இரத்த சம்பந்தமான வியாதிகளை நீக்கும் அற்புத திருத்தலம்!

சப்தகன்னிகாபுரம் எனப்படும் எழுமகளூர் அருள்மிகு அமிர்த நாயகி சமேத நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில்....
இரத்த சம்பந்தமான வியாதிகளை நீக்கும் அற்புத திருத்தலம்!

சப்தகன்னிகாபுரம் எனப்படும் எழுமகளூர் அருள்மிகு அமிர்த நாயகி சமேத நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள கொல்லுமாங்குடிக்கு முன்னதாக வலதுபுற சாலை ஒன்று திரும்புகிறது அதில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் பில்லூர் அதன் அடுத்த ஊராக எழுமகளூர் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ தான்.

சப்த கன்னிகைகளான, பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் குடிகொண்டு, தேடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் நல்லாசிகளை அள்ளி வழங்கும் அற்புத திருத்தலம் இது. 

ஏழு-மகள்-ஊர் என்பது திரிந்து எழுமகளூர் எனப்படுகிறது. மகிஷாசுரனை அழித்த பாவம் தீர இறைவனை சப்தகன்னிகள் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திருத்தலத்தின் மண் மிகச் சிறந்த மருந்தாகச் சொல்லப்படுகிறது. 

இந்த இறைவன் நஞ்சையே அரு மருந்தாக்கியதால், அவரை வேண்டிக்கொண்டு இங்குள்ள மண்ணைப் பூசிக்கொள்ளும் ஒருவருக்கு இரத்த சம்பந்தமான வியாதிகள் அனைத்தும் நீங்கும் என்பது வியக்கத்தக்க உண்மை.

விஷத்தின் வடிவமான கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இந்தத் தலத்தில் வீற்றிருந்த காரணத்தால் இந்தக் கோயில் குளத்து மண் அருமருந்தாகப் பயன்படுகிறது.

மேலும் இங்குள்ள இறைவனுக்கு சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை 'என்னும் மருந்தை அபிஷேகம் செய்வித்து அதனை சாப்பிடுவோருக்கு சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு ''ராஜ வைத்தியர் 'என்ற பெயரும் உண்டு.

இக்கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்து நீரில் குளித்து, இறைவனை வழிபட்டு இம்மண்ணைப் பூசிக்கொள்வதால் ரத்த தொடர்பான வியாதிகள் தீர்வதாக சொல்கின்றனர். கோயில் சிறிய கோயில் தான். இறைவன் கிழக்கு நோக்கி நஞ்சுண்டேஸ்வரராகவும், இறைவி தெற்கு நோக்கிய அமிர்த நாயகியாகவும், அமிர்தமும் நஞ்சும் அருகருகே உள்ளதைக் காணலாம்.

இறைவன் கருவறை அருகில் விநாயகர் முருகன் உள்ளனர். சப்தமாதர் சிலைகள் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு வடக்கு நோக்கி உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். சண்டேசர் உள்ளார். பிற தெய்வங்கள் இல்லை. பழம்பெரும் கோயிலின் கிடைக்கப்பெற்ற மிச்சம் என்றே சொல்லலாம். இவ்வாறு தீர்த்தமும், மண்ணும் சிறப்பு பெற்ற இத்தலத்தை நன்கு பயன்படுத்தி வாழ்வோமாக.

- கடம்பூர் விஜயன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com