மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

News image
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் ஆறுமுக சாமிக்கு நடைபெற்ற லட்சார்ச்சனை. 
Updated On :20 அக்டோபர் 2017, 10:40 pm

தினமணி

திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய கந்த சஷ்டி விழா லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது.
முதல் நாள் சஷ்டி விழாவில் காலை 10 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை, லட்சார்ச்சனை நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு திருக்கோயில் நாதஸ்வர வித்வான்கள் வழங்கிய நாதஸ்வர இன்னிசை கச்சேரியும், இரவு 7 மணிக்கு விஷ்வ நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபாடு செய்தனர். 
இரண்டாம் நாளான சனிக்கிழமை மூலவருக்கு பட்டு அலங்காரமும், 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சந்தனக் காப்பு அலங்காரமும், 23-ஆம் தேதி திருவாபரண அலங்காரமும், 24-ஆம் தேதி வெள்ளிக் கவச அலங்காரமும், 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மலைக்கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில், சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற உள்ளது.
26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளி மண்டபத்தில், முருகப் பெருமானுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் மலைக்கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, பக்தி பாடல்கள் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, தக்கார் வே. ஜெயசங்கர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

குமர கோட்டத்தில்...

காஞ்சிபுரம் குமர கோட்டம் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஒன்றான காஞ்சிபுரம் குமர கோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். 
இந்த ஆண்டுக்கான, கந்த சஷ்டி பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 27-ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கவுள்ளன. 
இதற்காக, நாள்தோறும் பல்லக்கு உற்சவம், கந்தசஷ்டி, கந்தபொடி வசந்தம், ஆடு வாகனம், மான் வாகனம், அன்னவாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் உற்சவர் பவனி நடைபெறும். 
தொடர்ந்து சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளன. 
இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கந்தபுராணச் சொற்பொழிவு நடைபெறுகிறது.

வல்லக்கோட்டையில்...

பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் பழைமை வாய்ந்த வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். 
அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா வெள்ளிக்கிழமை வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதையடுத்து மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.