீடத்தின் மேல் அமர்ந்த கோலத்திலுள்ளது. இச்சிற்பத்தின் வலக்கால் மடங்கி ஆசனத்தின் மீது அமர்ந்திருக்க, இடக்கால் தொங்கிய வண்ணமாக உள்ளது. கையில் கத்தியும் கேடயமும் உள்ளன. மேல் பாகத்தில் வலக்கையில் ஏந்திய சூலத்தைக் கொண்டு காலடியில் இருக்கும் அரக்கனைக் குத்தித் தள்ளுவது போல அமைந்துள்ள இத்திருமேனிக்குப் பாம்பினாலாகிய குசபந்தமும், சடைமுடியும் விளங்குகின்றன.

நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன்

கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் யோக பட்டத்தில் அமர்ந்திருக்கும் சிவனாரது திருவுருவமும், காளி கோயிலை ஒட்டிய மணற்பகுதியில் மார்பு வரை புதைந்துள்ள கெளமாரி உருவமும் மிகப் பழமையான 8 - 9 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களாகும். இந்தப் பழைமை எச்சங்களோடு தேவி இங்குக் கோயில் கொண்டுள்ளாள். பொதுவாக எல்லா ஊர்களிலும் காளி கோயிலாக அல்லது பிடாரி கோயிலாகத் தேவியின் திருமுற்றங்கள் காணப்படும். இங்கு இடம் பெற்றிருக்கும் திருவுருவங்கள் 4 அல்லது 8 கரங்களுடன் திகழும். பெயர்களும் காளி, காளாபிடாரி, பட்டாரகி என்பனவாகக் குறிக்கப்பெறும்.

கோயில் மண்டபம்
கோயில் மண்டபம்

புதுமையான வடிவில் காளி

ஆனால் தஞ்சையில் விஜயாலயன் பிரதிஷ்டை செய்த தேவிக்கு "நிசும்பசூதனி' என்ற சிறப்புப் பெயர் காணப்படுகிறது. இதனால், இவ்வடிவம் மற்றக் காளி, பிடாரி உருவங்களிலிருந்து மாறுபட்டுத் திகழ்ந்திருக்க வேண்டும். தஞ்சைக் குயவர் தெருவிலுள்ள உக்கிரமாகாளி மற்ற இடங்களில் காணப்படும் முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த, காளாபிடாரியாகவே காணப்படுகிறாள். ஆனால் தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வடபத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள்.

ஆறு அடி உயரத்துக்கும் மேலுள்ள இச்சிலையில் தேவி அமர்ந்து காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் கேசம் தீச்சுடர்போல் மேல் எழுகிறது. முகத்தில் ஓர் உறுதி. அசுரப் பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரியகுழை. சதை வற்றிய உடலில் வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாகச் சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. எட்டுக்கரங்கள். அவை சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது வலது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின் மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது. அதன் மீது ஊன்றியுள்ள அவளது காலில், எலும்பாக இருப்பினும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக் காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மூச்சுத் திணறுகின்றனர். ஓடுகின்றனர். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்க்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

வடபத்ர காளியம்மன்
வடபத்ர காளியம்மன்

கம்பீரமான தோற்றம்

தீமையை அழித்து அடியவர்களுக்கு அன்னை அருளமுது அளிக்கின்றாளோ எனக் கருதுமாறு கம்பீரமாக அமர்ந்துள்ளாள். இதை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதேவடிவில் அன்னை எலும்புருவில் காட்சியளிக்கும் மற்றொரு சிற்பம் இருப்பதாகச் சிற்பவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இவள்தான் விஜயாலயன் வடித்த நிசும்பசூதனி என்பதில் ஐயமில்லை.

அவளுக்காக விஜயாலயனால் எடுக்கப்பட்ட கோயில் அழிந்தாலும், திருமேனி நிலை குலையாமல் இருப்பது தஞ்சையின் பெரும் பேறாகும். வரலாற்று ஏடுகள் குறிக்கும் தஞ்சை நகரின் தொன்மையான தேவியின் தெய்வத் திருவுருவமும் இதுதான் என்பது சிறப்புக்குரிய செய்தி.

வேண்டிய சக்தியைக் கொடுத்த காளி

விஜயாலய சோழன் காலம் முதல் வேண்டிய சக்தியைக் கொடுத்து அருள்புரிகிறாள் நிசும்பசூதனி என்கிற வடபத்ரகாளியம்மன். சிறப்பாக ஆட்சிபுரிவதற்கு இக்காளியையே விஜயாலய சோழன் நாடினான். இக்கோயில் தேவியை வழிபட்ட சோழ மன்னர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர்.

இக்கோயிலில் ஆப்பசார பூஜைகள் செய்தால் மன மற்றும் உடல் ரீதியான முடக்கத்தை நீக்கி, சோர்விலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். பொதுவாக, எதிரியைக் கண்டுபிடித்துவிடலாம்; ஆனால், துரோகியைக் கண்டறிய முடியாது. இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் அனைத்து எதிர்ப்புகளும் உடைத்தெறியப்படும். காரியத் தடை எதுவாக இருந்தாலும் தகர்த்தெறியப்பட்டு, வெற்றியைத் தரும்.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள எண் திசை காளிகள்
மண்டபத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள எண் திசை காளிகள்

ராகு, கேது நிவர்த்தி தலம்

இக்கோயிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும். இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய பிரச்னைகள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

ஒரே இடத்தில் எண் திசை காளிகள்

அக்காலத்தில் தஞ்சை நகரைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் காளி கோயில் அமைக்கப்பட்டது. இதில், முதலாவது காளி கோயில் வடபத்ர காளியம்மன் கோயில். எட்டு திசைக்கும் செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்தால், தூண்களில் உள்ள எண்திசை அம்பாள்களையும் ஒரே இடத்தில் வழிபட்டுவிடலாம்.

ஆண்டுப் பெருவிழா

இக்கோயிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை 21 நாள்களுக்கு ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதில், பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பெளர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

செல்லும் வழி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தன் கோயில் வழியாக இக்கோயிலுக்குச் சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு நடந்தும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களிலும் செல்லலாம். வெளியூர்களிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் பயணம் செய்யலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தஞ்சாவூருக்கு வந்து வரலாம்.

நடை திறக்கப்படும் நேரம்

காலையில் 8 முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன் கோயில்,
பூமால் ராவுத்தன் கோயில் தெரு,
கீழவாசல், தஞ்சாவூர் -  613 007.

தொடர்புக்கு: 04362 - 223384

படங்கள்: எஸ்.தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com