ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் மினி தொடர் - பகுதி 5. நரிக்குடி சிவன்கோயில்

திருவாரூர், நீடாமங்கலம் வட்டத்தில் உள்ளது நரிக்குடி சிவன்கோவில். தேவர்களைக் காக்க ஆலகால..
ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் மினி தொடர் - பகுதி 5. நரிக்குடி சிவன்கோயில்
Updated on
2 min read


திருவாரூர், நீடாமங்கலம் வட்டத்தில் உள்ளது நரிக்குடி சிவன்கோவில். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது.

பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டுத் திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன. அவையே அஷ்டதிக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும் பெற்றார்கள்.

ஆலங்குடி கோயிலின் தென் திசையில் அமைத்திருக்கும் ஊர் நரிக்குடி. நெறிக்குடி என அழைக்கப்பட்ட ஊர் தற்போது மருவி நரிக்குடி ஆனது. தென்திசை யமனுக்குரியதல்லவா அதனால் ஆலங்குடியின் தென்திசையில் உள்ள இத்தலத்தில் யமன் ஓர் லிங்கம் பிரதிட்டை செய்தும் ஓர் தீர்த்தம் உருவாக்கியும் வழிபாட்டு நற்பேறுகள் பெற்றான்.

ஆலங்குடி நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் 4 கி.மீ. சென்று இடதுபுறம் திரும்பி 1 கி.மீ. தூரம் சென்றால் நரிக்குடியை அடையலாம். இந்த யம தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோருக்கு யமபயம் போகும், பாவம் குறைந்து புண்ணிய கணக்கு அதிகரிக்கும். இத்தல தீர்த்தத்திற்குக் கண்டகி தீர்த்தம் எனும் பெயரும் உள்ளது. பழமையான கோயில் சிதிலமடைந்ததால் புதிய கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இறைவன் யமனேஸ்வரர் கிழக்கு நோக்கியும் அம்பிகை யமனேஸ்வரி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

கோட்டத்தில் தென்முகனும் லிங்கோத்பவரும், பிரம்மனும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார். காலை மாலை இருவேளை மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் சுற்றுச் சுவர் ஏதும் இல்லை அதனால் கம்பி கதவுகளின் வழியே இறைவனை எந்நேரமும் தரிசிக்கலாம். கும்பகோணம் நீடாமங்கலம் சாலையில் ஆலங்குடியைக் கடந்தவுடன் 2 கி.மீ தூரத்தில் நரிக்குடி எனும் நிறுத்தம் உள்ளது.  அதில் இறங்கி கிழக்கில் 1 கி.மீ.தூரம் கிழக்கில் சென்றால் நரிக்குடி உள்ளது. 

முற்றிலும் சிதிலமடைந்திட இக்கோயிலைப் புதிதாய் கட்டியுள்ளனர். இக்கோயிலின் தென்புறம் பெரிய குளம் உள்ளது. இக்குளத்திற்கு கண்டகி தீர்த்தம் எனப் பெயர். 

இறைவன் - யமனேசுவரர் 

இறைவி - யமனேசுவரி

யம பயம் போக்கும் தலம் இதுவாகும். அமாவாசை, பௌர்ணமி, சதய நட்சத்திரம், தசமி நாட்களில் இக்குளத்தில் நீராடி விளக்கேற்றி வழிபடுவோருக்கு மிருத்யுஞ்சய சக்தி கிட்டும் என்பது ஐதீகம்.

வழிபடும்போது நாம் சொல்ல வேண்டிய மந்திரம்

க்ருதாந்தம் மகிஷாரூடம் 

தண்டஹஸ்தம் பயானகம் காலபாஷதரம்

க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷின திக்பதிம் 

- கடம்பூர் விஜயன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com