தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வரதராஜப் பெருமாள் பிரம்மோற்சவம் நிறைவு

வரதராஜப் பெருமாள் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா செவ்வாய்கிழமை நிறைவடைந்தது. 

News image
அனந்த சரஸ் குளத்தில் நடந்த தீர்த்தவாரி உற்சவம். 
Updated On :5 ஜூன் 2018, 8:21 pm

DIN

வரதராஜப் பெருமாள் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா செவ்வாய்கிழமை நிறைவடைந்தது. 
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜசுவாமி எனும் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, 3ஆம் நாளான 29ஆம் தேதி கருட சேவையும், 7ஆம் நாளான ஜூன் 2 ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், நாள்தோறும் பகல், இரவு வேளைகளில் அன்னப் பறவை, யானை, ஹனுமந்த, யாளி, குதிரை, சேஷன் உள்ளிட்ட விசேஷ வாகனங்களில் திருவீதியுலா வந்த பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு உற்சவம் திருவீதியுலா நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து, வரதராஜப் பெருமாள் கோயில் அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து புனித நீராடினர். தொடர்ந்து, தாயாருடன் பெருமாள் இரவு வேளையில் புண்ணியகோடி விமான வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
நிறைவாக, 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை துவாதசாராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம், துவஜா அவரோஹணம் எனப்படும் கொடியிறக்க உற்சவத்துடன் வரதரின் வைகாசிப் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது. இந்த 10 நாள்களும் காஞ்சிபுரம் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.