ரத சப்தமி விரதம் 2020: நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழ சூரியனை வழிபடவும்

சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர். தை மாதம் வளர்பிறையில் 
ரத சப்தமி விரதம் 2020: நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழ சூரியனை வழிபடவும்

நாளை சனிக்கிழமை ரத சப்தமி திருநாள். சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள். 

சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர். தை மாதம் வளர்பிறையில் ஏழாம் நாள் சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடுகிறோம். இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர். 

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.  இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும்.

ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து காலை 6 மணி முதல்  7.30 மணிக்குள் நீராடவேண்டும். 

தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். 

இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

முதலில் ரதசப்தமி என்றால் என்ன என்ன?
பூமி சற்றே ( 23.5 *) சாய்ந்த நிலையில் தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. நாம் ரயிலில் பயணிக்கும்போது, நாம் நிலையாக இருப்பது போலவும் வெளியே மரம் மலை முதலானவை ஓடுவது போல மாயத்தோற்றம் ஏற்படுவது போல பூமி சுழன்றாலும் சூரியன் நகர்வது போன்ற மாயத்தோற்றம் உண்டாகிறது. இப்படியான சூரியனின் பயணம் ஆறுமாதம் வடக்கு நோக்கியும் அடுத்த ஆறுமாதம் தெற்கு நோக்கியும் இருப்பதாக உணர்கிறோம். 

வடக்கு நோக்கிய பயணம் உத்தராயணம் ஆகும். அதாவது தெற்கே மகர ரேகையிலிருந்த சூரியன் வடக்கேயுள்ள கடக ரேகை நோக்கி பயணிக்கும் காலம் உத்தராயணம் ஆகும். மேல்நாட்டினர் கணக்குப்படி மகர ரேகையில் இத்திருப்பம் நடைபெறுகிறது !! இந்துக்கள் ஐதீகப்படி தைமாதம் முதல் நாளன்றே உத்தராயணம் துவங்கி விட்டாலும்  உண்மையிலேயே சூரியனின் ரதம் தைமாத வளர்பிறை சப்தமி திதியன்று தான் திரும்புகிறது. இதனால்தான் இந்த சப்தமி திதிக்கு தனிச்சிறப்பு. 

அன்றைக்கு ஏன் எருக்கிலை வைத்து குளியல்  செய்ய வேண்டும்?
மகாபாரதப்போரின் பத்தாம் நாள் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்ட கௌரவ சேனாதிபதி பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் சாய்கிறார். அந்நேரம் தட்சணாயனம். தட்சணாயனத்தில் இறந்தால் முக்தி (மோட்சம்) கிட்டாது. பீஷ்மருக்கு அவர் விரும்பும் நேரத்தில் உயிர்விடும் வரம் உண்டு. எனவே அவர் உத்தராயணத்தில் உயிரை விட விரும்புகிறார். ஆனால் தைமாதம் பிறந்து உத்தராயணம் துவங்கியும் கூட அவர் உயிர் பிரியவில்லை. பீஷ்மரை உடல் வேதனையுடன் மனோவேதனையும் வாட்டுகிறது. தன்னைக்காண வந்த வேத வியாசரிடம் தனக்கு ஏனிந்த வேதனை எனக் கேட்கிறார். 

அதற்கு வியாசர் ‘ ஒருவர் தானாக செய்யும் துர்செயல் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் ஒரு துர்செயல் நடக்கும்போது அதை தடுக்க முடிந்தவர் அப்படி தடுக்காமல் இருப்பதும்’ என்கிறார். பீஷ்மருக்கு புரிகிறது. அன்று அஸ்தினாபுரத்து அரசவையில் பாஞ்சாலி இழுத்துவரப்பட்டு துகிலுரியப்பட்ட போது செயலற்று வாளாவிருந்த பாபம் தன்னை சுற்றியுள்ளதை உணர்கிறார். 

இந்த பாபம் அகல ஏதும் பிராயச்சித்தம் உண்டா என வியாசரை கேட்கிறார். ‘பாபங்களை பொசுக்கும் சக்தி சூர்ய சக்தியே. சூர்யனுக்கு அர்க்கன் என்று இன்னொரு பெயருமுண்டு. அர்க்கனுக்கு உகந்தது அர்க்க பத்திரம் என்ற எருக்கிலை. சூர்யசக்தி முற்றிலும் எருக்கிலையுள் அடங்கியுள்ளது ‘ எனக்கூறிய வியாசர் தான் கையுடன் கொணர்ந்த எருக்கிலைகளால் பீஷ்மரின் தலை, கண்கள், வாய், கைகள் மற்றும் கால்கள் ஆகிய அங்கங்களை அலங்கரிக்கிறார். பீஷ்மரின் பாபங்கள் பொசுக்கப்பட்டு, அவரது உடல்,மன வேதனைகள் அகன்று நிம்மதியாக உயிர்விடுகிறார்.

சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம்.

ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் ரத சப்தமி நன்னாள். 

சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம். 

முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார். 

இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம்.

*ஓம் சூர்ய தேவாய நமக...*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com