சைவ சமய வரலாற்றில் காரைக்கால் அம்மையார் வரலாறு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.
புனிதவதியார் என்ற இயற்யெர் பெற்ற அம்மையார் பரமதத்தனை மணந்து வாழ்ந்த பொழுது, இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிட்டது. பரமதத்தன் புனிதவதியாரை தெய்வ அம்சமாகவே கருதினான். எனவே புனிதவதியார் இல்லற வாழ்விளை துறக்க, பேய் வடிவினை தனக்கு தருதல் வேண்டும் என இறைவனிடம் வேண்டினார்.
இறைவன் அருளால் 'அற்புதத்திருவந்தாதி' திருவிரட்டை மணிமாலை என்ற இரண்டு பதிகங்களை அளித்தருளினார். இறைவனைக்கண்டு வணங்கி போற்ற கைலாயம் சென்றார். புனிதமான கைலாய மலையை காலால் மிதித்து நடக்கக்கூடாது என எண்ணித் தலையால் நடந்து சென்றார். காரைக்கால் அம்மையாரின் இறை பக்தியைக் கண்ட இறைவன் அம்மையே என அழைத்துப் போற்றியதை பெரியபுராணம் கூறுகிறது.
"வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பினறை
அருகு வந்தனைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்
(பாடல் 1774)
மகிழ்ந்த இறைவனிடம் நீ ஆடும்பொழுது உனது திருவடியின் கீழ் இருட்ககும் பேறு வேண்டும் என வேண்டிப் பெற்றார். மேலும், ரத்னசபை என அழைக்கப்படும் திருவாலங்காட்டில் ஆடும் ஊர்த்துவ நடனத்தை கண்டு பாடியவண்ணம் இரு என இறைவனால் அருள் பெற்றார். திருவாலங்காடு திருத்தலத்திற்கும் தலையால் நடந்துபோய் "மூத்தத் திருப்பதிகத்தையும்" பாடி அருளினார்.
இறைவன் ஆடவல்லானாக காட்சிதரும் சிற்பங்களில் இறைவன் காலடியின் கீழ் எலும்பு உருவம் கொண்டு காரைக்கால் அம்மையார் தானம் இடுவதைக் காணலாம். அம்மையாரை செப்புத்திருமேனிகளிலும் காணலாம். கங்கைகொண்ட சோழபுரம், திருவாலங்காடு, மதுரை போன்ற பல திருக்கோயில் சிற்பங்களில் காரைக்கால் அம்மையாரைக் கண்டு வணங்கலாம்.
அவரது வரலாற்றில் கைலை மலையில் காலால் மிதிக்காமல் தலையால் நடந்துசென்றதாக பெரிய புராணம் கூறுகிறது.
"கைலை வெற்பின் பாங்களைந் தாங்கு காலின்
நடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்
(பாடல் 1771)
பெரியபுராண வரலாற்றை தொடர் சிற்ப வடிவங்களாக கூறும் தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் யானை - மான் - பாம்பு - புலிகள் நடுவே அம்மை பேய் வடிவம் கொண்டு தலையால் நடந்து செல்வது போன்று சிற்பம் காணப்படுகிறது.
- கி. ஸ்ரீதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.