அஷ்டமியில் குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாதா? உண்மை என்ன?

ஒரு மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் 14 திதிகளும், தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது
அஷ்டமியில் குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாதா? உண்மை என்ன?

ஒரு மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் 14 திதிகளும், தேய்பிறைக் காலத்தில் 14 திதிகளும் என 28 நாட்கள் வருகிறது மீதம் இரண்டு தினங்களில் ஒன்று அமாவாசை  மற்றொன்று பௌர்ணமி என மொத்தம் 30 நாட்கள் என ஒரு மாதம் பூர்த்தியடைகிறது.

இத்திதிகளில் "அஷ்டமி திதியும்" ஒன்று. இந்த அஷ்டமி திதி சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் எட்டாவது தினமாக வருகிறது. பொதுவாக ஜோதிட  மற்றும் எண்கணித சாஸ்திரம் படி 8 என்பது சனிபகவானின் ஆற்றல் கொண்ட ஒரு எண்ணாகும். 

புராண, இதிகாசங்களின் படி சனி பகவான் ஒரு நீதி தேவன், அதனால் எவர் ஒருவர் சிறிய அளவு தீவினையை புரிந்திருந்தாலும், அதற்கான தண்டனையை உடனே வழங்கி  நீதியை நிலை நாட்டுபவர். இதன் காரணமாகவே சனிபகவானையும், அவரின் ஆற்றல் கொண்ட 8 ஆம் எண்ணையும் கண்டு பெரும்பாலானோர் கலக்கம் அடைகின்றனர்.  அப்படிப்பட்ட சனிபகவானின் தாக்கம் இந்த அஷ்டமி திதியில் ஏற்படுகிறது.

பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறைக் காலத்தில் வரும் எந்த ஒரு அஷ்டமி திதியிலும் சுபகாரியங்கள் செய்யப்படுவதில்லை. ஆனால் இறைவழிபாடுகள் செய்ய  வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி இரண்டுமே சிறப்பான நாட்களாகும்.

வளர்பிறை அஷ்டமியில் செல்வம் பெருக திருமாலின் இதயத்தில் வீற்றிருப்பவளான "லட்சுமியையும்", தேய்பிறை அஷ்டமியில் சனி பகவானின் தோஷத்தை நீக்க "பைரவர்"  வழிபாடும் செய்யலாம்.

அஷ்டமியில் பிறந்தவர்கள் குணாதிசயங்கள்

இத்திதியில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். பிறரின் துன்பம் கண்டு மனம் இரங்குபவர்களாக இருப்பார்கள். சுதந்திர உணர்வு அதிகமிருக்கும். நல்ல  ஆரோக்கியமான உடல் மற்றும் மனதினைப் பெற்றிருப்பார்கள்.

அஷ்டமி திதியில் குழந்தை பிறப்பது நல்லதா?

ஆவணி மாத அஷ்டமி திதியில் தான் “கிருஷ்ண பரமாத்மா” அவதரித்தார். அப்படி அவதரித்த கண்ணன் தன் சொந்த தாய்மாமனான கம்சனை வதம் புரிந்தார். இதன்  காரணமாகவே பெரும்பாலானோர் தங்களுக்கு அஷ்டமி திதியில் பிறக்கும் ஆண் குழந்தையால், அக்குழந்தையின் தாய்மாமனுக்கு ஆகாதென்று அஞ்சுகின்றனர்.

முதலில் கண்ணன் ஒரு தெய்வ அவதாரம், நாம் மனித அவதாரம் என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இப்படிப்பட்ட அமைப்பில் பிறந்த பெரும்பாலான  குழந்தைகளால் அவர்களின் தாய்மாமன்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் அனைவரும் சுகமாகத் தான் வாழ்கிறார்கள். 

ஆதலால் அஷ்டமி திதியில் ஆண், பெண் என எந்த குழந்தைப் பிறந்தாலும் எவ்வித பாதகமுமில்லை. அதையும் மீறிப் பாதிப்பு ஏற்படுவதாக அஞ்சுபவர்கள் பெருமாள்  கோவிலுக்குச் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து வர நலம் ஏற்படும்.

மனிதனின் ஆன்மாவுக்கும் விண்ணுலக நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டு இதைச் சித்தர்கள் அண்டமே பிண்டம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று  சொல்கிறார்கள். 

ஒரு ஒரு தித்திக்கும் நம் ஆன்மா தொடர்புகொள்கிறது. அமாவாசை தர்ப்பணம், பௌர்ணமி தரிசனம் மற்றும் தான தர்ம செயல்கள் எல்லாம் திதியுடன் சேரும்பொழுது  தெய்வத்தை அடைகிறது. 

தேய்பிறை புதன் கிழமை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும்  வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். 

ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது. வியாழன்  அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம்) தரும் தன்மை உடையது என்றும், வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளைத் தரும் என்றும் ஜோதிட நூல்கள்  சொல்கிறது.

பொதுவாக அஷ்டமி என்றால் கம்சனை வதம் செய்ய கிருஷ்ணன் பிறந்த தினம் என்றும், தாய் மாமனுக்கு ஆகாது என்றும் சிலர் சொல்வர். 108 அஷ்டமிக்கு அம்மை  அப்பனை (சிவ சக்தி) தரிசனம் செய்தவர்களைச் சனியும் அஷ்டம விதியும் ஒன்றும் செய்யாது அது விலகிச் செல்லும் என்று மகா முனிவர் அகத்தியர் சொல்கிறார்.

சனியின் சாபம், கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டமியில் சில விபத்துகள் நடக்கிறது. சிலருக்கு இரவு துக்கம் கெடுகிறது. சிலருக்குக் காரியத் தடைகள் வருகிறது  என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

அஷ்டமி அன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்யலாம்? 

அஷ்டமி அழிக்கும் தன்மை உடைய திதி அதனால் சண்டை துவங்க (போர்) காவல் துறைக்குச் செல்ல, தீய செயல்களைத் தடுக்க ஹோமம், பூஜைகள் செய்வது, கடன்  தொகையை அடைக்க அஷ்டமி திதி பயன்படும். இதை மையமாக வைத்து ஜோதிடர்கள் நல்ல காரியங்களை அஷ்டமியில் துவங்க வேண்டாம் என்பார்கள்.

நவமி திதி சுப திதி சரஸ்வதி தேவி ஹயக்ரீவரை குருவாக ஏற்ற திதி, வெள்ளியுடன் சேரும் நவமியில் சரஸ்வதி மிகவும் பலம் கொண்டு விளங்குகிறாள் என்று நூல்கள்  சொல்கிறது. 

அவசியமாக அஷ்டமியில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும், பயணம் செல்லவேண்டும் என்றாலும் விநாயகர்/துர்க்கை பாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து  பூஜை செய்து அதை கைகளில் வைத்துக்கொண்டு செயலில் இறங்கலாம். செயல் முடிந்தவுடன் அதை ஓடும் நீரில் சேர்த்துவிடவேண்டும்.

ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதைகள் உண்டு. மனிதர்கள் எப்பொழுதும் அஷ்டமி, நவமி திதியை விலக்கி மற்ற திதிகளில் யாகம், திருமணம் முதலான நல்ல  காரியங்களை நடத்தி வந்தனர். இதைப் பொறுக்காத அஷ்டமியும், நவமியும் சந்திரனிடம் முறையிட்டனர்.

"அடப்போங்கப்பா, உங்களுக்கு மட்டுமா பிரச்சனை!! எனக்கும்தான். அஷ்டமி நவமிகளில் நல்ல காரியம் செய்யாததானால் எனக்கும் சக்தி குறைந்துவிடுகிறது" என்று  புலம்பினான் சந்திரன். படைத்த பிரம்மாவிடம் சென்று கேட்டனர்.

"பிரம்ம தேவரே, எங்கள் இருவரையும் ஏன் மக்கள் கொண்டாடுவதில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம், ஏன் வேதங்களில் அஷ்டமி நவமியை சுப காரியங்களுக்கு  ஒதுக்கவில்லை?" என்று சரமாரியாகக் கேள்வி கேட்டனர். 

அதற்கு பிரம்மன், ஒரு காரணத்திற்காகவே இது வகுக்கப்பட்டுள்ளது என்றும், திருமாலிடம் இதைக் கேளுங்கள் என்று சஸ்பன்ஸ் வைத்து அனுப்பினார். நேராக திருமாலிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டனர். அதற்கு நாராயணர், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

அஷ்டமி, நவமி இந்த இரண்டு திதிகளும் மற்ற திதிகளை விட அதிக முக்கியத்துவம் பெறும் நாள் நெருங்கிவிட்டது என்றார். தேவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

திரும்ப புலம்பினர். "உங்கள் திதிகள் ஆகாதவைகள் தான், ஆனால் மக்களுக்கு அல்ல. அராஜகம் செய்யும் அரக்கர்களுக்கு. திரேதா யுகத்தில் நான் ராமாவதாரம்  செய்யப்போகும் நாள் நவமி திதியாகும்.  அன்று ராவனாசுரனின் அழிவு நிச்சயிக்கப்படும். 

அதேபோல் துவாபர யுகத்தில் நான் அஷ்டமி திதியில் கிருஷ்ணாவதாரம் செய்வேன். அன்று பிறந்து துஷ்ட கம்சனை வதைப்பேன். இந்த இரண்டு நாட்களும் ‘ராமநவமி’,’கோகுலாஷ்டமி’ என்று திதிகளாகிய உங்கள் பெயர் கொண்டே சிறப்பாகக் கொண்டாடப்படும்” என்று கூறினார் நாராயணர்.

அதே போன்று நிகழ்ந்தது. இதன் காரணம் மற்றைய நாட்களில் தனது நலத்திற்காகவே நல்ல காரியம் செய்யும் மனிதன் இந்த இரண்டு திதிகளிலாவது கடவுளை வணங்கட்டும் என்ற நோக்குடனே இது நிகழ்ந்தது.

மேலும் துர்க்காஷ்டமி, அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு சிறப்பானதாகும். 

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே..

ஆன்மீக வாழ்க்கைக்குப் புராணங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

- தொகுப்பு: கோவை ச. பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com