திருத்தணி முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பக்தர்களின் வருகை ஆயிரக்கணக்கில் இருந்ததால், அவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டியிருந்தது.
முருகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அத்துடன் கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை என்பதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு பிற இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை காலை முதலே வருகை தந்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் தலைகளாக காட்சியளித்தது. அதிகாலை நேரம் பனிப்பொழிவு இருந்தபோதிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் கோயிலில் காத்திருந்தனர். பொதுவழி தரிசனத்தில் நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்திருந்தனர். இந்த வரிசையில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டியிருந்தது.
அதேபோல் மலைக்கோயில் நிர்வாகத்தின் ரூ. 25, 100, 150 மதிப்பிலான சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகளும் , பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் அதிக அளவில் விற்பனையாகின. சிறப்பு தரிசன வழியில் சென்ற பக்தர்கள் மூலவரை சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
முருகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
பக்தர்கள் கூட்டத்தை திருத்தணி டிஎஸ்பி சேகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒழுங்குபடுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










