இன்று மஹா சனிப்பிரதோஷம்: சிவனை வழிபட மறக்காதீங்க!

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை
இன்று மஹா சனிப்பிரதோஷம்: சிவனை வழிபட மறக்காதீங்க!
Published on
Updated on
2 min read


சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவதே சிறந்த பலனைத்தரும். 

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்தத் திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் மஹா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்து மந்திரமான (சிவாய நம) என்று சொல்லி வழிபடலாம்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் 'சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் 'மகாப் பிரதோஷம்" என்று சொல்லப்படுகிறது.

சாதாரண பிரதோஷ வேளைகளில், சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று வழிபடும்போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகர பெருமானை ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை கூறியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாகத் தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

பிரதோஷகால அபிஷேக முறையில் பால் அபிஷேகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும். மேலும் ஈசனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அனைத்து அபிஷேகமும் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

இன்று மாலை 4.30 முதல் 6.00 மணி வரை நடைபெறும் பிரதோஷ பூஜையில் பங்கேற்று ஈசனின் பூரண அருளைப் பெறுவோமாக....!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com