ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்?

எல்லா மனிதர்களும் தமது வாழ்வில் எந்த ஒரு பிரச்னையும், கஷ்டமும், கவலையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஏங்குகிறோம்.
ஜோதிட ரீதியான பரிகாரங்களை எப்போது செய்ய வேண்டும்?

எல்லா மனிதர்களும் தமது வாழ்வில் எந்த ஒரு பிரச்னையும், கஷ்டமும், கவலையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்றுதான் ஏங்குகிறோம். ஆனால், எதிர்பாராத விதமாக நாம் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடும், ஒழுக்கத்தோடும் காரியம் ஆற்றினாலும் முடிவில் சில போது, சிலருக்கு எப்போதும் தவறாகவே நடந்து முடிந்து விடுகிறது. காரணம் தெரிவதில்லை.

இதிலிருந்து எல்லா வயதினரும், ஏன் அனுபவம் பெற்றிருந்தும் தவறுகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. நமது தகுதிக்கும், பண்புக்கும் மீறி நடைபெறும் அந்த செயல்கள் எதனால் என்பதனை அனைவரும் மனதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதற்குதான் ஜோதிடம் ஒரு நல்ல அறிவுரையைத் தருகிறது என்றால் அது மிகை ஆகாது.

ஆம்! சிலர் ஜோதிடம் நன்கு அறிந்து, அந்த மாயவித்தையிலிருக்கும் செய்தியை நம்பிக்கையோடு பின்பற்றி சரியான, மகிழ்வான வாழ்வினை அடைகின்றனர். சிலர் நினைக்கக்கூடும், கோயிலில் மணிக்கணக்கில் அமர்ந்து பூஜை செய்வதும், தம்மிடம் உள்ள பணத்தை வாரி இறைப்பதால், பிரச்னைகள் தீரும் என்று நினைத்துச் செயல்பட்ட பின்னரும், அதே போல் இருப்பதால் -அந்த நிலையே நீடிப்பதால், மனம் தளர்வதை காண முடிகிறது.

முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், பிரச்னை என்பது நமது வாழ்வோடு இணைந்திருப்பது தான், அதனை எவ்வாறு களைவது  என்பதுதான் நாம் எடுக்கவேண்டிய தீர்வாகும். எப்படி நெல்லின் மேல் தோலை (உமி) நீக்க முதலில் கதிர்களை அடித்து நெல்மணியாக்கி பின்னர் அதனை உரலில் லேசாக இடித்து பின்னர் முறத்தில் இட்டு அதனை காற்று வரும்போது அதற்கு எதிர்த்திசையில் புடைத்தால், உமி நீங்கி அரிசி மட்டும் கிடைக்குமோ, அதுபோலவே நமது பிரச்னைகளை எவ்வாறு, எப்போது நீக்கவேண்டும் என்பதைப் பற்றியே இக்கட்டுரை. (தற்போது அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்து விட்டதால், எளிமையாக நெல்லிலிருந்து உமியை நீக்கி அரிசி பெறுவது போன்று, சில எளிமைபடுத்தும் வழிகள் பல வந்து விட்டது, உண்மை தான்.)

ஜோதிடத்தை பொறுத்தவரை அனைத்துமே நேரம் / காலம். இதனை முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒருவர் பரிகாரம் செய்யவேண்டுமானால், அதனை செய்யும் காலம் அறிதல் முதன்மையானது. நிச்சயம் அது தேய்பிறையாக இருத்தல் அவசியம். மேலும் பாக்கியாதிபதி எனும் 9ஆம் அதிபதியின் தசை அல்லது புத்தியாக இருத்தல் வேண்டும். அல்லது சிலருக்கு யோகாதிபதியாக வரும் அதிபதியின் தசை அல்லது  புத்தியாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தாலும் அந்த கிரகங்கள், அவயோகி நட்சத்திர காலில் நிற்காமல் இருந்திடல் வேண்டும். இவை ஒரு சிலவே, நிச்சயம் ஜோதிடரை நாடி பலன் பெறுவது அவசியம் ஆகும். 

பொதுவாக ஒரு எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கிறது, ஒரு ஜோதிடர் சொன்னால், எல்லோருக்கும் நடந்து விடுகிறது ஆனால் எனக்கு மட்டும் ஏனோ சரியாக நடப்பதில்லை என கூறுவர். இதனை காரணம் காட்டி பல ஜோதிடரை அணுகியும் விடிவு காண முடியாமல் தவிப்போரும் உண்டு. 

ஜோதிடர் கூறிய சரியான நேரத்தை, சரியான முறைப்படி செய்தால், நிச்சயம் பலன்கிட்டும். ஐயம் வேண்டாம். முதலில் ஜோதிடத்திலும், ஜோதிடர் மீதும், நம் பிரச்னை தீரும் என்பது, நம்பிக்கை கொண்டு செய்தால், நிச்சயம் வெற்றி தான்.

எந்த ஜோதிட பரிகாரம் செய்வதானாலும் பின்வருவனவற்றை நிச்சயம் பின்பற்றினால், பலன் நிச்சயம் கிட்டும்..

1. எல்லா காலத்திலும் எல்லா பரிகாரமும் வேலை செய்யாது. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தீர்வும், அது செய்யும் நேரமும் , காலமும் நிச்சயம் தேவை. தாம் அறிந்த ஜோதிடர்களில், சரியான ஜோதிடரின் அறிவுரைகளைக் கேட்டு நடந்தால், நிச்சயம் சரியான பலன் கிட்டும்.

2.  ஜோதிடர் கூறும் ஒரு பரிகாரம், ஒரு தனி நபருக்கு மட்டுமே. இன்றைய காலத்தில் நான் பார்க்கிறேன், பிரச்னை தீர்ந்தவர் ஒருவர் கூறும் பரிகாரத்தை கேட்டு பலரும் அதனையே பின்பற்றுகின்றனர். அது பலன் நிச்சயம் கிட்டாமல் போகும்.

3. எந்த பரிகாரமாக இருப்பினும், அதனை பிரச்னைக்குரியவரே செய்திடல் வேண்டும். அவருக்காக மற்றவர் செய்வதினால், எந்த பலனும் கிட்டாது. நிச்சயம் பணம் மற்றும் நேரம் விரயம் தான்.

4. உடனடி பலன் தரும் என்று எந்த பரிகாரமும் இல்லை, நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்யும், பரிகாரம் பலன் தராமல் போகாது. பலன் பெறும் வரை, நிச்சயம் அமைதி காத்தல் அவசியம்.

5. எந்தவகையான பரிகாரமாயினும் பிரச்னை நிச்சயம் நீங்கும், நல்லதே நடக்கும்  என மனதில் முழு நம்பிக்கையுடன் செய்வது மட்டுமே பலனைப் பெற்றுத் தரும்.

6. ஜோதிடரும், ஜோதிட பரிகாரங்களும் ஒருவரின் பிரச்னைக்கு அது செல்லும் வழியை / இலக்கை மாற்றி அமைத்திடாது என்பதனை அறிந்திடல் வேண்டும். அதனை ஏற்று நடத்துபவரின் எண்ணமும், பொறுமையும், பரிகாரம் செய்யும் காலமும் / நேரமும் மட்டுமே அதனை தீர்மானிக்கும். 


தொடர்புக்கு :  98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com