சாயா கிரகங்கள் என்று கூறப்படும் ராகுவும் கேதுவும் இந்த கலியுகத்தில் பல்வேறு நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஒருவரின் வாழ்க்கை தரத்தை திடீர் என்று மேலே தூக்கி உயர வைக்கும் அல்லது சூழ்ச்சி என்கிற வலையில் மாட்டி நிலைகுலைய வைக்கும்.
ராகு உருவாக்கும் செயல்கள் வெளிப்படையாக தெரியும், ஆனால் கேது என்பவர் இலை மறை காய் மறையாக தெரியும்படியாக செயல்படுத்துவார். நம் நாட்டில் நிறைய பேர் வாழ்க்கையில் பட்டரற்ற பெரிய மகான்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் பிறந்தது கேதுவின் நட்சத்திரங்களாக அமையப்பெற்றுள்ளது. அதற்கும் அவரவர் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றால் தான் நடைபெறும். ஜாதகருக்கு இந்த கிரகங்களும் நன்மையும் தீமையும் கண்ணிமைக்கும் நேரத்தில் திடீர் என்று செய்ய வல்லமை மிக்கவர்கள். ஜோதிட சாஸ்திரித்தில் ராகு போகக் காரகன், கரும்பாம்பு என்றும் கேது ஞானக்காரகன், செம்பாம்பு என்று கூறுவார்.
இந்த இரு கிரகங்களில் ஒன்றான மாய வலையில் பின்னுவதில் சாமர்த்தியசாலியானா கேதுவை பற்றி மட்டும் பார்ப்போம். கேது என்பவன் ஞானத்தை தருபவன் என்று பெருமை பட முடியாது. கேது ஞானத்தை முடக்கவும், அஞ்ஞானத்தை உருவாக்கவும் செய்வார். அவர் இருக்கும் இடம் அதாவது பாவத்தை பொறுத்து மாறுபடுவார். கேது என்பவர் வலை என்று கூறலாம். ஒரு மனிதனின் செயல், மனம் என்று அனைத்தையும் அவர் வலையில் சிக்க வைப்பார். ஒருவரின் உடலில் நோய் தெரியாவண்ணம் மறைந்து தீவிரமானால் அங்கு கேது தன்னுடைய செயலை செய்திருப்பார் என்பது உண்மையே. கேதுவால் நன்மைகளும் உண்டு. அதேவேளையில் தீமைகளும் உண்டு. எந்தக் காரணமும் ஒரு கிரகம் மட்டும் மூல காரணம் என்று சொல்ல முடியாது. அவற்றில் பல்வேறு கிரகங்களும் பாவங்களும், லக்கினமும், ராசியும் உள்ளடங்கும். முக்கியமாக கேதுவின் செயல் ஆராயும்பொழுது பல்வேறு செயல்கள் தென்படுகிறது.
எடுத்துக்காட்டாக பன்னிரெண்டில் கேது இருந்தால் அவருக்கு மறுபிறவி என்பது கிடையாது என்பர். இது வாய்வாக்காக சொல்லப்பட்டாலும் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பன்னிரெண்டில் கேது இருந்தால் அவர் ஒரு மனிதனை எதாவது ஒன்றில் அடிமை வலையில் சிக்க வைப்பார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று பாரதி கூற்றுக்கு ஏற்ப கேது என்பவர் சூது என்ற சூட்சமமும் அடங்கும். முக்கியமாக நான் பார்க்கும் ஒருசில நபர்கள் நம் வருவதுகூட தெரியாமல் கைபேசியில் விளையாடுவது, அவர்கள் மனது அவர் கையில் இல்லா நிலையை உண்டுபண்ணுகிறது. எடுத்துக்காட்டாக போதை வஸ்துகளால் அல்லது லாட்டரி சீட்டு, பெண்ணிற்கு அடிமை, சூது அல்லது குடியை போன்ற ஒரு அடிமை ஆகிய காரணிகளை கேது உருவாக்குகிறார். முக்கியமாக இந்த நபர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் பன்னிரெண்டுக்கும் கேதுவுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு இருக்கும். இவர்களை சுலபத்தில் சரிசெய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் பாவத்தில் கேது இருந்தால் அவருக்கு பிறவி என்பது கிடையாது என்பர். நான் பார்த்த நிறையபேர் புத்திரதோஷம் அதாவது பிள்ளை பிறப்பு இருக்காது அல்லது ஒரு பகுதிக்கு பிறகு மனதை அடிமையாகக் கொண்டு செல்லவர்கள். அதற்கேற்ப தசா புத்திகளும் நடைபெற வேண்டும்.
அயன சயனத்தில் உள்ள கேது நிலைக்கு ஒரு உதாரண ஜாதகம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இவர் மனதை மந்தப்படுத்துமான விளையாட்டுக்கு அடிமை, சந்திரன், குரு, கேது தொடர்பு நினைத்து பார்க்கமுடியாத கடன் மற்றும் அவற்றால் நோயின் தாக்கம் அதிகம். தற்பொழுது கோட்சார குரு பார்வை சிறிது நன்மையை செய்கிறது.
ராசி கட்டம்
ஒருவர் சிறிது கர்மவினையால் ஏற்படும் பாவ செயல்கள் உடன் பிறக்கும் ஜாதகர், அந்த பாவ மூட்டை குறையும் அளவு நற்செயல்களில் ஈடுபடும்பொழுது அதனால் பிறவி என்பது இல்லாமல் போகும். அதேபோல் உங்கள் ஜாதகமும் அமையப்பெற்று இருக்கும். நிறைய ஜாதகத்தில் மோட்ச ஸ்தானம் என்று சொல்லப்படும் பன்னிரெண்டாம் பாவத்தில் கேது அமர்ந்தால், அவருக்கு திருமண பந்தத்தில் பற்றற்ற நிலை, வாரிசு இல்லாத நிலை அல்லது உயர்ந்த தொழிலதிபராக இருந்து பின்பு கடனால் வேலையில் பற்றற நிலை ஏற்படும். இந்த பற்றறற்ற நிலையில் ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து தப்பித்து துறவறம் அல்லது மனதை அடிமைப்படுத்தும் போதை அல்லது சூது என்கிற வாழ்க்கை போர்வையில் ஒரு தீவிர நிலைக்கு தள்ளப்படுவார். ஆன்மிக தேடல் மூலம் மட்டுமே ஒரு மனிதனை மறுபிறவி இல்லா நிலையை அடைவார்கள். அதேபோல் ஜாதகருக்கு அவரின் ஜெனன ஜாதகக்கட்டத்தில் 12ல் உள்ள கேதுவுடன், லக்கினத்தில் சுபர் அல்லது சுப பார்வை பெற்று மற்றும் 5,9 வலுப்பெற்றால் அவருக்கு பிறவி இல்லாமல் கடவுளின் பாதம் அடைவார்கள். ஒருவன் உயிர் பெறவும் அவன் கடவுளின் பாதம் அடையவும் கேதுதான் முக்கிய காரணி ஆகும்.
முக்கியமாக இன்று கோச்சாரத்தில் காலபுருஷ தத்துவப்படி கேது 9-ம் வீடான தனுசுவிற்கு பன்னிரெண்டில் அமர்ந்து உள்ளார். அவற்றால் ஒன்பதாவது பாவம் அதாவது ஆன்மிக வழிபாடுகள் சிறிது காலம் மாற்ற நிலையை ஏற்படுத்தியது. குருவும் கேதுவும் சேரும்போது அல்லது தொடர்பு பெரும்பொழுது மதப்பற்று கூடிய அளவில்லா ஞானத்தை பெறப்பட்டால் அனைத்து அசுபமும் விலகும்.
பாரம்பரிய ஜோதிடத்தை ஆராயும்பொழுது காலபுருஷ தத்துவத்தில் குழந்தை என்று கூறப்படும் ஐந்தாம் பாவத்தின் முதல் நட்சத்திரம் மகம் ஆகும். அது கேதுவின் நட்சத்திரம் ஒரு உயிரை உருவாக்கும் முக்கிய காரணி மற்றும் மரபணு தொடர்பு கொண்டது. கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் பிறந்தவர்கள் இந்த ஜாதகத்தை பல்வேறு கோணத்தில் ஆட்டுவிக்க முடியும். இந்த நட்சத்திரங்கள் நெருப்பு ராசியில் அமர்ந்துள்ளனர். எதையும் கடக்கும் தைரியம் கலந்து இருந்தால் வெற்றி பெறுவார்கள். எடுத்துக்காட்டாக ராமரை மனதில் கொண்டு தைரியமிக்க ஹனுமான் கேதுவின் நட்சத்திரமான மூலத்தில் பிறந்தவர். அதனால் அவர் கடின போராட்டத்திலும் ராமரின் மூல மந்திரம் தான் அவரை வலுவேற்றியது .
கேதுவின் அசுப காரகத்துவம் என்பது பற்றிய விளக்கம் பார்ப்போம். ஒவ்வொரு ஜாதகத்திலும் கேதுவின் சாரம் அவற்றின் உடன் சேரும் கிரகம் பொறுத்து செயல்கள் மாறுபடும். அவரின் தனி அசுப காரகத்துவம் என்றால் கிரிமினல் சிந்தனை அதனால் தவறுகள், திடீர் பொருள் முடக்கம், மனம் முடக்கம், மூலை செயலற்ற தன்மை, சூது, வஞ்சகம் வலையில் சிக்க வைத்தால், உணவை விஷமாக்கும், விஷ பூச்சிகளால் நோய், மரண பயம், புகையிலை, கஞ்சா போன்ற போதைக்கு அடிமை அவற்றால் நோய், மனம் அடிமையால் சித்த பிரம்மை, துர்நாற்றத்தால் தீராத நோய், போதைக்கு அடிமை, மாந்திரீகம், பாசத்துடன் இருக்கும் நபருடன் வெறுப்பு, ஈடுபாடற்ற விரக்தி ஆகும்.
அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள் அனைத்தும் கேதுவும் அவற்றோடு சேரும் கிரகமும் செயல்படுத்தும். அவரால் ஒரு கட்டாய திடீர் மாற்றத்தைக் கொண்டுவருவார். புதனுடன் கேது சேரும் பொழுது வழக்கு மற்றும் கடனுக்கும் தள்ளப்படுவார். குருவுடன் கேது சேரும் பொழுது உயர்வடைய செய்வார், ஆனால் அதே சமயம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்குக் கடனுக்கும் தள்ள செய்வார்.
முடிந்தவரை இவர்கள் கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்று. சில நேரங்களில் ‘ராகு கொடுப்பார் , கேது கெடுப்பார்’ என்ற பழமொழிக்கு ஏற்ப செயல்படும். இவர் நட்பு ராசியில் இருந்து சுபர் தொடர்பு பெற்றால் நன்மை பயக்கும். ஒரு சில மூல நூல்களில் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார் என்று கூறப்படுகிறது. இவற்றை ஒரு தனிப்பகுதியில் ஆராய்ந்து கட்டுரையாக வெளிவரும்.
ஆமென்ற கேதுதிசை வருஷம்யேழு
அதனுடைய புத்திநாள் நூத்திநாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனைப் புகலக்கேளு
புகழான அரசர்படை ஆயுதத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதிகாணும்
தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாகும்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப்பகையே - புலிப்பாணி
சிறு விளக்கம்: கேது பகவானின் திசை மற்றும் சுய புத்தி காலத்தில் புகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள் ஏற்படும், வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால் வியாதியும் நேரும், பொருட்சேதமும் அங்கத்தில் குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும், தான்வசிக்கும் நகரத்தில் பலவகைச் சூனியங்களும் உருவாகும், நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித் துன்பம் தருவதால் நன்மை நேராது என்று புலிப்பாணி தன் பாடலில் கூறினார்.
இன்னும் கேது இருக்கும் பல்வேறு பாவம் பற்றி ஆராய்ந்து சொல்லிக்கொண்டே போகலாம். எந்தக் கிரகமும் நல்லவர் அல்லது தீயவர் என்று வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. கேதுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிவனடியார்கள் வழிபாடு, ஹனுமான் மற்றும் விநாயகர் கடவுளுக்கு வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை செய்வது நன்று.
குருவே சரணம்.
ஜோதிட சிரோன்மணி தேவி
வாட்ஸ்ஆப்: 8939115647
மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com