ஜாதகத்தில் காணும் யோகங்கள் உண்மையிலேயே பலன் தருபவைகளா..! (பகுதி 2)

பஞ்ச மகா புருஷ யோகம் என்றால் என்ன? அவை ஒரு ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும்?
ஜாதகத்தில் காணும் யோகங்கள் உண்மையிலேயே பலன் தருபவைகளா..! (பகுதி 2)
Updated on
2 min read

(இந்த கட்டுரை 04.05.2019 அன்று வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சியே ஆகும்) 

பஞ்ச மகா புருஷ யோகம் 

பஞ்ச மகா புருஷ யோகம் என்றால் என்ன? அவை ஒரு ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும்? எந்த லக்கின காரருக்கு இந்த யோகங்கள் வாய்க்கும்? யோகம் உள்ளவருக்கு நிஜத்தில் பலன் கிட்டுமா? / யோகம் பங்கம் ஆகி பலன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதா? எந்தெந்த காலத்தில் இந்த யோகங்கள் ஒரு ஜாதகருக்கு வாய்க்கும்.? 

இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்த கட்டுரையில் விவரமாக அறிய வாய்ப்பு. இந்த கட்டுரைகள், சாதாரண / பாமர / ஜோதிடம் பற்றி சிறிதும் தெரியாதவர்களுக்குக் கூட சற்றே படிக்க வேண்டும் எனும் ஆசையைத் தூண்டவும், நமது வாழ்க்கையைப் பற்றி நாமே சிறிது அறிந்துகொள்ளவும் அளிக்கப்படுகிறது. 

நமது ரிஷிகளும், முன்னோர்களும் - மனித சமுதாயத்துக்குத் தந்த ஒரு மிகப்பெரிய அளப்பரிய சொத்து என்றால் அது ஜோதிட சாஸ்திரம் என்றே கூறலாம். இதனை ஓரளவாவது அறிந்துகொண்டால், நமது வாழ்வின் ஏற்ற இறக்கங்களின்போது நாம் வெற்றி நடைபோட ஏதுவாகும் என்றால், அதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. 

யோகத்தில் சிறந்தது எது?

யோகங்களில் முதன்மையானது, சிறப்பானது மற்றும் உயர்வானது, ராஜ யோகம் என்பர். ஆனால், அது அபூர்வமாகக் கோடியில் ஒருவருக்கு என்ற அளவில் தான் அமையும். 

ராஜ யோகம் என்பது ராஜாவாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, செல்வமும், செல்வாக்கும், கௌரவமும், சமுதாய அந்தஸ்தும், பணியாட்கள், வாகன வசதி, நூதன வீடு, பசு, கன்று பால் பாக்கியத்தோடு வாழ்வதே ராஜா யோகம் தான். 

பொதுவாக ஒரு பேச்சு நம்மிடையே உண்டு. அதாவது, அவனுக்கென்னடா, ராஜயோகம். அட்டகாசமா இருக்கான், அமோகமா இருக்கான் என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். 

ஆனால், ராஜயோகம் அளவு, காலம், எல்லைக்கு உட்பட்டது. தன்னிலை மாறும். பணத்துடன் கூடிய அதிகாரம், அடுத்தவரை ஆளுமை செய்யும் தன்மை கொண்டது. இது சில போது கடந்தும் அல்லது இல்லாமலும் போகும். 6, 8, 12ல் உள்ள யோகம், வம்சாவளிக்கு அல்லது பிள்ளைகளுக்கான யோகம். ராஜயோகம் தரும் கிரகங்களின் தசை, புத்தி காலங்களில் ராஜயோகத்தை, ஒரு ஜாதகர் பெறுவார். ராகு, கேதுக்களுடன் சேர்ந்த கிரகம், ராஜயோகத்தைத் தரும் போது, ஊழல், தவறான பாதை போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து, ராஜயோகத்தை அடையச்செய்கிறது. 

1. பஞ்ச மகா புருஷ யோகம் என்றால் என்ன ?

நவக்கிரகங்கள்  3 வகைப்படும். ஒன்று ஒளி கிரகங்கள், அதாவது சூரியன், சந்திரன். இரண்டாவது, பஞ்சபூத கிரகங்கள், அதாவது செவ்வாய் - நெருப்பு கிரகம், புதன் - காற்று கிரகம், குரு - ஆகாய கிரகம் , சுக்கிரன் - நீர் கிரகம் மற்றும் சனி - நிலக்கிரகம், மூன்றாவது, நிழல் கிரகம், அதாவது ராகு, கேது. இவற்றுள், பஞ்ச பூத கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவை ஐந்தும் தான் பஞ்சமகா புருஷ கிரகங்கள் என்றழைக்கப்படும். 

மற்ற எல்லா யோகங்கள் ஏற்படக் காரணமானவர்களே இவர்கள் தான். சூரியனும் சந்திரனும் எந்தவிதமான யோகங்களையும் தனியே அளிப்பதில்லை. இவர்கள் இருவரும் இணைந்திருந்தால், அமாவாசை என்றும், எதிர் எதிரே 180 பாகையில் நின்றிப்பின் பௌர்ணமி அவ்வளவே தான். ராகுவும், கேதுவும் யோக பங்கம் ஏற்படுத்தும் கிரகங்கள் ஆகும். ஒருவருக்கு கிடைக்கும் யோகம் எதுவாயினும் அந்த கிரகங்களுடன் இணைந்த ராகு / கேதுக்கள்; மற்ற கிரகங்களால் கிடைத்த / அளித்த யோகத்தையும் அழித்துவிடும். (பங்கமாக்கிவிடும்)

2. பஞ்ச மகா புருஷ யோகம் ஒரு ஜாதகருக்கு என்னென்ன பலன்களைத் தரும்?

பஞ்ச மக புருஷ யோகம், ராஜா யோகம் போல் அல்லாமல், எல்லை, காலம், அளவு கிடையாது. வாழ்நாள் முழுதும் பலன் கொடுக்கும். இந்த யோகத்தின் தன்னிலை மாறாது, ஆனால் அளவு கூடும் அல்லது குறையும். மேலும் இந்த பஞ்சமகா புருஷ யோகமானது, ஜாதகரை மட்டுமே சார்ந்தது. இந்த யோகம், கோச்சாரத்திலும், தசா, புத்தி காலங்களிலும், ஜாதகர் யோகம் பெறுவார். ராகு / கேதுவுடன் சேர்ந்தாலும் இந்த யோகம் ஜாதகரை தவறான பாதைக்கோ அல்லது யோகத்தை தடுக்கவோ முடியாது. 

3. எந்த லக்கின காரருக்கு இந்த யோகங்கள் வாய்க்கும்? 

கீழ்க் காணும் அட்டவணையின் மூலம் எந்தெந்த லக்கின காரர்களுக்கு, பஞ்ச மகா புருஷ யோகம் கிட்டும் என அறிந்து கொள்ளலாம். இதன் விரிவான செய்தியை அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம். 

அடுத்த கட்டுரைகளில், எந்தெந்த பஞ்சமகா புருஷ யோகம் என்னென்ன பலன்களைத் தரும் என்பதனையும், ஒவ்வொரு லக்கின / ராசிக்காரர்களுக்கும் அந்த கிரகங்கள் எந்தெந்த பாவங்களில் இருந்தால் யோகம் அளிக்கும் என்பதனையும் அட்டவணை மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். 

இந்த கட்டுரை, ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் யோகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, ஒரு சிறந்த பாதையாக அமையும் என நம்புகிறேன். சாயியின் பாதம் பணிந்து அமைகிறேன்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com